ஜிப்ஸின் வாரிசு... திடீரென உயர்ந்த மாருதி சுஸுகி காரின் விற்பனை...
இந்திய வாடிக்கையாளர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட கார் மாருதி சுஸுகி ஜிம்னி (Maruti Suzuki Jimny). ஒரு சமயத்தில் மிகவும் பிரபலமாக இருந்து கடந்த ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு விற்பனையில் இருந்து விலக்கப்பட்ட மாருதி சுஸுகி ஜிப்ஸியின் வாரிசாக இது கருதப்படுகிறது.
ஆனாலும் மஹிந்திரா தார் (Mahindra Thar) போன்ற கார்கள் மிக கடுமையான போட்டியை வழங்கி வருவதால், மாருதி சுஸுகி ஜிம்னியின் விற்பனை மிகவும் மந்தமாக இருந்து வந்தது. ஆனால் நடப்பு 2026ம் ஆண்டு ஏப்ரல் மாதம் மாருதி சுஸுகி ஜிம்னி விற்பனையில் மிகவும் சிறப்பான வளர்ச்சியை பதிவு செய்து அசத்தியுள்ளது.

கடந்த 2025ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வெறும் 431 மாருதி சுஸுகி ஜிம்னி கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டிருந்தன. ஆனால் நடப்பு 2026ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 693 மாருதி சுஸுகி ஜிம்னி கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. அதாவது இம்முறை 262 மாருதி சுஸுகி ஜிம்னி கார்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன.
இதன் மூலம் மாருதி சுஸுகி ஜிம்னி கார் விற்பனையில் 60.79 சதவீத வளர்ச்சியை பதிவு செய்து அசத்தியுள்ளது. ரஸ்லேன் தளத்தில் வெளியாகியுள்ள சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) மூலமாக நமக்கு இந்த தகவல் தெரிய வந்துள்ளது. இது மாருதி சுஸுகி நிறுவனத்தின் நெக்ஸா டீலர்ஷிப்கள் மூலம் விற்பனை செய்யப்படும் ஒரு கார் ஆகும்.

இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் மாருதி சுஸுகி ஜிம்னி காரின் ஆரம்ப விலை 12.32 லட்ச ரூபாயாக உள்ளது. ஆனால் அதன் நேரடி போட்டி மாடலான மஹிந்திரா தார் வெறும் 9.99 லட்ச ரூபாய் என்ற ஆரம்ப விலையிலேயே கிடைக்கிறது. ஜிம்னியின் விற்பனை தற்போது வளர்ச்சி பாதையில் இருந்தாலும், ஒரு மாருதி சுஸுகி நிறுவனத்தின் தயாரிப்பிற்கு இது மிகவும் குறைவான விற்பனை எண்ணிக்கை ஆகும்.
இந்திய வாடிக்கையாளர்கள் மாருதி சுஸுகி ஜிம்னியை விட, மஹிந்திரா தாரை விரும்புவதே இதற்கு மிகவும் முக்கியமான காரணமாக கருதப்படுகிறது. 'ரோடு ப்ரெஸன்ஸ்' போன்ற விஷயங்களில் மாருதி சுஸுகி ஜிம்னியை விட, மஹிந்திரா தார் மிகவும் கம்பீரமாக உள்ளது. மாருதி சுஸுகி ஜிம்னி இந்தியாவில் சோபிக்க தவறியதற்கு இது மிகவும் முக்கியமான காரணங்களில் ஒன்றாகும்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: மாருதி சுஸுகி ஜிம்னி காரில், 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் உடன் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 4 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அத்துடன் இந்த காரில் 4 வீல் டிரைவ் சிஸ்டமும் கொடுக்கப்பட்டுள்ளது.
எனவே மிகவும் சவால் நிறைந்த ஆஃப் ரோடு சாகச பயணங்களை அடிக்கடி மேற்கொள்பவர்களுக்கு மாருதி சுஸுகி ஜிம்னி மிகச்சிறந்த ஆப்ஷன் என்பது டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் கருத்து. இந்திய சந்தையில் மஹிந்திரா தார் மட்டுமல்லாது, ஃபோர்ஸ் கூர்கா (Force Gurkha) போன்ற கார்கள் உடனும், மாருதி சுஸுகி ஜிம்னி போட்டியிட்டு வருகிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.
கடைசி 2 பத்தியில் கூடுதல் தகவல்கள் சேர்க்கப்பட்டுள்ளன.


Click it and Unblock the Notifications