ரெனால்ட் ட்ரைபர் விலையில் இன்னோவா க்ரிஸ்ட்டாவின் சௌகரியம்! முழுமையாக ஆதிக்கம் செலுத்தும் மாருதி சுஸுகி எர்டிகா
இந்தியாவின் எம்பிவி கார் செக்மெண்ட்டில் தனக்கென அசைக்க முடியாத ஒரு இடத்தை கொண்டுள்ள கார் மாருதி சுஸுகி எர்டிகா (Maruti Suzuki Ertiga). டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா (Toyota Innova Crysta) காரின் சௌகரியத்தை, ரெனால்ட் ட்ரைபர் (Renault Triber) விலையில் எதிர்பார்த்தால், மாருதி சுஸுகி எர்டிகாதான் உங்களுக்கு சரியான ஆப்ஷனாக இருக்கும்.
மற்ற அனைத்து மாதங்களையும் போல், நடப்பு 2026ம் ஆண்டு ஜூன் மாதமும், மாருதி சுஸுகி எர்டிகா கார் விற்பனையில் சிறப்பான வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. மாருதி சுஸுகி நிறுவனம் நடப்பு 2026ம் ஆண்டு ஜூன் மாதம் 16,111 எர்டிகா கார்களை விற்பனை செய்துள்ளது. ஆனால் கடந்த 2025ம் ஆண்டு ஜூன் மாதம் வெறும் 14,151 மாருதி சுஸுகி எர்டிகா கார்கள் மட்டும்தான் விற்பனை செய்யப்பட்டிருந்தன.

அதாவது இம்முறை 1,960 மாருதி சுஸுகி எர்டிகா கார்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் மாருதி சுஸுகி எர்டிகா கார் விற்பனையில் 13.85 சதவீத வளர்ச்சியை பதிவு செய்து அசத்தியுள்ளது. அத்துடன் நடப்பு 2026ம் ஆண்டு ஜூன் மாதம் இந்தியாவில் மிகவும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட டாப் 10 கார்களின் பட்டியலில் (Top 10 Cars June 2026), மாருதி சுஸுகி எர்டிகா 5வது இடத்தை பிடித்துள்ளது.
இந்த பட்டியலில் முதல் 4 இடங்களில் முறையே டாடா பன்ச் (Tata Punch), டாடா நெக்ஸான் (Tata Nexon), மாருதி சுஸுகி டிசையர் (Maruti Suzuki Dzire) மற்றும் மாருதி சுஸுகி வேகன் ஆர் (Maruti Suzuki Wagon R) ஆகிய கார்கள் உள்ளன. மாருதி சுஸுகி எர்டிகா காரில் 7 பேர் சௌகரியமாக பயணம் செய்ய முடியும்.

அத்துடன் இதன் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை வெறும் 8.85 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலையும் கூட 12.99 லட்ச ரூபாயாக மட்டுமே இருக்கிறது. இவை தற்போதைய நிலையில் மாருதி சுஸுகி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும்.
மாருதி சுஸுகி நிறுவனம் எர்டிகாவை போன்று கூடிய விரைவில் 2 எம்பிவி கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. இதில் மாருதி சுஸுகி எக்ஸ்எல்6 ஃபேஸ்லிஃப்ட் (Maruti Suzuki XL6 Facelift) ஒன்றாகும். நடப்பு 2026ம் ஆண்டின் இறுதிக்குள்ளாக மாருதி சுஸுகி எக்ஸ்எல்6 ஃபேஸ்லிஃப்ட் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாருதி சுஸுகி நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ள 2வது எம்பிவி காருக்கு இன்னும் அதிகாரப்பூர்வமாக பெயர் சூட்டப்படவில்லை. அது ஒரு எலெக்ட்ரிக் எம்பிவி ரகத்தை சேர்ந்தது ஆகும். மாருதி சுஸுகி இ விட்டாரா எலெக்ட்ரிக் எஸ்யூவி (Maruti Suzuki e Vitara Electric SUV) காரில் வழங்கப்பட்டுள்ள அதே பேட்டரி மற்றும் இன்ஜின் ஆப்ஷன்கள்தான் மாருதி சுஸுகி நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் எம்பிவி காரிலும் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அனேகமாக அடுத்த ஆண்டில் மாருதி சுஸுகி நிறுவனத்தின் இந்த புதிய எலெக்ட்ரிக் எம்பிவி கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு விடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இது போன்ற காரணங்களால் தற்போதைய சூழலை போலவே எதிர்காலத்திலும் இந்தியாவின் எம்பிவி கார் செக்மெண்ட்டில் மாருதி சுஸுகி நிறுவனமே ஆதிக்கம் செலுத்தும் என்பது உறுதி.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்தியாவில் மாருதி சுஸுகி எர்டிகா காருக்கு சரி நிகர் போட்டியாக வேறு எந்தவொரு காரும் இல்லை. சொல்லப்போனால் இந்த செக்மெண்ட்டில் மாருதி சுஸுகி எர்டிகா தனி ஆவர்த்தனம் செய்து வருகிறது. ரெனால்ட் ட்ரைபர் மற்றும் நிஸான் க்ராவைட் போன்ற விலை குறைவான 7 சீட்டர் எம்பிவி கார்கள் வந்தாலும் கூட, சக்தி வாய்ந்த இன்ஜின் ஆப்ஷன் மற்றும் சௌகரியமான கேபின் போன்ற காரணங்களால், மாருதி சுஸுகி எர்டிகாவே ஆதிக்கம் செலுத்துகிறது.


Click it and Unblock the Notifications