அதிரடியாக விலை குறைக்கப்பட்ட மாருதி எஸ்யூவி
இந்தியாவில் அனைத்து ஆட்டோமொபைல் நிறுவனங்களும் தங்களுடைய கார்களின் விலையை உயர்த்தி வரும் நிலையில், மாருதி மட்டும் எஸ்யூவி ஒன்றின் விலையைக் குறைத்து அறிவித்துள்ளது. அதுவும் அதிகம் விற்பனையாகும் ஒரு எஸ்யூவியின் விலையை. நாம் இங்கே பேசிக் கொண்டிருப்பது மாருதியின் விக்டோரிஸ் எஸ்யூவியைப் பற்றித் தான்.
இந்தியாவில் தற்போது கிரெட்டாவிற்கு அடுத்தபடியாக அதிகம் விற்பனை செய்யப்படும் C செக்மென்ட் எஸ்யூவியாக விக்டோரிஸ் உள்ளது. இருந்தும் இந்தக் காரின் விலையை மாருதி குறைத்துள்ளது. ஆனால் அனைத்து வேரியன்ட்களுக்கும் இல்லை. குறிப்பிட்ட சில வேரியன்ட்களின் விலையை மட்டுமே குறைத்துள்ளது. அந்த வேரியன்ட்களை மட்டும் தற்போதிருந்து குறைக்கப்பட்ட விலையில் வாடிக்கையாளர்கள் வாங்கலாம்.

விக்டோரிஸ் எஸ்யூவியை LXi, VXi, ZXi, ZXi (O), ZXi பிளஸ் மற்றும் ZXi பிளஸ் (O) என ஆறு வேரியன்ட்களாக விற்பனை செய்து வருகிறது மாருதி சுஸூகி. இதில் ZXi (O) மற்றும் ZXi பிளஸ் (O) ஆகிய வேரியன்ட்களின் விலையை மட்டுமே தற்போது அந்நிறுவனம் குறைத்திருக்கிறது.
1.5 லிட்டர் NA பெட்ரோல், 1.5 லிட்டர் பெட்ரோல் + CNG மற்றும் 1.5 லிட்டர் பெட்ரோல் ஹைபிரிட் என மூன்று விதமான பவர்ட்ரெயின் தேர்வுகளை விக்டோரிஸ் கொண்டுள்ளது. இதில் மேலே கூறிய வேரியன்ட்களின் NA பெட்ரோல் இன்ஜின் கொண்ட ட்ரிம்களின் விலையை மட்டும் 38,900 வரை குறைத்துள்ளது மாருதி சுஸூகி.

விக்டோரிஸ் ZXi (O) பெட்ரோல் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் வேரியன்ட்களானது இதுவரை முறையே 14.08 லட்சம் ரூபாய் மற்றும் 15.64 லட்சம் ரூபாய் ஆகிய எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், இனி அவற்றை 13.69 லட்சம் ரூபாய் மற்றும் 15.25 லட்சம் ரூபாய் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் நாம் வாங்கலாம்.
அதேபோல், விக்டோரிஸ் ZXi பிளஸ் (O) பெட்ரோல் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் வேரியன்ட்களானது இதுவரை முறையே 15.82 லட்சம் ரூபாய் மற்றும் 17.77 லட்சம் ரூபாய் ஆகிய எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், இனி அவற்றை 15.43 லட்சம் ரூபாய் மற்றும் 17.38 லட்சம் ரூபாய் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் வாடிக்கையாளர்கள் வாங்கலாம்.
மாருதி விக்டோரிஸ் எஸ்யூவியின் மற்ற வேரியன்ட்களின் விலையில் எந்த மாற்றமும் இல்லை. 10.50 லட்சம் ரூபாய் முதல் 19.99 லட்சம் ரூபாய் வகையிலான எக்ஸ்-ஷோரூம் விலையில் இந்த மிட்-சைஸ் எஸ்யூவி இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதன் ஸ்ட்ராங் ஹைபிரிட் பவர்ட்ரெயின் கொண்ட வேரியன்டை 16.38 லட்சம் ரூபாய் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் தொடங்கி நாம் வாங்க முடியும்.
இந்தியாவில் அனைத்து வசதிகளையும் கொண்ட ஒரு எஸ்யூவியாக இந்த மாருதி விக்டோரிஸ் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக பவர்டு டெயில்கேட், லெவல் 2 ADAS, TFT இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், அண்டர்பாடி CNG டேங்க் ஆகிய வசதிகள் அனைத்தையும் கொண்டிருக்கும் ஒரே மாருதி எரிபொருள் கார் இந்த விக்டோரிஸ் எஸ்யூவி தான் என்பது குறிப்பிடத்தக்கது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து:
நமக்குக் கிடைத்த தகவல்களின்படி இந்த விக்டோரிஸ் எஸ்யூவியின் CNG வேரியன்ட்களையே வாடிக்கையாளர்கள் அதிகளவில் வாங்க முன்வருகிறார்கள். இதன் காரணமாகக் கூட உயர்நிலை பெட்ரோல் வேரியன்ட்களின் விலையை மாருதி குறைத்திருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் குறிப்பிட்ட வாடிக்கையாளர்களை CNG-யில் இருந்து பெட்ரோலுக்கு இழுக்கலாம் என மாருதி நினைப்பதாகத் தெரிகிறது. எப்படி இருந்தாலும் இந்த விலைக் குறைப்பு வாடிக்கையாளர்களுக்கு ஒரு நற்செய்தி தான். இது விக்டோரிஸின் விற்பனையை இன்னும் உயர்த்தவே வழிவகுக்கும்.


Click it and Unblock the Notifications