நாலுகால் பாய்ச்சலில் மாருதி கார் விற்பனை... செப்டம்பரில் 37% உயர்வு!
இந்தியாவின் முன்னணி கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுஸுகி, கடந்த செப்டம்பர் மாதம் மிகச் சிறப்பான விற்பனையை பதிவு செய்துள்ளது. அந்நிறுவனத்தின் மொத்த விற்பனை கடந்த மாதம் 2,36,013 யூனிட்டுகளாக பதிவாகி உள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் 1,89,665 வாகனங்களை மாருதி விற்பனை செய்த நிலையில், இந்த ஆண்டு மொத்த விற்பனை 24.4 சதவீதம் அதிகரித்துள்ளது.
அதேநேரத்தில், உள்நாட்டு விற்பனை (இந்தியாவில் மட்டும்) 37 சதவீதம் அதிகரித்துள்ளது. அதாவது, கடந்த ஆண்டு 1,32,820 கார்களை மாருதி விற்பனை செய்த நிலையில், கடந்த மாதம் 1,81,838 யூனிட்டுகளை விற்பனை செய்து அசத்தி உள்ளது. ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் உள்நாட்டு விற்பனை 37 சதவீதம் உயர்ந்துள்ளது. கடும் சந்தைப்போட்டி இருந்தாலும், மாருதி இந்த அசாத்திய விற்பனை வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.

சிறிய, நடுத்தர ரக கார் விற்பனை
ஆல்டோ, பலேனோ, செலிரியோ, டிசையர், இக்னிஸ், எஸ் பிரஸ்ஸோ, ஸ்விஃப்ட் மற்றும் வேகன் ஆர் ஆகிய மாடல்களை உள்ளடக்கிய சிறிய, காம்பேக்ட் மற்றும் நடுத்தர ரக கார் பிரிவில் செப்டம்பர் மாதத்தில் 91,887 கார்களை மாருதி விற்பனை செய்துள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பரில் இந்தப் பிரிவில் 74,090 கார்களை மட்டுமே அந்நிறுவனம் விற்பனை செய்திருந்தது.
யுட்டிலிட்டி ரக வாகனங்கள்
மாருதியின் பயன்பாட்டு வாகனங்கள் பிரிவில் பிரெஸ்ஸா, எர்டிகா, இ-விட்டாரா, ஃப்ரான்க்ஸ், கிராண்ட் விட்டாரா, இன்விக்டோ, ஜிம்னி, விக்டோரிஸ் மற்றும் எக்ஸ்எல்6 ஆகிய மாடல்கள் இடம்பெறுகின்றன. இந்தப் பிரிவில் கடந்த மாதம் 78,911 வாகனங்கள் விற்பனையாகியுள்ளன. கடந்த ஆண்டு இதே மாதத்தில் 48,695 வாகனங்கள் மட்டுமே விற்பனையான நிலையில், இந்த ஆண்டு விற்பனை கணிசமாக அதிகரித்துள்ளது.
ஈக்கோ வேன் விற்பனை
யாருமே எதிர்பாராத வகையில் ஒரு மாருதி மாடல் மாதாமாதம் மிக அதிக எண்ணிக்கையில் விற்பனையாகி வருகிறது. அதுதான், மாருதி ஈக்கோ வேன். கடந்த மாதம் மட்டும் 11,040 ஈக்கோ வேன்கள் விற்பனையாகியுள்ளன. கடந்த ஆண்டு இதே மாதத்தில் 10,035 ஈக்கோ வேன்கள் விற்பனையாகியிருந்தன.
அதேபோல், மாருதியின் சூப்பர் கேரி என்ற இலகு ரக வர்த்தக வாகனத்தின் விற்பனை 3,414 ஆக பதிவாகி உள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பரில் இது 2,891 ஆக இருந்தது. பயணிகள் வாகனங்களுடன் சூப்பர் கேரி இலகு வர்த்தக வாகனத்தையும் சேர்த்து பார்த்தால், செப்டம்பர் மாதத்தில் மாருதியின் உள்நாட்டு விற்பனை 1,85,252 ஆக உள்ளது. இதனுடன் டொயோட்டா நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட 6,542 வாகனங்களையும் சேர்த்தால் மொத்த உள்நாட்டு விற்பனை 1,91,794 யூனிட்டுகளாக பதிவாகி உள்ளது.
ஏற்றுமதியிலும் வளர்ச்சி
மாருதி சுஸுகியின் ஏற்றுமதியும் செப்டம்பர் மாதத்தில் அதிகரித்துள்ளது. கடந்த 2025ம் ஆண்டு செப்டம்பரில் 42,204 வாகனங்களை மாருதி ஏற்றுமதி செய்திருந்தது. இந்த நிலையில், கடந்த மாதம் 44,219 வாகனங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. உள்நாட்டு விற்பனை, ஏற்றுமதி மற்றும் டொயோட்டாவுக்கு வழங்கப்பட்ட வாகனங்கள் என அனைத்தையும் சேர்த்து பார்த்தால், கடந்த செப்டம்பர் மாத மொத்த விற்பனை 2,36,013 யூனிட்டுகளாக பதிவாகி உள்ளது.
முதல் அரையாண்டிலும் அசத்தல்
2026-27 நிதியாண்டின் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான முதல் ஆறு மாதங்களில் மாருதி சுஸுகி நிறுவனத்தின் மொத்த விற்பனை 13,79,378 யூனிட்டுகளாக பதிவாகி உள்ளது. கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் 10,78,735 வாகனங்கள் விற்பனையாகியிருந்தன.
இந்த ஆறு மாத காலத்தில் உள்நாட்டு பயணிகள் வாகன விற்பனை 10,80,240 ஆகவும், ஏற்றுமதி 2,32,855 ஆகவும் பதிவாகியுள்ளது. பண்டிகைக் கால விற்பனை தொடங்கியுள்ள நிலையில், வரும் மாதங்களிலும் மாருதி கார் விற்பனை தொடர்ந்து வலுவான நிலையில் செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications


