இந்தியால யாரும் ஏறெடுத்து கூட பாக்காத காரை வெளிநாட்ல வாங்கி குவிக்கறாங்க! கப்பல் கப்பலா போயிட்டு இருக்கு!
இந்திய சந்தையில் நம்பர்-1 நிறுவனமாக இருந்தாலும் கூட, மாருதி சுஸுகியின் (Maruti Suzuki) ஒரு சில கார்கள், விற்பனையில் 'டல்' அடித்து கொண்டுதான் உள்ளன. இதற்கு மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ (Maruti Suzuki S-presso) ஒரு உதாரணம். இது மிகவும் விலை குறைவான ஹேட்ச்பேக் (Hatchback) ரக கார் ஆகும்.
இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை (Price) வெறும் 3.50 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது. இருப்பினும் இந்திய சந்தையில் மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ காரின் விற்பனை மிகவும் மந்தமாக இருந்து வருகிறது.

நடப்பு 2026ம் ஆண்டு மார்ச் மாதம் கூட இந்திய சந்தையில் வெறும் 226 மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால் கடந்த 2025ம் ஆண்டு மார்ச் மாதம் இந்திய சந்தையில் 1,788 மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ கார்கள் விற்பனை செய்யப்பட்டிருந்தன. இதன் மூலம் விற்பனையில் 87 சதவீத வீழ்ச்சியை மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ பதிவு செய்துள்ளது.
கழுதை தேய்ந்து கட்டெறும்பாகி வருவதையே இந்த எண்கள் உணர்த்துகின்றன. ஆனால் அதே நடப்பு 2026ம் ஆண்டு மார்ச் மாதம் இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ காரின் எண்ணிக்கை, இந்திய விற்பனை எண்களுக்கு அப்படியே நேர் எதிராக இருக்கிறது.

அதாவது நடப்பு 2026ம் ஆண்டு மார்ச் மாதம் இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு 6,377 மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ கார்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. ஆனால் கடந்த 2025ம் ஆண்டு மார்ச் மாதம் இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு 2,018 மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ கார்கள் மட்டுமே ஏற்றுமதி செய்யப்பட்டிருந்தன. இந்த வகையில் பார்த்தால், மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ கார் விற்பனையில் 216.01 சதவீத வளர்ச்சியை பதிவு செய்து அசத்தியுள்ளது.
காடிவாடி மற்றும் ரஸ்லேன் தளங்களில் வெளியாகியுள்ள சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) மூலமாக இந்த தகவல்கள் நமக்கு தெரிய வந்துள்ளன. இந்திய சந்தையை விட, வெளிநாட்டு சந்தைகளில் மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ காரின் விற்பனை மிகவும் சிறப்பாக இருப்பதை இதன் மூலமாக நீங்கள் புரிந்து கொள்ளலாம். இருப்பினும் இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்ட ஒரு காருக்கு வெளிநாடுகளில் நல்ல 'டிமாண்ட்' இருப்பது ஆரோக்கியமான விஷயம்தான்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்தியாவில் விற்பனையில் தடுமாறினாலும் கூட, வெளிநாடுகளில் ஒரு சில கார்கள் நன்றாகவே விற்பனையாகி வருகின்றன. இதற்கு மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ மட்டும் உதாரணம் அல்ல. மாருதி சுஸுகி ஜிம்னி (Maruti Suzuki Jimny) காரும் கூட இதற்கு ஒரு உதாரணம்தான். இந்தியாவில் விற்பனையில் தடுமாறினாலும், இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் மாருதி சுஸுகி ஜிம்னி கார்கள், வெளிநாடுகளில் நன்றாகதான் விற்பனையாகி வருகின்றன.
பொதுவாக ஒரு கார் நிறுவனம் ஒரே காரை ஒவ்வொரு சந்தைக்கும் ஏற்ற வகையில் தயாரித்திருக்கும். அதாவது ஒரே கார்தான் என்றாலும் கூட, இந்தியாவில் விற்பனை செய்யப்படும் காருக்கும், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் காருக்கும் இடையே நிறைய வித்தியாசங்கள் இருக்கும். வசதிகள், பாதுகாப்பு மற்றும் இன்ஜின் செயல்திறன் போன்ற அம்சங்களில் இந்த வித்தியாசங்களை பார்க்கலாம். இந்திய சந்தையில் விற்பனையில் தடுமாறும் ஏராளமான கார்கள், வெளிநாடுகளில் சிறப்பாக விற்பனையாகி வருவதற்கு ஏராளமான காரணங்கள் இருந்தாலும் கூட, இது மிக முக்கியமான காரணங்களில் ஒன்றாகும்.


Click it and Unblock the Notifications








