முதல் முறையாக கேமராவில் சிக்கிய மாருதியின் குட்டி எஸ்யூவி கார்... டாடா பன்ச் காருக்கு நேரடி போட்டி!
இந்தியாவில் குறைந்த விலை எஸ்யூவி கார்களுக்கான வரவேற்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக டாடா பன்ச், ஹூண்டாய் எக்ஸ்டர் போன்ற கார்கள் இந்த சந்தையில் நல்ல விற்பனையைப் பதிவு செய்கின்றன. இந்நிலையில், இந்தப் போட்டியில் களமிறங்க மாருதி சுஸுகி நிறுவனமும் புதிய மைக்ரோ எஸ்யூவியை உருவாக்கி வருகிறது.
இந்த புதிய மைக்ரோ ரக எஸ்யூவி கார் Y43 என்ற குறியீட்டுப் பெயரில் உருவாகி வருகிறது. இந்த நிலையில், இந்த கார் தற்போது முதல்முறையாக சோதனை ஓட்டத்தின்போது கேமராவில் சிக்கியுள்ளது. இதன் மூலம் மாருதி நிறுவனத்தின் புதிய எஸ்யூவி குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஏற்கனவே இந்த காரின் வருகை குறித்த தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில், தற்போது புதிய ஸ்பை படங்கள் வெளியாகியுள்ளன.

சமீபத்தில் இணையத்தில் வெளியான காணொளியில், அடையாளங்கள் முழுவதும் மறைக்கப்பட்ட நிலையில் இந்த கார் சோதனை செய்யப்படுவது தெரிய வந்துள்ளது. போக்குவரத்து மிகுந்த சாலையில் யூ-டர்ன் செய்து செல்லும் இந்த காரின் வெளிப்புற வடிவமைப்பை முழுமையாகப் பார்க்க முடியவில்லை. இருப்பினும், அதன் ஒட்டுமொத்த தோற்றம் சில முக்கியமான தகவல்களை வெளிப்படுத்துகிறது.
இந்த காரின் வடிவமைப்பு செங்குத்தான முன்பகுதி, உயரமான தோற்றம் மற்றும் பெட்டி போன்ற உடலமைப்பைக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது. ஜப்பான் சந்தையில் விற்பனையாகும் சுஸுகியின் சிறிய ரக கார்களின் வடிவமைப்பு அம்சங்கள் இதில் இடம்பெற்றுள்ளது தெரிய வந்துள்ளது. மேற்கூரையில் வழக்கமான ஆண்டெனா காணப்படுகிறது.
பின்புறத்தில் இணைக்கப்பட்ட எல்இடி விளக்குகள் இடம்பெறலாம் என முன்பு தகவல்கள் வெளியாகியிருந்தன. ஆனால் தற்போது வெளியாகியுள்ள காணொளியில் தனித்தனியாகப் பிரிக்கப்பட்ட பின்புற டெயில் விளக்குகள் இருக்கின்றன.
இந்த காரில் புதிய ஸ்விஃப்ட் மற்றும் டிசையர் கார்களில் பயன்படுத்தப்படும் 1.2 லிட்டர், மூன்று சிலிண்டர் Z12E பெட்ரோல் எஞ்சின் இதில் இடம்பெற அதிக வாய்ப்புள்ளது. இதனுடன் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஏஎம்டி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்படலாம். இதுகுறித்து நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.
மேலும், ஃப்ரான்க்ஸ் காரில் பயன்படுத்தப்படும் 1.0 லிட்டர் பூஸ்டர்ஜெட் டர்போ பெட்ரோல் எஞ்சினையும் மாருதி நிறுவனம் பரிசீலிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. டாடா பன்ச் காரிலும் டர்போ பெட்ரோல் தேர்வு அறிமுகமாகியுள்ளதால், இந்தப் போட்டியில் பின்தங்காமல் இருக்க மாருதி நிறுவனம் இந்த ஆப்ஷனை பரிசீலிக்க வாய்ப்புள்ளது.
சிஎன்ஜி எரிபொருள் தேர்வும் இந்த காரில் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. டாடா பன்ச் மற்றும் ஹூண்டாய் எக்ஸ்டர் கார்களில் தொழிற்சாலையிலேயே பொருத்தப்பட்ட சிஎன்ஜி வசதி உள்ளது. எனவே, மாருதியும் இதேபோன்ற தேர்வை வழங்கினால் குறைந்த பராமரிப்புச் செலவை விரும்பும் வாடிக்கையாளர்களைக் கவர முடியும்.
குறிப்பாக, சிஎன்ஜி சிலிண்டர் அமைப்பில் மாருதி என்ன மாற்றத்தைக் கொண்டுவரும் என்பது கவனிக்க வேண்டிய விஷயம். பூட்ரூம் இடத்தை அதிகமாகப் பயன்படுத்தாமல் இருக்க இரண்டு சிலிண்டர்கள் கொண்ட அமைப்பை வழங்குவது சிறந்ததாக இருக்கும்.
இந்தியாவில் மைக்ரோ எஸ்யூவி சந்தை வேகமாக வளர்ந்து வருகிறது. குறிப்பாக டாடா பன்ச் கார் தொடர்ந்து அதிக வாடிக்கையாளர்களைக் கவர்ந்து வருகிறது. கடந்த ஆறு மாதங்களில் மாதத்திற்கு சராசரியாக 20,548 கார்கள் விற்பனையாகியுள்ளன. இதில் பெட்ரோல் மற்றும் மின்சார பன்ச் கார்களின் விற்பனை எண்ணிக்கையும் சேர்க்கப்பட்டுள்ளது.
மறுபுறம், ஹூண்டாய் எக்ஸ்டர் காரும் இந்தச் சந்தையில் குறிப்பிடத்தக்க இடத்தைப் பிடித்துள்ளது. கடந்த ஆறு மாதங்களில் மாதத்திற்கு சராசரியாக 7,760 கார்கள் விற்பனையாகியுள்ளன. இந்த இரண்டு கார்களுக்கும் போட்டியாக மாருதி Y43 வருவதால், வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் தேர்வு கிடைக்கும்.
அடுத்த ஆண்டு மத்தியில் இந்த புதிய மைக்ரோ எஸ்யூவி காரை மாருதி சந்தைக்கு கொண்டு வரும் வாய்ப்பு உள்ளது. ரூ.5.50 லட்சம் ஆரம்ப விலையில் எதிர்பார்க்க முடியும். இந்த மாருதி Y43 கார் அறிமுகமானால், குறைந்த விலையில் எஸ்யூவி தோற்றத்துடன் புதிய கார் வாங்க விரும்புபவர்களுக்கு நல்ல தேர்வாக அமையும். குறிப்பாக, டாடா பன்ச் மற்றும் ஹூண்டாய் எக்ஸ்டர் கார்களுக்கு மாற்றுத் தேர்வாக இருக்கும்.


Click it and Unblock the Notifications


