புதிய எஸ்யூவிக்கான முன்பதிவைத் தொடங்கியது மாருதி சுஸூகி
இந்தியாவில் மாருதி சுஸூகி விற்பனை செய்து வரும் பிரெஸ்ஸா எஸ்யூவி அப்டேட் செய்யப்படவுள்ளது. புதிய ஃபேஸ்லிப்ட் வெர்ஷனை வரும் ஜூலை 24ம் தேதியன்று இந்தியாவில் வெளியிடுகிறது மாருதி. வெளியீட்டுத் தேதி நெருங்கி வரும் நிலையில், தற்போது மேம்படுத்தப்பட்ட பிரெஸ்ஸா ஃபேஸ்லிப்ட் மாடலுக்கான முன்பதிவை அந்நிறுவனம் தொடங்கியிருக்கிறது.
இந்தியாவில் வாடிக்கையாளர்களால் அதிகம் விரும்பப்படும் ஒரு சப்-காம்பேக்ட் எஸ்யூவியாக பிரெஸ்ஸா இருந்து வருகிறது. இந்த எஸ்யூவியின் மேம்படுத்தப்பட்ட வெர்ஷனை வாங்க இப்போதே நீங்கள் முன்பதிவு செய்யலாம். மாருதி சுஸூக அரீனா (Maruti Suzuki Arena) டீலர்ஷிப்கள் மூலமாகவோ, மாருதி இணையதளப் பக்கம் மூலமாகவே 11,000 ரூபாய் முன்பணம் செலுத்தி இந்தப் புதிய எஸ்யூவியை நீங்கள் முன்பதிவு செய்யலாம்.

தற்போது விற்பனை செய்யப்பட்டு வரும் இரண்டாம் தலைமுறை பிரெஸ்ஸாவுக்கான பிரதான அப்டேட்டாக இது இருக்கும். குறிப்பிடத்தக்க வகையில் நிறைய மாற்றங்களை இந்த முறை பிரெஸ்ஸாவில் மாருதி செய்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக புதிய இன்ஜின் ஒன்றையும் இந்த சப்-காம்பேக்ட் எஸ்யூவி பெறவிருக்கிறது.
இதுவரை 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் பெட்ரோல் + CNG ஆகிய இன்ஜின் தேர்வுகளுடன் பிரெஸ்ஸா விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில், மாருதி ஃபிராங்க்ஸ் கிராஸ்ஓவர் எஸ்யூவியில் பயன்படுத்தப்பட்டு வரும் 1.0 லிட்டர் பூஸ்டர்ஜெட் டர்போ பெட்ரோல் இன்ஜினை புதிய பிரெஸ்ஸாவிலும் மாருதி கொடுக்கவிருப்பதாகத் தகவல்கள் கூறுகின்றன. இதுவே புதிய பிரெஸ்ஸாவின் கவனிக்கத்தக்க அம்சமாக இருக்கும்.

இத்துடன் புதிய பிரெஸ்ஸாவின் CNG வேரியன்ட்களில், விக்டோரிஸ் எஸ்யூவியில் கொடுக்கப்பட்டு வருவதைப் போலவே அண்டர்பாடி CNG டேங்கையும் மாருதி கொடுக்கலாம் எனக் கூறப்படுகிறது. இத்துடன் வழக்கமான டிசைன் மாற்றங்கள் மற்றும் சில புதிய வசதிகள் ஆகிய அப்டேட்களையும் பிரெஸ்ஸா ஃபேஸ்லிப்டில் நாம் எதிர்பார்க்கலாம்.
10.1 இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், பவர்டு டிரைவர்ஸ் சீட், வென்டிலேட் செய்யப்பட்ட முன்பக்க சீட்கள், பார்க்கிங் சென்சார்கள், ஆம்பியன்ட் லைட்டிங், லெவல் 2 ADAS பாதுகாப்பு அம்சங்கள் ஆகிய வசதிகளை புதிதாக பிரெஸ்ஸா ஃபேஸ்லிப்டில் மாருதி கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த மேம்பாடுகளுடன் தற்போது விற்பனை செய்யப்படுவதை விட சற்று கூடுதல் விலையில் புதிய பிரெஸ்ஸா ஃபேஸ்லிப்ட் வெளியாகலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இந்த சப்-காம்பேக்ட் எஸ்யூவியை 8.26 லட்சம் ரூபாய் முதல் 12.86 லட்சம் ரூபாய் வரையிலான எக்ஸ்-ஷோரூம் விலையில் மாருதி சுஸூகி விற்பனை செய்து வருகிறது.
மிகவும் போட்டி நிறைந்த சப்-காம்பேக்ட் எஸ்யூவி பிரிவில் அதிகம் விற்பனையாகும் ஒரு காராக பிரெஸ்ஸா விற்பனை செய்யப்பட்டு வருகிறது. டாடா நெக்ஸான், ஹூண்டாய் வென்யூ, கியா சிராஸ், கியா சோனெட், ஸ்கோடா கைலாக், நிஸான் மேக்னைட், மாருதி ஃபிராங்க்ஸ், டொயோட்டா அர்பன் க்ரூஸர் டெய்ஸர், ரெனோ கைகர், மஹிந்திரா XUV 3XO உள்ளிட்ட சப்-காம்பேக்ட் எஸ்யூவிக்களுக்குப் போட்டியாக மாருதி பிரெஸ்ஸா விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: சப்-கம்பேக்ட் எஸ்யூவிக்கள் பட்ஜெட் கார்களாக பார்க்கப்படும் என்பதால் அவற்றை குறைவான விலையில் விற்பனை செய்யும் நோக்கத்துடன் சற்று சிறிய இன்ஜினையே நிறுவனங்கள் கொடுக்கும். ஆனால் பிரெஸ்ஸாவில் 1.5 லிட்டர் என்ற பெரிய இன்ஜின் மட்டுமே கொடுக்கப்பட்டு வருகிறது. இதனால் பெரிய கார்களைப் போலவே 40 சதவீதம் வரையிலேயே பிரெஸ்ஸாவிற்கு ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டு வருகிறது.
புதிய பிரெஸ்ஸாவில் 1.0 லிட்டர் இன்ஜினுடன், அதன் மீதான ஜிஎஸ்டி வரியும் 18 சதவீதமாகக் குறையும். இதனால் டர்போ பெட்ரோல் இன்ஜின் கொண்ட பிரெஸ்ஸா வேரியன்ட்களை சற்று குறைவான விலையிலேயே மாருதி வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறைவான விலையிலேயே வாடிக்கையாளர்களுக்குக் கூடுதல் தேர்வையும் கொடுத்தது போலிருக்கும்.


Click it and Unblock the Notifications