எஸ்யூவி சந்தையில் விட்டதை பிடிக்குமா மாருதி? அடுத்தடுத்து 7 புதிய மாடல்களை களமிறக்க மெகா திட்டம்!!

இந்தியாவில் கார் என்றாலே ஒரு காலத்தில் மாருதி சுஸுகி என்ற நிலை இருந்தது. குறிப்பாக சிறிய கார்கள், குறைந்த விலை, அதிக மைலேஜ், எளிதான பராமரிப்பு என இந்திய குடும்பங்களின் தேவையை சரியாக புரிந்துகொண்ட நிறுவனமாக மாருதி இருந்தது. ஆனால் அந்த நிலை இப்போது கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருகிறது. இன்று புதிய கார் வாங்கும் பலரின் முதல் தேர்வு ஹேட்ச்பேக் என்ற நிலை மாறி, எஸ்யூவிதான் முதன்மையான தேர்வாக மாறியுள்ளது. அதிக இடவசதி, கம்பீரமான தோற்றம், இந்திய சாலை நிலைகளுக்கு ஏற்ற க்ரவுண்ட் கிளியரன்ஸ், கைகளுக்கு தோதான பட்ஜெட் போன்றவை வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்க்க காரணமாக உள்ளது.

இதனை மாருதியும் உணர்ந்து கொண்டு தனது வர்த்தகத் திட்டங்களில் முக்கிய மாற்றங்களை செய்து வருகிறது. ஏற்கனவே ஃப்ரான்க்ஸ், பிரெஸ்ஸா, விக்டோரிஸ், கிராண்ட் விட்டாரா, ஜிம்னி மற்றும் இ விட்டாரா உள்ளிட்ட எஸ்யூவி மாடல்களை விற்பனைக்கு அறிமுகம் செய்துவிட்டது. ஆனால், டாடா, மஹிந்திரா மட்டுமின்றி ஹூண்டாய், கியா உள்ளிட்ட நிறுவனங்களும் எஸ்யூவி சந்தையின் பல்வேறு பிரிவுகளில் வலுவாக இருக்கும் நிலையில், இந்த சந்தையில் இன்னும் பெரிய இடத்தை பிடிக்க வேண்டிய கட்டாயம் மாருதிக்கு ஏற்பட்டுள்ளது.

கடந்த FY26 காலகட்டத்தில் இந்திய பயணிகள் வாகன சந்தையில் எஸ்யூவி ரக கார்களின் பங்களிப்பு 54.7 சதவீதமாக உயர்ந்துள்ளது. அதாவது, இந்தியாவில் விற்பனையாகும் இரண்டு பயணிகள் வாகனங்களில் ஒன்றுக்கும் மேற்பட்டவை எஸ்யூவி வகையை சேர்ந்ததாக உள்ளன. இதே காலகட்டத்தில், மாருதியின் எஸ்யூவி சந்தையில் பங்களிப்பு கடந்த 2019-20 நிதியாண்டில் இருந்த 16.8 சதவீதத்தில் இருந்து சென்ற ஆண்டின் ஏப்ரல்-பிப்ரவரி காலத்தில் 19.6 சதவீதமாக உயர்ந்துள்ளது. வளர்ச்சி ஒருபக்கம் இருந்தாலும், எஸ்யூவி சந்தை ஒட்டுமொத்தமாக வேகமாக வளர்ந்து வரும் நிலையில், இன்னும் அதிக பங்களிப்பை பெற வேண்டும் என்பதே அந்நிறுவனத்தின் நோக்கமாக உள்ளது.

அதனால்தான் அடுத்த 5-6 ஆண்டுகளில் 7 புதிய எஸ்யூவி மாடல்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தும் திட்டத்தை மாருதி கையில் எடுத்துள்ளது. இது வெறுமனே புதிய கார்கள் பட்டியலாக இல்லாமல், இந்தியர்களின் மாறிவரும் கார் தேர்வுக்கு ஏற்ப மாருதியின் தயாரிப்பு வரிசையை மாற்றும் முக்கிய முயற்சியாக பார்க்கப்படுகிறது.

ஒருநேரத்தில் எஸ்யூவி என்பது ஆஃப்ரோடு பிரியர்கள் மற்றும் குறிப்பிட்ட வாடிக்கையாளர்களை மட்டுமே கவரும் வாகனமாக இருந்தது. ஆனால் தற்போது நிலைமை முற்றிலும் மாறிவிட்டது. டாடா பன்ச் போன்ற மைக்ரோ எஸ்யூவி மாடல்கள் முதல் க்ரெட்டா, கிராண்ட் விட்டாரா போன்ற மிட்-சைஸ் எஸ்யூவிகள், ஸ்கார்ப்பியோ, XUV 7XO போன்ற பெரிய குடும்ப எஸ்யூவிகள், தார் போன்ற லைஃப்ஸ்டைல் மாடல்கள் வரை பல்வேறு தேர்வுகள் உள்ளன. இதனுடன் மின்சார எஸ்யூவிகளும் வேகமாக வளர்ந்து வருகின்றன.

இந்த போட்டியின் தீவிரம் ஜூலை விற்பனையிலும் தெரிகிறது. மாருதி ஃப்ரான்க்ஸ் 19,473 யூனிட்டுகளும், பிரெஸ்ஸா 12,055 யூனிட்டுகளும், புதிய விக்டோரிஸ் 11,334 யூனிட்டுகளும் விற்பனையாகியுள்ளன. அதே நேரத்தில் டாடா பன்ச் 21,313 யூனிட்டுகளும், ஹூண்டாய் க்ரெட்டா 18,088 யூனிட்டுகளும், டாடா நெக்ஸான் 17,471 யூனிட்டுகளும், மஹிந்திரா ஸ்கார்ப்பியோ 16,009 யூனிட்டுகளும் விற்பனையாகியுள்ளன.

ஏற்கனவே மாருதி வகுத்த திட்டத்தின்படி, எஸ்யூவி மார்க்கெட்டில் குறிப்பிடத்தக்க விற்பனையை மாருதி பெற்று வருகிறது. FY26-ல் நிறுவனம் 5.22 லட்சத்துக்கும் அதிகமான எஸ்யூவிகளை விற்பனை செய்துள்ளது. நடப்பு நிதி ஆண்டில் எஸ்யூவி விற்பனையை மேலும் 25-30 சதவீதம் உயர்த்த அந்நிறுவனம் இலக்கு வைத்துள்ளது. மேலும், மாருதியின் மொத்த உள்நாட்டு விற்பனையில் எஸ்யூவிகளின் பங்களிப்பு கடந்த 2023 நிதி ஆண்டில் 12 சதவீதமாக இருந்த நிலையில், நடப்பு நிதி ஆண்டின் முதல் காலாண்டில் சுமார் 30 சதவீதமாக உயர்ந்துள்ளது.

இதனால் மாருதியின் நோக்கம் தன்னை முழுமையான எஸ்யூவி தயாரிப்பாளர் அந்தஸ்துக்கு மாறுவது நோக்கமாக இல்லை. எனினும் சிறிய கார், எஸ்யூவி, எலெக்ட்ரிக் என எந்தப் பிரிவுக்கு வாடிக்கையாளர் சென்றாலும், அவருக்கு தன்னிடம் ஒரு சரியான தேர்வு இருக்க வேண்டும் என்று மாருதி கருதுகிறது.

2030-31 காலகட்டத்தில் இந்திய பயணிகள் வாகன சந்தை ஆண்டுக்கு 61-63 லட்சம் யூனிட்கள் அளவுக்கு வளரக்கூடும் என மாருதி கணித்துள்ளது. இந்த வளர்ச்சியில் சிறிய கார்களுக்கும், எஸ்யூவிகளுக்கு முக்கிய பங்கு இருக்கும் என நிறுவனம் எதிர்பார்க்கிறது.

எனவே, அடுத்த சில ஆண்டுகளில் மாருதி அறிமுகம் செய்ய உள்ள 7 புதிய எஸ்யூவி மாடல்கள் அந்நிறுவனத்தின் விற்பனையை அடுத்தக் கட்டத்திற்கு கொண்டு செல்லும் முயற்சியாக இருக்கும். சிறிய கார் தயாரிப்பாளர் என்ற பழைய அடையாளத்தை தாண்டி, இந்தியர்களின் மாறிவரும் கார் கனவுகளுக்கும் பதில் சொல்லும் நிறுவனமாக தன்னை மாற்றிக்கொள்ளும் மாருதியின் மிகப்பெரிய முயற்சி என்றே இதை பார்க்க முடிகிறது.

Article Published On: Monday, August 10, 2026, 12:40 [IST]
English summary
Maruti suzuki suv market expansion 7 new suvs next 5 years
மேலும்... #maruti suzuki
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out
X