மாருதி ஸ்விஃப்ட், டிசையர், பலேனோ கார்களில் CNG ஆட்டோமேட்டிக்! விலை, மைலேஜ் இதோ
இந்திய வாகனச் சந்தையில் முன்னணி நிறுவனமான மாருதி தனது பிரபலமான கார் மாடல்களான ஸ்விஃப்ட், டிசையர் மற்றும் பலேனோ ஆகியவற்றில் ஆட்டோமேட்டிக் சிஎன்ஜி தேர்வில் அறிமுகம் செய்துள்ளது. ஆட்டோ க்ரீன் மிஷன் என்ற திட்டத்தின் பெயரில் இந்த மூன்று கார்களையும் அந்நிறுவனம் சநதைக்கு கொண்டு வந்துள்ளது.
நகர்ப்புறங்களில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலில் கிளட்ச் பிடித்து கியர் மாற்றுவது பெரிய சவாலாக மாறியுள்ளது. அதேபோன்று, எரிபொருள் செலவைக் குறைக்கும் நோக்குடன் தற்போது வாடிக்கையாளர்கள் சிஎன்ஜி எரிபொருள் கார்களை அதிக அளவில் வாங்க தொடங்கி உள்ளனர். இதனை மனதில்வைத்து, ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் வசதியை ஸ்ஃவிஃப்ட், டிசையர் மற்றும் பலேனோ கார்களில் கொண்டு வந்துள்ளது.

இந்த மூன்று கார்களிலுமே 3 சிலிண்டர்கள் கொண்ட 1.2 லிட்டர் Z12E எஞ்சின் பயன்படுத்தப்பட்டுள்ளது. பெட்ரோல் மோடில் இயங்கும்போது இந்த எஞ்சின் 83 பிஎஸ் பவரையும், 113 என்எம் டார்க் திறனையும் வழங்கும். இதுவே சிஎன்ஜி மோடில் இயங்கும்போது 70 பிஎஸ் பவரையும் 102 என்எம் டார்க்கையும் வழங்கும்.
நகரப் போக்குவரத்திற்கு ஏற்றவாறு 5-ஸ்பீடு ஏஎம்டி கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. மேலும், தேவைப்பட்டால் கிளட்ச் இல்லாமலேயே மேனுவலாகவும் கியர் மாற்றிக்கொள்ளும் வசதியும் இதில் வழங்கப்பட்டு இருக்கிறது.
மாருதி ஸ்விஃப்ட் காரின் சிஎன்ஜி ஏஎம்டி கியர்பாக்ஸ் மாடலானது ஒரு கிலோ சிஎன்ஜி எரிபொருளுக்கு 34.47 கிமீ மைலேஜையும், டிசையர் சிஎன்ஜி ஏஎம்டி மாடலானது கிலோவுக்கு 36.47 கிமீ மைலேஜையும், பலேனோ சிஎன்ஜி ஏஎம்டி மாடலானது கிலோவுக்கு 35.34 கிமீ மைலேஜையும் வழங்கும் என்று நிறுவனம் அனுப்பி உள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
பாதுகாப்பை உறுதிசெய்ய, துருப்பிடிக்காத ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் குழாய் இணைப்புகள், மின்கசிவு ஏற்படுவதை தடுக்கும் வகையிலான பிரத்யேக ஒயரிங் அமைப்புகள், சிஎன்ஜி எரிபொருள் நிரப்பும்போது கார் எஞ்சின் ஸ்டார்ட் ஆவதை தவிர்க்கும் மைக்ரோஸ்விட்ச் ஆகிய பல பாதுகாப்பு வசதிகள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன.
மாருதி ஸ்விஃப்ட் காரின் சிஎன்ஜி ஏஎம்டி மாடலானது ரூ.7.92 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையிலிருந்து கிடைக்கிறது. டிசையர் சிஎன்ஜி ஏஎம்டி மாடலானது ரூ.8.53 லட்சத்தில் இருந்தும், பலேனோ சிஎன்ஜி ஏஎம்டி மாடல் ரூ.8.32 லட்சத்தில் இருந்து கிடைக்கும்.
குறைந்த பராமரிப்புச் செலவு, அதிக மைலேஜ் மற்றும் நெரிசலான நகர்ப்புறப் பயணங்களுக்கு ஏற்ற ஆட்டோமேட்டிக் வசதி ஆகியவற்றை ஒன்றாக எதிர்பார்க்கும் வாடிக்கையாளர்களுக்கு மாருதியின் இந்த புதிய சிஎன்ஜி ஆட்டோமேட்டிக் மாடல்கள் சிறந்த தேர்வாக இருக்கும் என்று கூறலாம்.


Click it and Unblock the Notifications


