இந்தியாவிலேயே விலை குறைவான கார்.. இப்போ தள்ளுபடியுடன் இன்னும் கம்மி விலையில் வாங்கலாம்!
இந்தியாவில் தற்போது மிகவும் விலை குறைவான கார் என்றால் அது மாருதி சுஸூகியின் எஸ்-பிரஸ்ஸோ (S-Presso) தான். இந்த குட்டி ஹேட்ச்பேக் காரினை 3.50 லட்சம் ரூபாய் முதல் 5.25 லட்சம் ரூபாய் வரையிலான விலையில் மாருதி சுஸூகி விற்பனை செய்து வருகிறது. இந்த நிலையில் இந்தக் காருக்கான மே மாத சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
ஏற்கனவே குறைவான விலையைக் கொண்டிருக்கும் நிலையில், மே மாதத்திற்கான சலுகைகளுடன் இன்னும் குறைவான விலையில் இந்த ஹேட்ச்பேக் காரை வாடிக்கையாளர்களால் வாங்க முடியும். இந்த ஹேட்ச்பேக் காருக்கு தற்போது எவ்வளவு சலுகைகள் வழங்கப்பட்டிருக்கின்றன என்பதை சற்று விரிவாக இங்கே நாம் பார்க்கலாம்.

எஸ்-பிரஸ்ஸோ மாடலுக்கு இந்த மே மாதம் 37,500 ரூபாய் வரையிலான சலுகைகளை வழங்குகிறது மாருதி. இதில் 10,000 ரூபாய் வரையிலான பயனாளர் தள்ளுபடி, 25,000 ரூபாய் வரையிலான எக்ஸ்சேஞ்சு அல்லது ஸ்கிராப்பேஜ் போனஸ் மற்றும் 2,500 ரூபாய் வரையிலான இன்ஸ்டிடியூஷனல் டிஸ்கவுண்டு ஆகியவை அடங்கும்.
இந்த சலுகைகளுடன் 3.10 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையிலேயே இந்த எஸ்-பிரஸ்ஸோ ஹேட்ச்பேக் காரை வாடிக்கையாளர்களால் வாங்க முடியும். மாருதியின் மற்றொரு சிறிய ரக காரான ஆல்டோ K10 மற்றும் ரெனோவின் அடிப்படையான காரான க்விட் ஆகிய கார்களுக்குப் போட்டியாக இந்த எஸ்-பிரஸ்ஸோவை இந்தியாவில் மாருதி சுஸூகி விற்பனை செய்து வருகிறது.

இருசக்கர வாகனத்தில் இருந்து புதிதாக நான்கு சக்கர வாகனத்திற்கு மாறுபவர்களுக்கு சிறந்த காராக இந்த எஸ்-பிரஸ்ஸோ இருக்கும். எனினும் உங்கள் குடும்பத்திற்கு ஏற்ற காராக இது இருக்குமா என்பதையும் பார்த்துக் கொள்ளுங்கள். கணவன், மனைவி, இரண்டு குழந்தைகள் என்ற சிறிய குடும்பத்தை மையப்படுத்தியே இந்த சிறிய ரக காரை மாருதி வடிவமைத்திருக்கிறது.
5 பேர் வரை அமரும் வகையிலான கார் தான் என்றாலும் பின்வரிசை இருக்கையில் மூன்று பெரியவர்கள் நீண்ட நேரம் அமர்ந்து பயணிக்க முடியாது. நகரங்களில் குறைவான தூரத்திற்கு ஐந்து பேர் வரை பயணம் செய்யலாம். ஆனால் நீண்ட தூரம் பயணம் செய்ய வேண்டும் என்றால் நான்கு பேர் வரை தான் ஓரளவு சிரமமில்லாமல் பயணம் செய்ய முடியும்.
ஐந்து பேர் அமரும் போது போதுமான அளவு ஷோல்டர் ஸ்பேஸ் இருக்காது. மேலும் அண்டர் தை சப்போர்ட்டும் குறைவாகவே இருக்கும். இதனால் நெரிசலாக உணர்வதோடு, கால்களையும் சிரமம் இல்லாமல் வைக்க முடியாது. இதனையெல்லாம் பார்த்து இந்த எஸ்-பிரஸ்ஸோ காரை வாங்கலாமா வேண்டாமா என முடிவு செய்து கொள்ளுங்கள்.
குறைவான விலை கார் என்பதால் அடிப்படையான வசதிகள் அனைத்தும் கொடுக்கப்பட்டிருக்கும். சொகுசு வசதிகளை எதிர்பார்க்க முடியாது. இன்ஜின் மற்றும் கியர்பாக்ஸ் சிறப்பான, பிரச்சினை தராத ஒன்றாகவே இருக்கும். பல ஆண்டுகளாக மாருதியின் ஆல்டோ K10 மற்றும் வேகன் ஆர் என பல லட்சம் யூனிட்டுகள் விற்பனையாகும் கார் மாடல்களிலும், எஸ்-பிரஸ்ஸோவில் கொடுக்கப்பட்டு வரும் 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜினே பயன்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மேலே கூறியது போல முதல் முறை கார் வாடிக்கையாளர்களுக்கும், சிறிய குடும்பத்தைக் கொண்டிருப்பவர்களுக்கும் சிறந்த கார் மாடலாக இந்த எஸ்-பிரஸ்ஸோ இருக்கும். ஹேட்ச்பேக் கார் தான் என்றாலும் எஸ்யூவி போலவேயான தோற்றத்தைக் கொண்டிருக்கும். இந்தியாவில் விற்பனையில் இருக்கும் குட்டியான மற்றும் க்யூட்டான கார்களில் ஒன்றாக இதனைக் கூறலாம்.
சிறிய ரக கார் தான் என்றாலும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் வசதியும் இந்தக் காரில் கொடுக்கப்பட்டிருக்கிறது. எனவே நகரப் பயன்பாட்டாளர்கள் அதனைப் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை. இந்தக் காரின் முக்கியமான அம்சங்களில் ஒன்றாக இதன் மைலேஜைக் கூறலாம். நெரிசலான நகரச் சாலைகளிலும் நல்ல மைலேஜே கொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications