பன்ச், எக்ஸ்டருக்கு இனி சிக்கல்... ரூ.5 லட்சத்தில் மாருதியின் புது மைக்ரோ எஸ்யூவி!!
அனைத்து ரக விலையிலும், செக்மென்ட்டிலும் எஸ்யூவி ரக கார் இருந்தால்தான் காலந்தள்ள முடியும் என்ற நிலை இந்திய கார் சந்தையில் உள்ளது. வாடிக்கையாளர்களை எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் விதத்தில், அனைத்து நிறுவனங்களும் பல்வேறு ரகங்களில் எஸ்யூவி ரக கார்களை களமிறக்கி வருகின்றன. ஆனால், ஹூண்டாய், டாடா மோட்டார்ஸ் உள்ளிட்ட சில நிறுவனங்கள் முன்கூட்டியே கணித்து எஸ்யூவிகளை களமிறக்கி வருகின்றன. அந்த வகையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் சாமர்த்தியமாக மைக்ரோ எஸ்யூவி ரகத்தில் பன்ச் என்ற மாடலை களமிறக்கியது.
டிசைன், வசதிகள், பாதுகாப்பு, விலை என அனைத்திலும் பன்ச் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த தேர்வாக மாறியது. இதனால், விற்பனையிலும் சக்கைப் போடு போட்டு வருகிறது. பன்ச் என்ற அந்த மைக்ரோ எஸ்யூவி மாடலை அறிமுகம் செய்ததற்கு கைமேல் டாடாவுக்கு பலன் கிட்டி வருகிறது. மறுபுறத்தில் மாருதி நிறுவனம் இதே ரகத்தில் பல சிறிய கார்களை வைத்திருந்தாலும், டாடா பன்ச் விற்பனை என்பது சற்று யோசிக்க வைத்துள்ளது. இதனால், அந்த ரகத்தில் ஒரு சரியான மாடலை களமிறக்கும் முயற்சியில் இறங்கி இருக்கிறது.

இதற்காக, ஜப்பானில் சுஸுகி பிராண்டில் விற்பனை செய்யப்படும் ஹஸ்லர் என்ற மைக்ரோ பிரிவிலான சிறிய காரின் அடிப்படையிலான புதிய மாடலை இந்தியாவில் கொண்டு வருவது குறித்து முயற்சிகளை எடுத்து வருகிறது. அண்மையில் இந்த கார் இந்திய மண்ணில் வைத்து சோதனை செய்யப்படும் வீடியோக்கள் வெளியாகின. பார்ப்பதற்கு ஜிம்னி எஸ்யூவியின் தம்பி போல இருக்கும் இந்த புதிய மாடல் க்ரவுண்ட் க்ளியரன்ஸ், உட்புற இடவசதி, குறுகலான பகுதிகளிலும் ஓட்டுவதற்கு எளிதான மாடலாக இருக்கும்.
தற்போது Y43 என்ற குறியீட்டுப் பெயரில் அழைக்கபப்டும் இந்த கார் 2024ம் ஆண்டு முதலே அவ்வப்போது சோதனை நடத்தி ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. டால்பாய் டிசைன் கான்செப்ட்டில் இருக்கும் இந்த ஹஸ்லர் அடிப்படையிலான மாடல் இந்தியாவில் பல்வேறு மாற்றங்களுடன் அறிமுகம் செய்யும் திட்டமும் உள்ளது. தற்போது மீண்டும் இந்தியாவில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்ட படங்கள் வெளியாகி இருப்பதால், மிக விரைவாக அறிமுகம் செய்யப்படும் வாய்ப்பு இருப்பதாகவே கருதலாம்.
ஆனால், வேகன் ஆர் உள்ளிட்ட கார்களில் பயன்படுத்தப்படும் 1.0 லிட்டர் மற்றும் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் தேர்வுகள் இந்த காரிலும் இடம்பெறும். மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வுகளில் வரலாம். ஆனால், இதுவரை இந்த புதிய மைக்ரோ எஸ்யூவி கார் குறித்த எந்த அதிகாரப்பூர்வ தகவலும் இல்லை.
எனினும், இந்தியாவில் அடுத்த 5 ஆண்டுகளில் 7 புதிய எஸ்யூவி கார்களை அறிமுகம் செய்ய இருப்பதாக அந்நிறுவனத்தின் உயர் அதிகாரி ஹிசாஷி டேக்குச்சி தெரிவித்துள்ளார். அதன்படி, புதிய வரிசையில் இந்த மைக்ரோ எஸ்யூவியும் நிச்சயம் இடம்பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இது மாருதி இக்னிஸ் காருக்கு மாற்றாகவும் களமிறக்கப்படும் என்று யூகமும் பரபரக்கிறது. ரூ.5 லட்சம் ஆரம்ப விலையில் வரும் வாய்ப்புள்ளதால், மாருதி பிரியர்களுக்கு இது நிச்சயம் சிறந்த தேர்வாக இருக்கும்.
Image Source: Delhisupercars@instagram


Click it and Unblock the Notifications

