அக்டோபர் கார் விற்பனையில் மாருதி சுஸுகி வரலாற்று சாதனை!
இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸுகி, அக்டோபர் மாத வாகன விற்பனையில் இதுவரை இல்லாத புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. பண்டிகைக் காலத்தை முன்னிட்டு வாடிக்கையாளர்களிடம் அதிகரித்த வரவேற்பு, எஸ்யூவி மாடல்களின் வளர்ச்சி மற்றும் ஏற்றுமதியில் ஏற்பட்ட முன்னேற்றம் ஆகியவை நிறுவனத்தின் இந்த சாதனைக்கு முக்கிய காரணங்களாக அமைந்துள்ளன.
கடந்த 2025 அக்டோபர் மாதத்தில் 2,20,894 வாகனங்களை விற்பனை செய்திருந்த மாருதி சுஸுகி, இந்த ஆண்டு அக்டோபரில் மொத்தம் 2,76,120 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இதன் மூலம் கடந்த ஆண்டை விட 25 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. மேலும், கடந்த மே மாதம் எட்டிய 2.43 லட்சம் வாகனங்கள் என்ற முந்தைய சாதனையையும் முறியடித்துள்ளது.

உள்நாட்டு விற்பனை சாதனை
மாருதி சுஸுகியின் உள்நாட்டு பயணிகள் வாகன விற்பனை அக்டோபர் மாதத்தில் 2,12,384 யூனிட்டுகளாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு இதே மாதத்தில் 1,76,318 வாகனங்கள் விற்பனையாகியிருந்த நிலையில், தற்போது 20.46 சதவீத வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. இலகுரக வர்த்தக வாகனமான சூப்பர் கேரி விற்பனையையும் சேர்த்துக் கணக்கிடும்போது, நிறுவனத்தின் உள்நாட்டு விற்பனை 2,16,789 யூனிட்டுகளாக உள்ளது. இது நிறுவனத்தின் வரலாற்றிலேயே ஒரே மாதத்தில் பதிவு செய்யப்பட்ட அதிகபட்ச உள்நாட்டு விற்பனை எண்ணிக்கை என்பது குறிப்பிடத்தக்கது.
எஸ்யூவி விற்பனை வளர்ச்சி
மாருதி சுஸுகியின் எஸ்யூவி மற்றும் எம்பிவி ரக வாகனங்களுக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் தொடர்ந்து வரவேற்பு அதிகரித்து வருகிறது. பிரெஸ்ஸா, ஃபிரான்க்ஸ், கிராண்ட் விட்டாரா, எர்டிகா, ஜிம்னி, விக்டோரிஸ் உள்ளிட்ட மாடல்கள் அடங்கிய இந்தப் பிரிவில் அக்டோபர் மாதம் 97,787 வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு அக்டோபரில் 77,571 யூனிட்டுகள் விற்பனையான நிலையில், தற்போது 26.06 சதவீத வளர்ச்சியை இந்தப் பிரிவு பதிவு செய்துள்ளது. நிறுவனத்தின் மொத்த பயணிகள் வாகன விற்பனையில் எஸ்யூவி பிரிவு முக்கிய பங்கு வகிக்கிறது.

சிறிய கார்களும் வளர்ச்சி
ஆல்டோ, பலேனோ, செலிரியோ, டிசையர், ஸ்விஃப்ட், வேகன்ஆர் உள்ளிட்ட சிறிய மற்றும் நடுத்தர கார்களின் விற்பனையும் கணிசமாக அதிகரித்துள்ளது. இந்தப் பிரிவில் அக்டோபர் மாதம் 1,00,877 வாகனங்களை மாருதி விற்பனை செய்துள்ளது. கடந்த ஆண்டு இதே மாதத்தில் 85,210 வாகனங்கள் விற்பனையாகி இருந்த நிலையில், தற்போது 18.39 சதவீத வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. அதேபோல், ஈக்கோ வேன் விற்பனை 13,720 யூனிட்டுகளாகவும், சூப்பர் கேரி இலகுரக வர்த்தக வாகன விற்பனை 4,405 யூனிட்டுகளாகவும் உள்ளது.
ஏற்றுமதியிலும் அசத்தல்
இந்தியாவில் மட்டுமின்றி சர்வதேச சந்தைகளிலும் மாருதி சுஸுகி வாகனங்களுக்கு வரவேற்பு அதிகரித்து வருகிறது. அக்டோபர் மாதத்தில் மட்டும் 49,872 வாகனங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு இதே மாதத்தில் 31,304 வாகனங்கள் மட்டுமே ஏற்றுமதி செய்யப்பட்ட நிலையில், தற்போது 59.32 சதவீத வளர்ச்சி பதிவாகியுள்ளது.
மேலும், டொயோட்டா உள்ளிட்ட பிற நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கை 9,459 யூனிட்டுகளாக உள்ளது. இதன் மூலம் உள்நாட்டு விற்பனை, பிற நிறுவனங்களுக்கான விநியோகம் மற்றும் ஏற்றுமதி என அனைத்து பிரிவுகளிலும் மாருதி சுஸுகி வலுவான செயல்பாட்டை வெளிப்படுத்தியுள்ளது.
நடப்பு நிதியாண்டு வளர்ச்சி
நடப்பு 2026-27 நிதியாண்டின் ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான காலகட்டத்தில் மாருதி சுஸுகி மொத்தம் 16,55,498 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் 12,99,629 வாகனங்கள் விற்பனையாகியிருந்தன. இதன் மூலம் 27.38 சதவீத வளர்ச்சி கிடைத்துள்ளது. குறிப்பாக, நடப்பு நிதி ஆண்டின் இந்த ஏழு மாதங்களில் எஸ்யூவி விற்பனை 40.14 சதவீதம் அதிகரித்து 5,53,479 யூனிட்டுகளாக உயர்ந்துள்ளது. ஏற்றுமதியும் 18.41 சதவீதம் அதிகரித்து 2,82,727 யூனிட்டுகளை எட்டியுள்ளது.
இந்திய கார் சந்தையில் பண்டிகைக் கால விற்பனை, எஸ்யூவி மாடல்களுக்கான அதிகரித்து வரும் தேவை மற்றும் சர்வதேச சந்தைகளில் இந்தியாவில் தயாரிக்கப்படும் கார்களுக்கு கிடைக்கும் வரவேற்பு ஆகியவை மாருதி சுஸுகியின் இந்த பிரம்மாண்ட வளர்ச்சிக்கு முக்கிய காரணங்களாக அமைந்துள்ளன.


Click it and Unblock the Notifications


