சலுகைகளுடன் அடிமாட்டு விலையில் விற்பனை செய்யப்படும் மாருதி கார்
இந்தியாவில் மாருதி சுஸூகி நிறுவனம் விற்பனை செய்து வரும் விலை குறைவான கார் மாடல்களுள் ஒன்று இக்னிஸ் (Ignis) ஹேட்ச்பேக். இதனை தங்களுடைய ப்ரீமியம் டீலர்ஷிப் நெட்வொர்க்கான நெக்ஸா ஷோரூம்கள் மூலம் அந்நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. இந்த ப்ரீமியம் ஹேட்ச்பேக் காரை தற்போது சலுகைகளுடன் குறைவான விலையில் வாடிக்கையாளர்கள் வாங்கலாம்.
இந்த இக்னிஸ் ஹேட்ச்பேக் மாடலை நான்கு வேரியன்ட்களாக ரூ.5.35 லட்சம் முதல் ரூ.7.55 லட்சம் வரையிலான எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனை செய்து வருகிறது மாருதி சுஸூகி. சிக்மா, டெல்டா, ஸெட்டா மற்றும் ஆல்ஃபா என நான்கு வேரியன்ட்களாக இந்தக் கார் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்தக் காரில் 1.2 லிட்டர், 4 சிலிண்டர், NA பெட்ரோல் இன்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. மாருதி சுஸூகியின் மற்ற குறைவான விலை கார்களில் 1.2 லிட்டர், 3 சிலிண்டர் பெட்ரோல் இன்ஜினே பயன்படுத்தப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இக்னிஸின் இந்த 4 சிலிண்டர் பெட்ரோல் இன்ஜினானது 83 hp பவர் மற்றும் 113 Nm டார்க்கை உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டுள்ளது. இந்த இன்ஜினுடன் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 5 ஸ்பீடு AMT கியர்பாக்ஸ் தேர்வுகள் கொடுக்கப்பட்டுள்ளன.
அடிப்படையான சிக்மா வேரியன்ட் மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வுடன் மட்டுமே கிடைக்கிறது. மற்ற மூன்று வேரியன்ட்களும் மேனுவல் மற்றும் AMT ஆகிய இரண்டு கியர்பாக்ஸ் தேர்வுகளுடனும் கிடைக்கின்றன. டெல்டா AMT வேரியன்டில் இருந்து டூயல் டோன் நிறத்தில் இந்த மாருதி ப்ரீமியம் ஹேட்ச்பேக் மாடலை நாம் வாங்கலாம்.

இந்த மாடலுக்கு தற்போது ரூ.50,000 வரையிலான சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதில் ரூ.20,000 மதிப்புடைய பணத் தள்ளுபடியும், ரூ.15,000 மதிப்புடைய எக்ஸ்சேஞ்சு போனஸ் அல்லது ரூ.30,000 மதிப்புடைய ஸ்கிராப்பேஜ் போனஸ் ஆகியவையும் அடங்கும். இந்த சலுகைகளுடன் தற்போது விற்பனை செய்யப்பட்டு வருவதில் இருந்து மிகவும் குறைவான விலையில், குறிப்பாக ரூ.5 லட்சத்திற்குள்ளான எக்ஸ்-ஷோரூம் விலையில் இந்தக் காரை நாம் வாங்கலாம்.
இந்தியாவில் மாருதி விற்பனை செய்து வரும் மற்ற குறைவான விலை கார்களை விட இந்த இக்னிஸ் மாடல் மிகவும் குறைவாகவே விற்பனையாகி வருகிறது. ஆண்டுக்கு சராசரியாக 50,000 யூனிட்டுகள் வரையிலான இக்னிஸ் கார்களே விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இதனால் இந்தக் கார் மாடலின் விற்பனையை நிறுத்த மாருதி முடிவெடுத்துள்ளது. இதனால் ஸ்டாக்கில் இருக்கும் கார்களை இன்னும் குறைவான விலைக்கே வாடிக்கையாளர்கள் வாங்க முடியும்.
தற்போது தொடக்கநிலை ஹேட்ச்பேக்குகளை விட, கிட்டத்தட்ட அதே விலையில் விற்பனை செய்யப்பட்ட வரும் மைக்ரோ எஸ்யூவி மாடல்களுக்கே வாடிக்கையாளர்களிடம் அதிக மவுசு இருக்கிறது. எனவே, இந்த இக்னிஸை ஏறக்கட்டிவிட்டு, அதற்கு மாற்றாக புதிய மைக்ரோ எஸ்யூவி காரை மாருதி விற்பனைக்குக் கொண்டு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே Y43 என்ற குறியீட்டுப் பெயரில் புதிய சப்-காம்பேக்ட் எஸ்யூவி மாடல் ஒன்றை மாருதி உருவாக்கி வருவதாக முன்பிருந்தே தகவல்கள் வெளியாகி வந்தது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் தற்போது விற்பனை செய்யப்பட்டு வரும் டாடா பன்ச் மற்றும் ஹூண்டாய் எக்ஸ்டர் ஆகிய சிறிய எஸ்யூவிக்களுக்குப் போட்டியாக புதிய எஸ்யூவியை மாருதி வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மாருதியின் குறைவான விலை ஹேட்ச்பேக் கார்களில் ஏதேனும் ஒன்றை வாங்க நீங்கள் திட்டமிட்டிருந்தால், அதற்கு மாற்றாக இந்த இக்னிஸ் மாடலை வாங்குவதைக குறித்தும் பரிசீலனை செய்யுங்கள். தற்போது இதன் விற்பனை நிறுத்தப்படவிருக்கும் நிலையில். அதிகளவிலான டீலர்ஷிப் சலுகைகளுடன் இந்தக் காரை நீங்கள் வாங்க முடியும். விற்பனை நிறுத்தப்படவிருப்பதால் இது மோசமான கார் என்று அர்த்தம் இல்லை. எனவே புதிய காரை வாங்குவதற்கு முன்பு ஒருமுறை இதனையும் பரிசீலியுங்கள்.


Click it and Unblock the Notifications