மைலேஜை அள்ளிக் கொடுக்கப்போகும் மாருதி கார்.. அதுவும் ரொம்ப ரொம்ப கம்மி விலையில!
2025ல் விக்டோரிஸ் எஸ்யூவியின் வெளியீடு மூலமாக சந்தையை ஒரு கலக்கு கலக்கியது மாருதி சுஸூகி. தற்போது இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் ஒரு கார் மாடலாக இருக்கிறது விக்டோரிஸ். ஹூண்டாய் கிரெட்டாவுக்குப் பின்பு சற்று ப்ரீமியமான விலையுடன் அதிகம் டாப் 10 கார்களில் இடம்பிடித்தது விக்டோரிஸ் தான். ஆனால் இப்போது நாம் பார்க்கப்போவது விக்டோரிஸைப் பற்றி அல்ல.
மாருதி புதிதாக உருவாக்கி வரும் மைக்ரோ எஸ்யூவி மாடலைப் பற்றி. ஆம், டாடா பன்ச் மற்றும் ஹூண்டாய் எக்ஸ்டர் ஆகிய கார்களுக்குப் போட்டியாக புதிய மைக்ரோ எஸ்யூவி மாடல் ஒன்றை உருவாக்கி வருகிறது மாருதி. இந்தியாவில் தற்போது அதிகம் விற்பனையாகும் கார் மாடல்களில் ஒன்றாக இருக்கிறது டாடா பன்ச். வாடிக்கையாளர்கள் எதிர்பார்ப்பது போல எஸ்யூவி போலான டிசைன், ஆனால் குறைவான விலையில் என்பது தான் பன்ச் மாடலின் வெற்றிக்குக் காரணம்.

குறைவான விலை கொண்ட கார்களில் கிங் என்றால் அது மாருதி தான். இத்தனை ஆண்டுகள் இந்த மைக்ரோ எஸ்யூவி பிரிவில் மாருதி கால் பதிக்காமல் இருந்ததே ஆச்சரியம் தான். மாருதி குறைவான விலை கொண்ட ஹேட்ச்பேக்கில் அதிக கவனம் செலுத்தி வந்ததால், தொடக்கநிலை எஸ்யூவி பிரிவில் கவனம் செலுத்தாமல் விட்டுவிட்டது. தற்போது பிரெஸ்ஸா தான் மாருதியின் அறிமுக எஸ்யூவி மாடலாக இருக்கிறது. சப்-காம்பேக்ட் எஸ்யூவி பிரிவில் விற்பனை செய்யப்படும் இந்த பிரெஸ்ஸா மாடலானது ரூ.8.26 லட்சம் என்ற விலையில் தொடங்கி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தான் இதனை விட குறைவான விலையில், பிரெஸ்ஸாவை விட சற்று சிறிய அளவில், பன்ச் எஸ்யூவிக்கு நேரடிப் போட்டியாக புதிய மைக்ரோ எஸ்யூவி மாடலை 2027ல் வெளியிடத் திட்டமிட்டுள்ளது மாருதி சுஸூகி. டாடா பன்ச் மாடலானது ரூ.5.59 லட்சம் என்ற விலையில் தொடங்கி இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. எனவே, புதிய காரை இதனை விட குறைவான விலையிலேயே மாருதி பிளேஸ் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பன்ச் எஸ்யூவியை விட ரூ.30,000 முதல் ரூ.40,000 வரை குறைவான விலையில் புதிய மைக்ரோ எஸ்யூவியை மாருதி வெளியிடும் பட்சத்தில் அது பெரியளவில் விற்பனையில் தாக்கத்தை ஏற்படுத்தும். மேலும், விற்பனையிலும் மற்ற கார்களை பின்தள்ளி முதலிடம் பிடிக்கும் வாய்ப்புகளும் மாருதியின் புதிய மைக்ரோ எஸ்யூவிக்கு நிறையவே இருக்கின்றன. Y43 என்ற குறியீட்டுப் பெயரில் இந்தப் புதிய எஸ்யூவியை உருவாக்கி வருகிறது மாருதி.
முன்னர் ஆல்டோ K10, எஸ்-பிரஸ்ஸோ உள்ளிட்ட மாருதியின் சிறிய ரக கார்களே அந்நிறுவனத்திற்கு அதிக விற்பனையைக் கொடுக்கும் கார் மாடல்களாக இருந்து வந்தன. ஆனால், தற்போது இந்திய வாடிக்கையாளர்களின் மனநிலை மாறியிருக்கிறது. சற்று கூடுதலாக செலவழித்தாலும் கூட, கூடுதல் வசதிகள் கொண்ட பாதுகாப்பான காரை வாங்கவே இந்திய வாடிக்கையாளர்கள் விரும்புகிறார்கள். எனவே தான் மிகவும் குறைவான விலை கொண்ட ஆல்டோ K10-ஐ விட, பிராக்டிகலான வசதிகள் கொண்ட வேகன் ஆரும், பாதுகாப்பான காராக அறியப்படும் பன்ச்-ம் அதிகம் விற்பனை செய்யும் மாடல்களாக ஆகியிருக்கின்றன.
1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜினே புதிய காரில் கொடுக்கப்படும் எனத் தெரிகிறது. பல்வேறு விதமான மேம்பட்ட வசதிகளை இந்தக் காரில் மாருதி கொடுக்கும் என்றாலும், அடிப்படை வேரியன்டில் அவற்றை நாம் எதிர்பார்க்க முடியாது. சிறிய ரக கார் என்பதால் கண்டிப்பாக ஒரு மாருதி காரில் வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கும் மைலேஜை இந்தக் காரும் கொண்டிருக்கும். லிட்டருக்கு 18 கிமீ முதல் 25 கிமீ வரையிலான மைலேஜை இந்தக் கார் கொண்டுருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மைல்டு ஹைபிரிட் தொழில்நுட்பத்தையும் இந்தக் காரில் மாருதி கொடுக்கும் பட்சத்தில் லிட்டருக்கு 30 கிமீ வரையிலான மைலேஜைக் கூட நாம் எதிர்பார்க்கலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மைக்ரோ எஸ்யூவி பிரிவில் வெற்றிபெறுவதற்கான அனைத்து சாத்தியக்கூறுகளையும் கொண்ட ஒரே நிறுவனம் மாருதி தான். இந்தியாவில் எஸ்யூவி மோகம் அதிகம் இருக்கும் நிலையில், மாருதியின் மைக்ரோ எஸ்யூவி வெற்றி பெறுவதற்கான அனைத்து சாத்தியக்கூறுகளும் இருப்பதாகவே நாங்கள் நினைக்கிறோம். விலையையும், வசதிகளையும் பேலன்ஸ் செய்வதில் தான் மாருதியின் புதிய குறைவான விலை மைக்ரோ எஸ்யூவியின் வெற்றி இருக்கிறது.


Click it and Unblock the Notifications








