நாடே எதிர்பார்க்கும் முதல் மாருதி எலெக்ட்ரிக் காரின் விலை... அறிவிப்பதற்கு முன் இணையத்தில் கசிந்த தகவல்!
மாருதி சுஸுகி (Maruti Suzuki) நிறுவனத்தின் முதல் முழு எலெக்ட்ரிக் காரான இ-விட்டாராவின் விலை, எக்ஸ்-ஷோரூம் மதிப்பில் ரூ.24.79 லட்சம் என நெக்ஸா டீலர்ஷிப் (Nexa Dealership) ஒன்றின் இணையதளத்தில் குறுகிய நேரத்திற்குப் பட்டியலிடப்பட்டது; பின்னர் நீக்கப்பட்டுவிட்டது. இருப்பினும், அந்த குறுகிய நேரத்தில் எடுக்கப்பட்ட ஸ்கிரீன்ஷாட்கள் (Screenshots) சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன. இதுதொடர்பான கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
இதுகுறித்த விபரங்களை பார்ப்பதற்கு முன்னர், நெக்ஸா டீலர்ஷிப் என்றால் என்ன என்பதை பார்ப்போம். நெக்ஸா என்பது மாருதி சுஸுகியின் விலைமிக்க பிரீமியம் தரத்திலான கார்களை விற்பனை செய்யும் டீலர்ஷிப் ஷோரூம் (Showroom) பிரிவாகும். முதல் மாருதி சுஸுகி எலெக்ட்ரிக் காரான இ-விட்டாரா இதன் வாயிலாக தான் விற்பனை செய்யப்பட உள்ளது.

இந்தக் காரின் அறிமுகத்திற்கு முன்னரே, ஒரு ஸ்கிரீன்ஷாட் இ-விட்டாராவின் டாப்-ஸ்பெக் ஆல்ஃபா (Alfa) வேரியண்டின் விலையை வெளிப்படுத்தி உள்ளது. அதன்படி பார்க்கும்போது, இ-விட்டாரா ஆல்ஃபா காரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.24.79 லட்சமாக நிர்ணயிக்கப்பட உள்ளது. இது, இ-விட்டாராவின் அதிகப்பட்ச விலையாக இருக்கும். விலை குறைவான ஆரம்ப நிலை வேரியண்ட்களின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் (Ex-Showroom Prices) இதில் பாதி ரூ.12 லட்சம் என்கிற அளவில் நிர்ணயிக்கப்படலாம்.
புதிய மாருதி சுஸுகி இ-விட்டாரா, எலெக்ட்ரிக் வாகனங்களுக்கென பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட தளத்தில் கட்டமைக்கப்பட்டுள்ளது. இந்தத் தளம், டொயோட்டா (Toyota) நிறுவனத்தின் வரவிருக்கும் புதிய இ-பெல்லா (Ebella) எலக்ட்ரிக் எஸ்யூவி காருக்கும் அடிப்படையாக அமைகிறது. ஆதலால், இ-பெல்லா ஆனது இ-விட்டாராவின் பேட்ஜ்-இன்ஜினியரிங் செய்யப்பட்ட பதிப்பாகும்.

இ-விட்டாராவில் இரண்டு பேட்டரி பேக் ஆப்ஷன்கள் கிடைக்கும். அவை 49 kWh மற்றும் பெரிய 61 kWh யூனிட் ஆகும். இரண்டுமே முன் சக்கரங்களுக்கு ஆற்றலை வழங்க காரின் முன்பக்கத்தில் பொருத்தப்பட்ட எலெக்ட்ரிக் மோட்டாருடன் இணைக்கப்பட்டுள்ளன. சிறிய பேட்டரி கொண்ட வேரியண்ட் சுமார் 143 பிஎச்பி ஆற்றலையும், 192.5 என்.எம் டார்க் திறனையும் உற்பத்தி செய்கிறது.
அதேசமயம், பெரிய பேட்டரி கொண்ட வேரியண்ட் தோராயமாக 173 பிஎச்பி ஆற்றலையும், அதே 192.5 என்.எம் டார்க் திறனையும் வழங்கக்கூடியதாக இருக்கும். இந்தியாவில், ஆரம்ப நிலை டெல்டா (Delta) வேரியண்ட் மட்டுமே சிறிய 49 kWh பேட்டரி பேக்குடன் வழங்கப்படும். அதே சமயம், ஜெட்டா (Zeta) மற்றும் டாப்-ஸ்பெக் ஆல்ஃபா வேரியண்ட்கள் பெரிய 61 kWh பேக்குடன் மட்டுமே கிடைக்கும்.
61 kWh பேட்டரி கொண்ட மாருதி சுஸுகி இ-விட்டாரா ஒற்றை சார்ஜில் 543 கிமீ தூரம் வரை செல்லும். சிறிய பேட்டரி வேரியண்ட்களின் ரேஞ்ச் இன்னும் வெளியிடப்படவில்லை. இரண்டு வெர்ஷன்களிலும் ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங் மற்றும் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது. பெரிய பேட்டரி பேக்கை, 70kW DC சார்ஜரில் 45 நிமிடங்களில் 10% முதல் 80% வரை சார்ஜ் செய்ய முடியும் என்று யுகே-இல் செயல்படும் சுஸுகி தெரிவித்துள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மாருதி சுஸுகி இ-விட்டாரா எலெக்ட்ரிக் காரின் விலைமிக்க டாப் வேரியண்ட்டின் விலை தற்போது நமக்கு தெரிய வந்துள்ளது. அதாவது, தொழிற்நுட்ப அம்சங்கள் அனைத்தும் நிரம்பிய இ-விட்டாரா காரின் விலை ரூ.24.79 லட்சம் ஆக நிர்ணயிக்கப்பட உள்ளது. விலைகள் கசிய துவங்கியுள்ளதால், இ-விட்டாராவிற்கான விலைகள் குறித்த அறிவிப்பு மாருதி சுஸுகியிடம் இருந்து விரைவில் எதிர்பார்க்கப்படுகிறது.
இது இந்தியாவில் ஹூண்டாய் க்ரெட்டா எலெக்ட்ரிக் மற்றும் எம்ஜி விண்சர் இவி போன்ற எலெக்ட்ரிக் கார் மாடல்களுக்கு போட்டியாக இருக்கும். மாருதி சுஸுகி இ-விட்டாராவின் உற்பத்தி குஜராத்தில் உள்ள மாருதி சுஸுகி ஆலையில் ஏற்கனவே நடந்து வருகிறது. இந்த எலெக்ட்ரிக் எஸ்யூவி தற்போது இந்தியாவில் இருந்து யுகே உள்பட ஐரோப்பா மற்றும் ஜப்பானுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.


Click it and Unblock the Notifications








