4 புதிய எஸ்யூவிக்களை களமிறக்கும் மாருதி.. 5 லட்சம் விலை.. 40 கிமீ மைலேஜ்.. டர்போ இன்ஜின் எல்லாமே இருக்கு!
இப்போதைக்கு இந்தியாவில் எஸ்யூவிக்களின் மீதான மோகம் குறையாது என்றே தெரிகிறது. எனவே இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பாளரான மாருதி சுஸூகி நான்கு புதிய மற்றும் அப்டேட் செய்யப்பட்ட எஸ்யூவிக்களை வெளியிடத் தயாராகி வருகிறது. மாருதி புதிதாக உருவாக்கி வரும் இந்த நான்கு எஸ்யூவிக்கள் எவை எவை என்று பார்க்கலாம்.
Y43 மைக்ரோ எஸ்யூவி:
Y43 என்ற குறியீட்டுப் பெயரில் கடந்த சில ஆண்டுகளாகவே புதிய எஸ்யூவி ஒன்றை மாருதி உருவாக்கி வருகிறது. டாடா பன்ச் மற்றும் ஹூண்டாய் எக்ஸ்டர் ஆகிய சிறிய எஸ்யூவிக்களுக்குப் போட்டியாக இந்தக் காரை வெளியிட மாருதி திட்டமிட்டுள்ளது. இந்தப் புதிய காருக்கு லைன்-அப்பில் இடமளிக்கும் வகையிலேயே இக்னிஸ் ப்ரீமியம் ஹேட்ச்பேக்கின் விற்பனையையும் நிறுத்த மாருதி திட்டமிட்டிருப்பதாக சமீபத்தில் தகவல்கள் வெளியானது.

தற்போது பிரெஸ்ஸா தான் மாருதியின் குறைவான விலை கொண்ட எஸ்யூவி காராக இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 8.26 லட்சம் ரூபாய் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் தொடங்கி இந்த எஸ்யூவி கார் விற்பனை செய்யப்படுகிறது. இதனை விடக் குறைவாக 5 லட்சம் ரூபாயை ஒட்டிய விலையில் புதிய மைக்ரோ எஸ்யூவி காரை மாருதி வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஸ்விஃப்ட் ஹேட்ச்பேக் மற்றும் டிசையர் செடான் ஆகிய மாருதி கார்களில் பயன்படுத்தப்பட்டு வரும் 1.2 லிட்டர், Z12E பெட்ரோல் இன்ஜினையே புதிய மைக்ரோ எஸ்யூவியிலும் அந்நிறுவனம் கொடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பெட்ரோல் இன்ஜினுடன் CNG பவர்ட்ரெயின் தேர்வையும் புதிய காரில் மாருதி கொடுக்க அதிக வாய்ப்புகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

மாருதி பிரெஸ்ஸா ஃபேஸ்லிப்ட்:
விலை குறைவான புதிய எஸ்யூவி அறிமுகப்படுத்துவதோடு, தற்போது விலை குறைவான எஸ்யூவியாக தாங்கள் விற்பனை செய்து வரும் பிரெஸ்ஸாவையும் அப்டேட் செய்ய மாருதி சுஸூகி திட்டமிட்டிருக்கிறது. கடந்த சில மாதங்களாக அப்டேட் செய்யப்பட்ட பிரெஸ்ஸா ஃபேஸ்லிப்டை முழுவதும் மறைக்கப்பட்ட வகையில் இந்திய சாலைகளில் அந்நிறுவனம் சோதனை செய்தும் வருகிறது.
பெரிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், புதிய இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், வென்டிலேட் செய்யப்பட்ட சீட்கள் ஆகிய மேம்பட்ட அம்சங்கள் பிரெஸ்ஸா ஃபேஸ்லிப்டில் எதிர்பார்க்கப்படுகின்றன. இந்தக் சப்-காம்பேக்ட் எஸ்யூவியில் தற்போது 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் தேர்வு மட்டுமே கொடுக்கப்பட்டிருக்கிறது. ஃபேஸ்லிப்ட் மாடலுடன் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் தேர்வையும் மாருதி கொடுக்கவிருப்பதாகத் தகவல்கள் கூறுகின்றன.
CNG வடிவிலும் இந்த பிரெஸ்ஸா எஸ்யூவி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தற்போதைய காரில் CNG டேங்கானது பூட்ஸ்பேஸிலேயே கொடுக்கப்பட்டு வருகிறது. மேம்படுத்தப்படும் புதிய காரில் அண்டர்பாடி CNG டேங்கைக் கொடுக்க மாருதி திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த வசதியினை முதலில் கடந்தாண்டு வெளியிட்ட விக்டோரிஸ் மிட்-சைஸ் எஸ்யூவி மாருதி அறிமுகப்படுத்தியது. அதனைத் தொடர்ந்து பிரெஸ்ஸாவிலும் கொடுக்கவிருப்பதாகத் தெரிகிறது. அடுத்த சில மாதங்களில் புதிய பிரெஸ்ஸாவின் வெளியீடு எதிர்பார்க்கப்படுகிறது.
மாருதி ஃபிராங்க்ஸ் ஹைபிரிட்:
மாருதியின் கிராஸ்ஓவர் எஸ்யூவியாக சப்-காம்பேக்ட் பிரிவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது ஃபிராங்க்ஸ். தற்போது பெட்ரோல் மற்றும் CNG பவர்ட்ரெயின்களுடன் மட்டுமே இந்தக் கார் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. விரைவில் இதனை மாருதி அப்டேட் செய்யவிருக்கும் நிலையில், அத்துடன் ஹைபிரிட் பவர்ட்ரெயினையும் கொடுக்கலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
2023ல் வெளியிடப்பட்ட இந்த எஸ்யூவி மாருதிக்கு அதிகம் விற்பனை செய்யப்படும் கார்களில் ஒன்றாக இருந்து வருகிறது. இந்தக் காரில் சீரிஸ் ஹைபிரிட் பவர்ட்ரெயினை மாருதி கொடுக்கவிருக்கிறது மாருதி. தற்போது 1.2 லிட்டர் K சீரிஸ் பெட்ரோல் இன்ஜினே ஃபிராங்க்ஸ் மாடலில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதற்கு மாற்றாக 1.2 லிட்டர் Z12E பெட்ரோல் இன்ஜினுடன் கூடிய சீரிஸ் ஹைபிரிட் செட்டப்பை இந்தக் காரில் அந்நிறுவனம் கொடுக்கவுள்ளது.
இந்தப் புதிய ஹைபிரிட் பவர்ட்ரெயினானது லிட்டருக்கு 35 கிமீ முதல் 40 கிமீ வரையிலான மைலேஜைக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஹைபிரிட் பவர்ட்ரெயின் கொடுக்கப்படுவதுடன் காருக்கான ஃபேஸ்லிப்ட் அப்டேட்டையும் மாருதி செய்யவிருக்கிறது. இந்த மேம்படுத்தப்பட்ட புதிய பவர்ட்ரெயின் கொண்ட ஃபிராங்கஸ் எஸ்யூவியானது இந்தாண்டு பண்டிகை காலத்தையொட்டி செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய 7 சீட்டர் எஸ்யூவி:
நான்காவதாக மாருதி இந்தியாவில் வெளியிடத் திட்டமிட்டிருப்பது ஒரு 7 சீட்டர் எஸ்யூவியாகும். தற்போது இரண்டு வரிசையாக 5 சீட்கள் கொண்ட கிராண்டு விட்டாரா என்ற மிட்-சைஸ் எஸ்யூவியை மாருதி விற்பனை செய்து வருகிறது. இதனை அடிப்படையாகக் கொண்டு மூன்று வரிசையாக 7 சீட்கள் கொண்ட புதிய எஸ்யூவி மாடல் ஒன்றை அந்நிறுவனம் உருவாக்கி வருகிறது.
கிராண்டு விட்டாராவை விட சற்று ப்ரீமியமான எஸ்யூவியாக வெளியிடவிருக்கும் இதனை Y17 என்ற குறியீட்டுப் பெயரில் அழைத்து வருகிறது மாருதி. இந்தியாவில் தற்போது விற்பனையில் இருக்கும் மஹிந்திரா XUV 7XO, டாடா சஃபாரி, ஹூண்டாய் அல்கஸார், எம்ஜி ஹெக்டர் பிளஸ் ஆகிய மூன்று வரிசை சீட்கள் கொண்ட எஸ்யூவிக்களுக்குப் போட்டியாக புதிய மாருதி எஸ்யூவி விற்பனை செய்யப்படவுள்ளது.
கிராண்டு விட்டாராவில் இருக்கும் அதே இன்ஜின் மற்றும் பவர்ட்ரெயின் செட்டப்புகளே புதிய எஸ்யூவியிலும் கொடுக்கப்படவுள்ளன. பனோரமிக் சன்ரூஃப், வென்டிேட் செய்யப்பட்ட சீட்கள், வயர்லெஸ் சார்ஜர், 360 டிகிரி கேமரா, லெவல் 2 ADAS பாதுகாப்பு அம்சங்கள் உள்ளிட்ட ப்ரீமியமான வசதிகளை இந்தக் காரில் நாம் எதிர்பார்க்கலாம். 18 லட்சம் ரூபாய் முதல் 25 லட்சம் ரூபாய்க்கு உள்ளே இந்தப் புதிய எஸ்யூவியின் விலை நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து:
சிறிய மைக்ரோ எஸ்யூவிக்கள் பிரிவிலும், 7 சீட்டர் எஸ்யூவிக்கள் பிரிவிலும் மாருதியின் கார்கள் எதுவும் தற்போது விற்பனையில் இல்லை. இதுவரை ஸ்விஃப்ட், டிசையர், ஆல்டோ என சிறிய ரக மற்றும் பட்ஜெட் கார்களிலேயே மாருதி அதிக கவனம் செலுத்தி வந்தது. இப்போது தான் வாடிக்கையாளர்கள் அதிகம் விரும்பும் எஸ்யூவிக்கள் பக்கம் தங்களது கவனத்தைத் திருப்பியிருக்கிறது.
எஸ்யூவிக்கள் பிரிவில் இப்போது டாப் கியரில் வேலை செய்யத் தொடங்கியிருக்கிறது மாருதி. இதுவரை தாங்கள் இல்லாத இரண்டு பிரிவிலும் புதிய கார்களை வெளியிடுவதோடு, ஏற்கனவே விற்பனையில் இருக்கும் இரண்டு காம்பேக்ட் எஸ்யூவிக்களையும் வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கும் கூடுதல் வசதிகளோடு அப்டேட் செய்யவிருக்கிறது. பிரெஸ்ஸாவில் டர்போ பெட்ரோல் இன்ஜினைக் கொடுப்பதும், ஃபிராங்க்ஸில் ஹைபிரிட் பவர்ட்ரெயினைக் கொடுப்பதும் மாருதியின் மாஸ்டர்ஸ்ட்ரோக்காக இருக்கும்.
இந்த இரண்டு புதிய எஸ்யவிகளின் வெளியீடும், ஏற்கனவே இருக்கும் இரண்டு எஸ்யூவிக்களின் அப்டேட்டும் மாருதியின் விற்பனையையும் அதன் மதிப்பையும் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லவிருக்கின்றன. கடந்த ஆண்டு யாரும் எதிர்பார்க்காத வகையில் விக்டோரிஸ் எஸ்யூவியை வெளியிட்டு அதிர்ச்சியளித்த மாருதி, இந்த வருடமும் சந்தையில் சில ஆச்சரியங்களைக் கொடுக்கவிருக்கிறது.


Click it and Unblock the Notifications