வருவாய் கணிசமாக உயர்ந்தும் லாபம் சரிவு... கார் விலையை உயர்த்த மாருதி திட்டம்?
இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான மாருதி சுஸுகி, தொடர்ந்து கணிசமான விற்பனை வளர்ச்சியைப் பதிவு செய்து வருகிறது. இது ஒருபுறம் அந்நிறுவனத்திற்கு பெரும் சந்தோஷத்தை கொடுத்தாலும், மறுபுறத்தில் லாபம் கணிசமாக குறைந்துவிட்டது. இதனால், அந்நிறுவனம் பேயறைந்த நிலையில் உள்ளது.
பொதுவாக ஒரு நிறுவனத்தின் வருவாய் அதிகரிக்கும்போது அதன் லாபமும் உயர வேண்டும் என்று எதிர்பார்ப்பது இயல்பான விஷயம்தான். ஆனால் மாருதி சுஸுகி நிறுவனத்தின் விஷயத்தில் இந்த முறை அப்படி நடக்கவில்லை. அந்நிறுவனத்தின் வருவாய் வளர்ச்சிக்கும் லாபத்திற்கும் இடையிலான இடைவெளி அதிகரித்திருப்பது முதலீட்டாளர்களின் முகத்தை சுளிக்க வைத்துள்ளது.

நிதிநிலை முடிவுகள்
மாருதி சுஸுகி நிறுவனம் நடப்பு 2026-27 நிதியாண்டின் முதல் காலாண்டில் (Q1 FY27) ரூ.52,469.8 கோடி வருவாயைப் பதிவு செய்துள்ளது. கடந்த நிதியாண்டின் இதே காலாண்டில் நிறுவனத்தின் வருவாய் ரூ.38,605.2 கோடியாக இருந்தது. இதன்மூலம் ஆண்டு அடிப்படையில் மிகப்பெரிய அளவில் வருவாய் 35.9 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளது.
ஆனால் வருவாய் வளர்ச்சிக்கு நேர்மாறாக நிறுவனத்தின் நிகர லாபம் சரிவடைந்துள்ளது. 2025-26 நிதியாண்டின் முதல் காலாண்டில் ரூ.3,792.4 கோடியாக இருந்த நிகர லாபம், தற்போது ரூ.3,446.9 கோடியாகக் குறைந்துள்ளது. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 9.1 சதவீத சரிவாகும். அதாவது, நிறுவனத்தின் வருவாய் ரூ.13,864 கோடி அதிகரித்திருந்தாலும், லாபம் ரூ.345.5 கோடி குறைந்துள்ளது.
லாபத்தில் சரிவு
இந்த காலாண்டில் மாருதி நிறுவனத்தின் நிகர லாப வரம்பு (Net Profit Margin) கவனிக்கப்பட வேண்டிய விஷயமாக இருக்கிறது . கடந்த ஆண்டு முதல் காலாண்டில் 9.8 சதவீதமாக இருந்த லாப வரம்பு, தற்போது 6.6 சதவீதமாகக் குறைந்துள்ளது. மாருதி நிறுவனத்தின் ஒவ்வொரு 100 ரூபாய் வருவாய்க்கும் கடந்த ஆண்டு சுமார் 9.80 ரூபாய் லாபம் ஈட்டியது. ஆனால் தற்போது அதே 100 ரூபாய் வருவாய்க்கு 6.60 ரூபாய் மட்டுமே லாபமாகக் கிடைக்கிறது.
முந்தைய காலாண்டான 2025-26 நிதியாண்டின் நான்காவது காலாண்டுடன் ஒப்பிட்டாலும் நிலைமை பெரிய அளவில் மாறவில்லை. அப்போது ரூ.52,462.5 கோடியாக இருந்த வருவாய் தற்போது ரூ.52,469.8 கோடியாக மட்டுமே உயர்ந்துள்ளது. இதே காலகட்டத்தில் நிகர லாபம் 5.8 சதவீதம் சரிந்துள்ளது.
கார் உற்பத்திக்கான மூலப்பொருட்களின் விலை உயர்வு, இதர உற்பத்தி செலவீனங்கள் காரணமாகவே லாபம் குறைந்து வருவதாக கணிக்கப்பட்டு உள்ளது. எனவே, வருவாய் வளர்ச்சிக்கு தக்கவாறு லாபத்தை அதிகரிக்க அனைத்து திட்டங்களையும் மாருதி பரிசீலித்து வருகிறது.
இதற்காக, கார்களின் விலையை அதிகரிக்க அந்நிறுவனம் பரிசீலித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்மூலமாக, லாபத்தை அதிகரித்து முதலீட்டாளர்கள் மெச்சும் வகையில் திட்டங்களை கையில் எடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.


Click it and Unblock the Notifications


