மாருதி காரில் தயாரிப்புக் கோளாறு.. உடனடியாக சரிசெய்ய ரீகால் செய்த நிறுவனம்.. உங்க காரை செக் பண்ணிட்டீங்களா?
மாருதி நிறுவனமானது இக்னிஸ் ஹேட்ச்பேக்கில் கோளாறு இருப்பது தொடர்பாக ரீகால் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தாங்கள் விற்பனை செய்த கார்களில், தயாரிப்புக் கோளாறு இருப்பது தெரிய வந்தால், அல்லது தரமில்லாத பாகங்கள் பயன்படுத்தப்பட்டிருப்பது தெரியவந்தால், நிறுவனங்கள் ரீகால் அறிவிப்பை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் விற்பனை நிறுத்தப்பட்ட இக்னிஸ் ஹேச்ட்பேக்கிற்கு ரீகால் அறிவிப்பை வெளியிட்டுள்ளது மாருதி சுஸூகி.
இக்னிஸ் காரின் கண்ட்ரோலர் அசெம்பிளியில், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார் கோளாறாக இருப்பதை மாருதி கண்டறிந்துள்ளது. இந்தக் கோளாறு காரணமாக ரிவர்ஸ் பார்க்கிங் அலாரம் சில நேரங்களில் செயல்படாமல் போக வாய்ப்பிருக்கிறது. இது பாதுகாப்பு குறைபாடாக இருக்கும் நிலையில், இந்தக் கோளாறினால் வாடிக்கையாளர்கள் பாதிக்கப்பட வாய்ப்புகள் இருக்கிறது. எனவே தான் அதனை சரி செய்ய ரீகால் அறிவிப்பை மாருதி வெளியிட்டுள்ளது.

இந்தப் பிரச்சினையினால் எத்தனை இக்னிஸ் கார்கள் பாதிக்கப்பட்டுள்ளன என்ற தகவல் பகிர்ந்து கொள்ளப்படவில்லை. ஆனால் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களை நேரடியாக அழைத்து, குறிப்பிட்ட பாதிப்பு தொடர்பாக விளக்கி, அதனை மாற்றித் தர மாருதி அழைப்பு விடுத்து வருவதாக தகவல்கள் கூறுகின்றன. நீங்களும் இக்னிஸ் கார் வைத்திருக்கிறீர்கள் என்றால், அருகில் உள்ள மாருதி ஷோரும் அல்லது சர்வீஸ் செண்டருக்கு எடுத்துச் சென்று, உங்கள் காரும் பாதிக்கப்பட்டிருக்கிறதா என்பதை சோதனை செய்து கொள்ளுங்கள்.
மேற்கூறிய கோளாறு உங்கள் காரில் இருப்பது கண்டறியப்பட்டால் உடனடியாக மாருதி மாற்றிக் கொடுத்துவிடும். இது தயாரிப்புக் கோளாறு என்பதால், இதற்குக் கட்டணம் ஏதும் வாடிக்கையாளர்களிடம் வசூலிக்கப்படாது என்பது குறிப்பிடத்தக்கது. உடனடியாக இதனை சோதனை செய்து மாற்றவில்லை என்றால், பயன்பாட்டின் போது பிரச்சினை ஏற்பட வாய்ப்பிருக்கிறது. எனவே உடனே செக் செய்து கொள்ளுங்கள்.

விற்பனை நிறுத்தப்பட்ட மாருதி இக்னிஸ்?
இந்தியாவில் இக்னிஸ் காரின் விற்பனையை மாருதி நிறுத்திவிட்டதாக பல்வேறு நம்பகமான தரப்பிலிருந்து தகவல்கள் வெளிவருகின்றன. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை மாருதி இன்னும் வெளியிடவில்லை. எனினும், இந்தத் தகவல்கள் உண்மை என்பதை நிரூபிக்கும் விதமாக கடந்த மே மாதம் ஒரு இக்னிஸ் கார் கூட விற்பனையாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்தக் காருக்கான முன்பதிவை ஏற்றுக் கொள்வதையும் டீலர்ஷிப்கள் நிறுத்திக் கொண்டுவிட்டதாக பல்வேறு தரப்பினரும் தெரிவித்துள்ளனர்.
இவையெல்லாம் இந்த ப்ரீமியம் பட்ஜெட் ஹேட்பேக்கை மாருதி நிறுத்திவிட்டதையே சுட்டிக் காட்டுகின்றன. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு மாருதியிடமிருந்து எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்த இக்னிஸுக்கு மாற்றாக புதிய மைக்ரோ எஸ்யூவி ஒன்றையும் மாருதி வெளியிடலாம் எனவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இந்தியாவில் டாடாவின் பன்ச் எஸ்யூவி மிகவும் பிரபலமான ஒன்றாக இருந்து வருகிறது. மிகவும் குறைவாக ஹேட்ச்பேக்குகளின் விலையிலேயே இந்த எஸ்யூவி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதற்குப் போட்டியாக புதிய மைக்ரோ எஸ்யூவி ஒன்றை வெளியிடும் பொருட்டே, இக்னிஸ் ஹேட்ச்பேக்கின் விற்பனையை மாருதி நிறுத்தியிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பன்ச் மற்றும் இக்னிஸ் ஆகிய இரண்டு கார்களும் கிட்டத்தட்ட ஒரே நிலையிலான விலைப்பட்டியலிலேயே விற்பனை செய்யப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து:
மாருதி நிறுவனம் ரீகால் அறிவிப்பை வெளியிடுவது இது முதல் முறை அல்ல. எனவே இது குறித்த வாடிக்கையாளர்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை. கடந்தாண்டு கூட கிட்டத்தட்ட 39,500 கிராண்டு விட்டாரா கார்களில் குறிப்பிட்ட தயாரிப்பு கோளாறு இருப்பதாகக் கூறி மாருதி நிறுவனம் ரீகால் செய்து சரிசெய்து கொடுத்தது குறிப்பிடத்தக்கது.
மாருதியின் மற்ற ஹேட்ச்பேக்குகள் அளவிற்கு இக்னிஸின் விற்பனை இல்லை. மற்ற நிறுவனங்களின் விலை குறைவான கார்களுடன் ஒப்பிடும் போது இக்னிஸ் நல்ல விற்பனையையே பதிவு செய்து வந்தது. எனினும் மாருதியின் ஸ்டாண்டர்டிற்கு அது குறைவு. எனவே தான் வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கும் வகையிலேயே குறைவான விலையில் ஒரு எஸ்யூவி காரை கொடுக்க அந்நிறுனம் முடிவெடுத்திருக்கிறது.


Click it and Unblock the Notifications