இனி இருந்த இடத்திலேயே காரை சர்வீஸ் செய்யலாம்.. மாருதி அறிமுகப்படுத்திய சூப்பர் வசதி!
இந்தியாவில் கடும் போட்டிக்கு இடையிலும் அசைக்கமுடியாத வகையில் மாருதி சுஸூகி நம்பர் 1 இடத்தில் இருப்பதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. அதில் முக்கியமான ஒரு காரணம் அதன் சர்வீஸ். சின்ன கிராமத்திற்கு அருகிலும் கூட மாருதியின் சர்வீஸ் சென்டர்கள் இருப்பதை நாம் பார்க்க முடியும். சிறிய பிரச்சினைகளுக்காக பல கிலோமீட்டர்கள் ஓட்டிச் செல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை.
இந்த நிலையில் சர்வீஸ் வழங்குவதை புதிய திட்டம் ஒன்றின் மூலமாக அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லவிருக்கிறது மாருதி சுஸூகி. புதிதாக க்விக்ஸ்டாப் சர்வீஸ் (Quickstop Service) என்ற புதிய திட்டத்தை இந்தியா முழுவதும் அமல்படுத்தியிருக்கிறது அந்நிறுவனம். காரில் ஏற்படும் சிறிய பழுதுகளை உடனடியாக, நாம் இருக்கும் இடத்திற்கு அருகிலேயே சரி செய்து தரும் வகையில் சர்வீஸ் வழங்கும் வசதியைக் கொடுப்பது தான் இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கம். மாருதியின் இந்தப் புதிய திட்டம் குறித்து இங்கே நாம் விரிவாகப் பார்க்கலாம்.

வழக்கமாக சர்வீஸ் செண்டர்கள் போல பெரிய பெரிய கட்டிடங்களாக இல்லமல், ஒரு ஷிப்பிங் கண்டெய்னரை சர்வீஸ் செண்டராக மாற்றுகிறது மாருதியின் இந்தப் புதிய திட்டம். ஆம், ஒரு ஷிப்பிங் கண்டெய்னரை சிறிய சர்வீஸ் செண்டராக மாற்றி, வாகன போக்குவரத்து அதிகம் இருக்கும் பகுதிகளில் அமைக்கிறது மாருதி. இரண்டு பேரின் கூட்டு முயற்சியாக இவ்வாறான சர்வீஸ் செண்டர்கள் அமைக்கப்படவிருக்கின்றன.
அதிகளவிலான கார் பயன்பாடு இருக்கும் வளாகத்தில் அந்நிறுவனத்துடன் கூட்டணி அமைத்து மாருதியின் சர்வீஸ் செண்டர்கள் மூலம் இந்த க்விக்ஸ்டாப் சர்வீஸ் செண்டர்கள் இயக்கப்படும். இதற்கு பெரிய அளவில் இடம் தேவையில்லை. மேலும், தேவையில்லாத பட்சத்தில் எளிதாக இந்த சர்வீஸ் செண்டரை அகற்றவும் முடியும் என்பது பிளஸ் பாயின்ட். நீங்கள் ஒரு அலுவலகத்தில் பணி செய்பவராக இருந்து உங்கள் அலுவலகத்திற்கு அருகிலேயே இது போன்ற சர்வீஸ் செண்டர் இருந்தால், சிறிய கோளாறுகளை எளிதாக உங்களால் சரி செய்து கொள்ள முடியும்.
வழக்கமான கார் பராமரிப்பு மற்றும் சிறிய கோளாறுகளை சரிசெய்தல் உள்ளிட்ட சேவைகளை இந்த மாருதி க்விக்ஸ்டாப் சர்வீஸ் செண்டர்கள் மூலம் வாடிக்கையாளர்கள் பெற முடியும். பேட்டரியில் இயங்கும் உபகரணங்கப் பயன்பாடு மற்றும் தண்ணீர் இல்லாத கார் வாஷ் என முற்றிலும் புதிய விதமான சர்வீஸ் அனுபவத்தையும் இந்த சர்வீஸ் செண்டர் மூலம் நீங்கள் பெறலாம்.
இந்த க்விக்ஸ்டாப் சர்வீஸ் செண்டர்களை அமைப்பதன் மூலம், ஒரு கார் சர்வீஸுக்கான நேரத்தைக் குறைப்பதுடன், நாம் இருக்கும் இடத்திற்கு அருகிலேயே சர்வீஸ் கிடைப்பதற்கு வழிவகை செய்கிறது மாருதி சுஸூகி. மேலே கூறியது போல இது மாருதியின் சர்வீஸ் அனுவபத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும்.
முதற்கட்டமாக இந்தியா முழுவதும், டெல்லி, சென்னை, ஹைதராபாத், பெங்களூரு, கொல்கத்தா, பாக்தோக்ரா, கோழிக்கோடு மற்றும் சூரத் ஆகிய எட்டு நகரங்களில் 10 க்விக்ஸ்டாப் சர்வீஸ் செண்டர்களை அமைத்துள்ளது மாருதி சுஸூகி. இந்த முதற்கட்ட நடவடிக்கை வெற்றிகரமாக அமையும் பட்சத்தில் மேலும் பல நகரங்களுக்கும் இந்த க்விக்ஸ்டாப் சர்வீஸ் செண்டர் திட்டம் விரிவுபடுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் திட்டம் சர்வீஸ் அனுபவத்தை மட்டும் மேம்படுத்தாமல், கார் உரிமை அனுபவத்தையும் உயர்த்தும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஒரு காரின் வசதிகள், விலை மற்றும் பிற அம்சங்கள் எவ்வளவு முக்கியமோ, அதே அளவிற்கு சர்வீஸ் வழங்கலும் மிகவும் முக்கியமான ஒரு அம்சம். தற்போது வரை அந்த அம்சத்தில் மாருதி தான் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்தப் புதிய திட்டம் மூலமாக அது இன்னும் ஒரு படி மேலே சென்றிருக்கிறது.


Click it and Unblock the Notifications








