லிட்டருக்கு 20km-க்கும் மேல் மைலேஜ் தரும் காரின் சிறப்பை உணர துவங்கிய மக்கள்! மாருதியில் மற்றுமொரு தரமான கார்
மாருதி சுஸுகி நிறுவனத்தின் லேட்டஸ்ட் காராக சில வருடங்களுக்கு முன் ஃபிரான்க்ஸ் அறிமுகம் செய்யப்பட்டது. மார்க்கெட்டில் பிரபலமான மாருதி சுஸுகி பலேனோ கார் அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஃபிரான்க்ஸ் கார்களின் விற்பனை ஆரம்பத்தில் பெரியதாக இல்லாவிடினும் சமீப மாதங்களாக வெகுவாக அதிகரித்து வருகிறது. அதனை வெளிக்காட்டும் வகையில், கடந்த மே மாதத்தில் எத்தனை ஃபிரான்க்ஸ் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன என்பது குறித்த விபரங்கள் வெளியாகியுள்ளன.
2023ஆம் ஆண்டின் துவக்கத்தில் டெல்லியில் நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போ கண்காட்சியில் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஃபிரான்க்ஸ் அறிமுகம் செய்யப்பட்டது. அதன்பின் சில மாதங்களில் இந்த காரின் டெலிவிரிகள் துவக்கப்பட்டன. அந்த சமயத்தில் ஃபிரான்க்ஸ் காருக்கு சிறப்பான கவனம் வாடிக்கையாளர்கள் மத்தியில் இருந்து கிடைத்தது. இருப்பினும், சில மாதங்களில் அந்த வரவேற்பு குறைய துவங்கியது.

பிரபலமான பலேனோ காரின் அடிப்படையில் உருவாக்கப்பட்டு இருப்பினும், பலேனோ அளவிற்கு ஏனோ மக்கள் ஃபிரான்க்ஸ் கார்களை வாங்கவில்லை. இந்த நிலைதான் கடந்த சில வருடங்களாக நீடித்துவந்த நிலையில், கடந்த சில மாதங்களாக ஃபிரான்க்ஸ் கார்களின் விற்பனை அதிகரிக்க துவங்கியுள்ளது. எந்த அளவிற்கு என்றால், கடந்த 2025ஆம் ஆண்டு மே மாதத்தில் 13 ஆயிரத்து 584 ஃபிரான்க்ஸ் கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன.
ஆனால், நடப்பாண்டின் மே மாதத்தில் சுமார் 20 ஆயிரத்து 686 ஃபிரான்க்ஸ் கார்களை மாருதி சுஸுகி நிறுவனம் விற்பனை செய்துள்ளது. இந்த வகையில் பார்த்தால், கடந்த ஆண்டு மே மாதத்தை காட்டிலும் இந்த ஆண்டு மே மாதத்தில் ஃபிரான்க்ஸ் கார்களின் விற்பனை ஆனது 52% அதிகரித்துள்ளது. அதேபோல், கடந்த 2026 ஏப்ரல் மாதத்திலும் 18 ஆயிரத்து 829 ஃபிரான்க்ஸ் கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன.

இந்த வகையில் பார்த்தால், கடந்த ஏப்ரல் மாதத்தை காட்டிலும் மார்ச் மாதத்தில் ஆயிரத்து 857 ஃபிரான்க்ஸ் கார்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. கடந்த மே மாதத்தில் ஃபிரான்க்ஸ் கார்களின் விற்பனை எந்த அளவிற்கு அதிகரித்துள்ளது என்றால், கடந்த மாதத்தில் இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையில் விற்பனையான காராக 2வது இடத்தை ஃபிரான்க்ஸ் பிடித்துள்ளது.
அதாவது, ஒட்டுமொத்த கார் நிறுவனங்களின் கார்களை காட்டிலும் அதிகமாக விற்பனை செய்யப்பட்டு மாருதி சுஸுகியின் டிசையர் முதலிடத்தை பிடித்துள்ள நிலையில், ஃபிரான்க்ஸ் 2வது இடத்தை தனதாக்கியுள்ளது. ஆனால், முதலிடத்தில் உள்ள டிசையர் 24 ஆயிரத்து 546 கார்கள் விற்பனை உடன் மிகவும் முன்னோக்கி உள்ளது. இந்த இரு கார்கள் மட்டுமின்றி, கடந்த மே மாதத்தில் மேலும் இரு கார் மாடல்களும் 20 ஆயிரம் யூனிட்களுக்கும் மேல் விற்பனையாகி உள்ளன.
அவையாவன, மாருதி சுஸுகி எர்டிகா மற்றும் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பன்ச் ஆகும். கடந்த மாத விற்பனை எண்ணிக்கையில் எர்டிகாவுக்கும், ஃபிரான்க்ஸ் காருக்கும் இடையே வெறும் 336 யூனிட்கள் மட்டுமே வித்தியாசம் உள்ளது. அதாவது, எர்டிகாவை காட்டிலும் 336 ஃபிரான்க்ஸ் கார்கள் மட்டுமே அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன.
மாருதி சுஸுகி ஃபிரான்க்ஸ் காரை பற்றி சொல்ல வேண்டுமென்றால், சிக்மா, டெல்டா, டெல்டா பிளஸ், ஸெட்டா மற்றும் ஆல்பா என 5 விதமான வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படும் இந்த காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் தற்சமயம் ரூ.6.85 லட்சத்தில் இருந்து ரூ.11.98 லட்சம் வரையில் உள்ளன. மத்திய அரசு கொண்டுவந்த GST திருத்தத்தால் ஃபிரான்க்ஸ் கார்களின் விலைகள் ரூ.73,000-இல் இருந்து ரூ.1.13 லட்சம் வரையில் குறைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மாருதி சுஸுகி நிறுவனத்தின் நம்பிக்கைக்கு உரிய காராக ஃபிரான்க்ஸ் மாறி வருகிறது. எந்த அளவிற்கு என்றால், அறிமுகம் செய்யப்பட்ட 32 மாதங்களில் சுமார் 4 லட்சத்திற்கும் அதிகமான ஃபிரான்க்ஸ் கார்கள் விற்பனையாகி உள்ளன. சில மாதங்களுக்கு முன்பு வரையில் விற்பனை பெரிய அளவிற்கு குறைந்தாலும், அப்போதும் மாருதி சுஸுகியில் இருந்து அதிகம் விற்பனையாகும் கார்களுள் ஒன்றாக ஃபிரான்க்ஸ் விளங்கியது. ஃபிரான்க்ஸில் அடுத்ததாக ஃபிளெக்ஸ்-ஃப்யுல் வெர்சன் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.


Click it and Unblock the Notifications