ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 35 கிமீ மைலேஜ் தரும் காரை களமிறக்கும் மாருதி! டாடா, ஹூண்டாய் நிறுவனங்களுக்கு செக்!
இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் (Maruti Suzuki Fronx). மிகவும் கவர்ச்சிகரமாக டிசைன் (Design) செய்யப்பட்டுள்ள காரணத்தாலும், ஏராளமான அதிநவீன வசதிகள் (Features) வழங்கப்படுவதாலும், இது இந்தியாவில் ஒவ்வொரு மாதமும் மிகவும் அதிகமாக விற்பனையாகி வரும் கார்களில் ஒன்றாக உள்ளது.
அத்துடன் மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் கார், வாடிக்கையாளர்கள் வழங்கும் பணத்திற்கு மிகவும் மதிப்பு வாய்ந்த தயாரிப்பாக கருதப்படுகிறது. இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை வெறும் 6.85 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது.

இது மாருதி சுஸுகி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும். இந்த குறைவான விலையும் மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் காரின் மிகப்பெரிய ப்ளஸ் பாயிண்ட்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இந்த சூழலில், மாருதி சுஸுகி நிறுவனம் ஃப்ரான்க்ஸ் காரின் விற்பனை எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க வேண்டும் என விரும்புகிறது.
இதன் ஒரு பகுதியாக வெகுவாக அப்டேட் செய்யப்பட்ட ஃப்ரான்க்ஸ் காரின் ஃபேஸ்லிஃப்ட் (Facelift) மாடலை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய மாருதி சுஸுகி நிறுவனம் திட்டமிட்டுள்ளது. மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் கார், கடந்த 2023ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

ஆனால் அதன் பின் மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் இன்னும் அப்டேட் செய்யப்படவில்லை. எனவே இம்முறை ஃப்ரான்க்ஸ் காரை வெகுவாக அப்டேட் செய்ய மாருதி சுஸுகி திட்டமிட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக லெவல் 2 அடாஸ் (ADAS - Advanced Driver Assistance Systems) பாதுகாப்பு தொகுப்பு, வென்டிலேஷன் வசதியுடன் கூடிய இருக்கைகள் போன்ற வசதிகள் எல்லாம், மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் புதிதாக வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
செயல்திறனை பொறுத்தவரையில் தற்போதைய மாடலில் 2 இன்ஜின் ஆப்ஷன்கள் (Engine Options) மட்டுமே கொடுக்கப்படுகின்றன. அவை 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.2 லிட்டர் பெட்ரோல் ஆகியவை ஆகும். ஃபேஸ்லிஃப்ட் மாடலில் இந்த 2 இன்ஜின் ஆப்ஷன்களும் தொடர்ந்து வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கூடவே 1.2 லிட்டர் ஸ்ட்ராங் ஹைப்ரிட் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷனும் வழங்கப்படலாம் என தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது ஸ்ட்ராங் ஹைப்ரிட் பெட்ரோல் இன்ஜின் என்பதால், சிறப்பான மைலேஜ் (Mileage) கிடைக்கும். அனேகமாக ஒரு லிட்டருக்கு 35 கிமீ மைலேஜ் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து கார்டாக் தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: அடாஸ் போன்ற வசதிகள் வழங்கப்படலாம் என்பதாலும், ஸ்ட்ராங் ஹைப்ரிட் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷனை கொண்டிருக்கலாம் என்பதாலும், மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் ஃபேஸ்லிஃப்ட் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது. அனேகமாக நடப்பு 2026ம் ஆண்டின் இறுதிக்குள்ளாக மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் ஃபேஸ்லிஃப்ட் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் வருகை டாடா நெக்ஸான் (Tata Nexon), மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ (Mahindra XUV 3XO), கியா சொனெட் (Kia Sonet), ஹூண்டாய் வெனியூ (Hyundai Venue), ஸ்கோடா கைலக் (Skoda Kylaq), ரெனால்ட் கைகர் (Renault Kiger) மற்றும் நிஸான் மேக்னைட் (Nissan Magnite) போன்ற கார்களுக்கு எல்லாம் விற்பனையில் நெருக்கடிகளை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications