எல்லாமே இந்தியர்களின் உழைப்பு... கடல் கடந்து செல்லும் மாருதி கார்கள்! மத்திய அரசு உதவுலனா இது நடந்திருக்காது!
மாருதி சுஸுகி (Maruti Suzuki) நிறுவனம் கடந்த ஒரு ஆண்டு காலக்கட்டத்தில் மட்டும் வழக்கத்தை காட்டிலும் சுமார் 1 லட்சம் கார்களை அதிகமாக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி (Export) செய்து அசத்தியுள்ளது. அப்படி எத்தனை இலட்சம் கார்களை மாருதி சுஸுகி ஏற்றுமதி செய்துள்ளது என்பதையும், இதில் புதிய இ-விட்டாரா (e-Vitara) எலெக்ட்ரிக் காரின் பங்களிப்பு என்ன என்பதை பற்றியும் இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
இந்தியாவின் நம்பர் ஒன் கார் நிறுவனமாக விளங்கும் மாருதி சுஸுகி, கார்களை இந்தியாவில் உற்பத்தி செய்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதிலும் முன்னணியில் உள்ளது. உள்நாட்டில் ஒவ்வொரு மாதமும் இலட்சக்கணக்கிலான கார்களை விற்பனை செய்யும் மாருதி சுஸுகி, அந்த அளவிற்கு இல்லையென்றாலும் ஒவ்வொரு மாதமும் சில பத்தாயிரம் யூனிட் கார்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது.

ஒரு வருடத்தில் மொத்தமாக சில லட்ச யூனிட்கள் அளவிற்கு மாருதி சுஸுகி கார்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. அந்த வகையில், கடந்த 2025 ஏப்ரல்- 2026 மார்ச் வரையிலான ஒரு வருட காலக்கட்டத்தில் மொத்தம் 4 லட்சத்து 48 ஆயிரம் கார்களை இந்தியாவில் உற்பத்தி செய்து வெளிநாடுகளுக்கு மாருதி சுஸுகி ஏற்றுமதி செய்துள்ளது.
முந்தைய 2024-25ஆம் நிதியாண்டின் இதே ஒரு வருட காலக்கட்டத்தில் ஏற்றுமதி செய்யப்பட்ட 3.33 லட்சம் மாருதி சுஸுகி கார்களுடன் ஒப்பிடுகையில் இது சுமார் 1.15 லட்சம் யூனிட்கள் அதிகமாகும். அதாவது, மாருதி சுஸுகி கார்கள் ஏற்றுமதி மூன்றில் ஒரு பங்கு அதிகரித்துள்ளது. இதன் மூலமாக, இந்தியாவில் இருந்து அதிக எண்ணிக்கையில் கார்களை ஏற்றுமதி செய்யும் நிறுவனமாக தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாக மாருதி சுஸுகி முதலிடத்தை பிடித்துள்ளது.

இன்னும் சொல்லப்போனால், 2025 ஏப்ரல் - 2026 மார்ச் வரையிலான ஒரு வருடத்தில் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட ஒட்டுமொத்த கார்களில் மாருதி சுஸுகி கார்களின் எண்ணிக்கை மட்டும் சுமார் 49% ஆகும். அதாவது, கடந்த 2025-26 நிதியாண்டில் இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்ட கார்களில் 2இல் ஒன்று மாருதி சுஸுகி நிறுவனத்துடையது ஆகும்.
இதனாலேயே, முதல் மாருதி சுஸுகி எலெக்ட்ரிக் கார் (Electric Car) ஆன இ-விட்டாரா இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்பாகவே, இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் பணிகள் துவங்கப்பட்டுவிட்டன. இன்னும் தெளிவாக சொல்ல வேண்டுமென்றால், இ-விட்டாராவை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்காகவே இந்தியாவில் மாருதி சுஸுகி நிறுவனம் உற்பத்தி செய்கிறது.
குஜராத்தின் ஹன்சல்புர் பகுதியில் உள்ள மாருதி சுஸுகியின் தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்படும் இ-விட்டாரா எலெக்ட்ரிக் கார்கள் முன்பு இந்தியாவில் இருந்து 29 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட நிலையில், தற்போது 44 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இது வரும் மாதங்களில் மேலும் உயரும் என்றும், அதிகப்படியான இ-விட்டாரா எலெக்ட்ரிக் கார்களின் ஏற்றுமதியால் மாருதி சுஸுகியின் ஒட்டுமொத்த கார்கள் ஏற்றுமதியும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், இந்தியா- நியூசிலாந்து நாடுகள் இடையே தடையற்ற வர்த்தகத்திற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளதால், வரும் காலங்களில் அதிக எண்ணிக்கையிலான மேட்-இன்-இந்தியா கார்கள் நியூசிலாந்து நாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன்படி, மாருதி சுஸுகி கார்களும் நியூசிலாந்தை வழக்கத்தை விட அதிகமாக சென்றைடையும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: உள்நாட்டு பொருட்களின் ஏற்றுமதியை அதிகரிப்பதில் உற்பத்தி நிறுவனங்களுக்கு எந்த அளவிற்கு ஆர்வம் உள்ளதோ அதே அளவிற்கு அந்த நாட்டின் அரசாங்கத்திற்கும் ஆர்வம் இருக்க வேண்டும். இந்த விஷயத்தில் இந்திய அரசு தீவிரமாக இருக்கும் காரணத்தினாலேயே, மாருதி சுஸுகியால் ஒரே வருடத்தில் 1.15 லட்சம் கார்களை அதிகமாக உற்பத்தி செய்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய முடிந்துள்ளது. இதன் மூலமாக, மேட்-இன்-இந்தியா கார்களும் உலக அளவிற்கு பல வெளிநாட்டினரின் பயன்பாட்டிற்கு செல்கின்றன.


Click it and Unblock the Notifications