என்னப்பா.. அப்புறம் மாருதிய ஹேட்ச்பேக் கிங்குனு அறிவிச்சிடலாமா.!
செடான்கள் அளவிற்கு இல்லையென்றாலும், தற்போதைய எஸ்யூவி அலையில் ஹேட்ச்பேக் கார்கள் கொஞ்சம் தாக்குப் பிடித்து வருகின்றன. ஆனால் அதற்கு முக்கியமான ஒரேயொரு நிறுவனம் மாருதி தான். எஸ்யூவிக்களைத் தவிர்த்து செடான் மற்றும் ஹேட்ச்பேக் உள்ளிட்ட மற்ற கார் பிரிவுகளை இன்னும் உயிர்ப்புடன் வைத்திருப்பது மாருதி மட்டுமே. மே மாத ஹேட்ச்பேக் விற்பனையைப் பார்த்தால் இதனை இன்னும் தெளிவாகப் புரிந்து கொள்ளலாம்.
கடந்த மே மாதம் இந்தியாவில் சுமார் 92,837 ஹேட்சபேக் கார்கள் விற்பனையாகியிருக்கின்றன. அதில் 73,284 கார்கள், அதாவது சுமார் 78.94 சதவீதம் மாருதியின் ஹேட்ச்பேக் கார்கள் தான். ஹூண்டாய், டாடா மோட்டார்ஸ், டொயோட்டா, எம்ஜி, சிட்ரன் மற்றும் ரெனோ ஆகிய ஹேட்ச்பேக் கார்களின் விற்பனை கடந்த மே மாதம் வெறும் 21.06 சதவீதம் மட்டும் தான். அதாவது இந்தியாவில் விற்பனை செய்யப்படும் நான்கு ஹேட்ச்பேக்குகளில் மூன்று மாருதியினுடையது.

கடந்தாண்டு மே மாதம் ஒட்டுமொத்த ஹேட்ச்பேக் விற்பனையில் மாருதி கார்களின் பங்கு 67.74 சதவீதமாக மட்டுமே இருந்தது. இந்தாண்டு அது மேலும் 11 சதவீதம் உயர்ந்திருக்கிறது. இத்தனைக்கும் கடந்தாண்டுடன் ஒப்பிடும் போது இந்தாண்டு மாருதியின் ஒரு ஹேட்ச்பேக் மாடலின் விற்பனை கிட்டத்தட்ட நிறுத்தப்பட்டுவிட்டது.
இந்தியாவில் அதிகம் விற்பனை செய்யப்பட்ட ஹேட்ச்பேக்குகளின் பட்டியலில் முதல் ஐந்து இடங்களில் மாருதியின் கார்களே இருக்கின்றன. பெலினோ, வேகன் ஆர் மற்றும் ஸ்விஃப்ட் ஆகிய மூன்று மாடல்களும் 15,000 யூனிட்டுகளுக்கும் மேலான விற்பனையுடன் முறையே முதல் மூன்று இடங்களைப் பிடித்திருக்கும் நிலையில், ஆல்டோ மாடலானது 10,000 யூனிட்டுகளுக்கு இணையான விற்பனையுடன் நான்காம் இடத்தையும், 6,500 யூனிட்டுகளுக்கு இணையான விற்பனையுடன் எஸ்-பிரஸ்ஸோ ஐந்தாம் இடத்தையும் பிடித்துள்ளன.

கடந்தாண்டுடன ஒப்பிடும் போது எஸ்-பிரஸ்ஸோவின் விற்பனை 254 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. தற்போதைய நிலையில் இந்தியாவின் மிகவும் குறைவான கார் என்றால் அது மாருதி எஸ்-பிரஸ்ஸோ தான். மூன்றரை லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலைக்கே தற்போது இந்தக் காரை நாம் வாங்க முடியும். கடந்தாண்டு செப்டம்பர் மாதம் ஜிஎஸ்டி வரிக்குறைப்பு செய்த போது எஸ்-பிரஸ்ஸோவின் விலையும் வெகுவாகக் குறைந்தது. இதனால் தற்போது அதன் விற்பனை இரண்டை மடங்கு உயர்ந்திருக்கிறது.
எஸ்-பிரஸ்ஸோ மட்டுமின்றி மாருதியின் மற்ற ஹேட்ச்பேக் கார்களும் விற்பனை வளர்ச்சியையே பதிவு செய்துள்ளன. ஆல்டோ மாடலின் விற்பனை 98 சதவீதம் வரை உயர்ந்திருக்கும் நிலையில், முதலிரண்டு இடங்களில் இருக்கும் பெலினோ மற்றும் வேகன் ஆகின் விற்பனை முறையே 58 சதவீதம் மற்றும் 29 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. ஸ்விஃப்டின் விற்பனை 24 சதவீதம் வரை குறைந்திருக்கிறது.
மாருதியைத் தவிர்த்து ஹூண்டாய் i20 மற்றும் டாடா டியாகோ ஆகிய ஹேட்ச்பேக் கார்கள் முறையே 4,749 யூனிட்டுகள் மற்றும் 4,178 யூனிட்டுகள் விற்பனையைப் பதிவு செய்துள்ளன. டொயோட்டா கிளான்ஸா மற்றும் ஹூண்டாயின் விலை குறைவான கிராண்டு i10 நியாஸ் ஆகிய ஹேட்ச்பேக் கார்கள் முறையே 3,198 யூனிட்டுகள் மற்றும் 2,920 யூனிட்டுகள் விற்பனையைப் பதிவு செய்துள்ளன. டாடாவின் ப்ரீமியம் ஹேட்ச்பேக்கான ஆல்ட்ராஸ் கடந்த மே மாதம் 2,915 யூனிட்டுகள் விற்பனையாகியிருக்கிறது.
இவற்றைத் தவிர்த்து எம்ஜி காமெட் EV 1,000 யூனிட்டுகளுக்கும் குறைவாகவும், சிட்ரன் C3 மற்றும் ரெனோ க்விட் ஆகிய ஹேட்ச்பேக் கார்கள் 400 யூனிட்டுகளுக்கும் குறைவாகவும் கடந்த மே மாதம் விற்பனையாகியிருக்கிறது. மாருதி இக்னிஸ் கடந்த மே மாதம் ஒரு யூனிட் கூட விற்பனையாகவில்லை. நெக்ஸா டீலர்ஷிப் நெட்வொர்க் மூலமாக இந்த இக்னிஸ் ஹேட்ச்பேக் மாடலை மாருதி விற்பனை செய்து வந்தது. இதன் விற்பனையை மாருதி நிறுத்தவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகி வருவது குறிப்பிடத்தக்கது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த விற்பனை விவரங்களைப் பார்க்கும் போது கண்களை மூடிக் கொண்டு மாருதியை இந்தியாவின் ஹேட்ச்பேக் கிங் என்று அறிவித்துவிடலாம். அதிக கார்கள் விற்பனையாகின்றன என்பதை விட, எஸ்-பிரஸ்ஸோ, ஆல்டோ, செலரியோ மற்றும் வேகன் ஆர் ஆகிய கார்களை மாருதி தொடர்ந்து விற்பனையில் வைத்திருப்பது மிகவும் முக்கியம். இருசக்கர வாகனங்களில் இருந்து நான்கு சக்கர வாகனங்களுக்கு மாற விரும்புபவர்களுக்கான குறைவான விலை கொண்ட தேர்வுகளாக இந்தக் கார்களே இருக்கின்றன.


Click it and Unblock the Notifications