ரொம்ப பவர்ஃபுல்லான மெர்சிடிஸ்-ஏஎம்ஜி ஜிடி எலெக்ட்ரிக் எஸ்யூவி கார் வெளியீடு
மின்சார கார் சந்தையில் சொகுசு மற்றும் அதிவேக செயல்திறனை ஒருங்கிணைக்கும் வகையில் மெர்சிடிஸ்-ஏஎம்ஜி (Mercedes-AMG) நிறுவனம் கவனம் செலுத்தி வருகிறது. அந்த வகையில், மூன்று மின்மோட்டார்கள், அதிகபட்சமாக 1,169 எச்பி பவரையும் மற்றும் ஒருமுறை சார்ஜ் செய்தால் 700 கி.மீ. வரை ரேஞ்ச் வழங்கும் அதிசக்திவாய்ந்த எலெக்ட்ரிக் எஸ்யூவியை மெர்சிடிஸ் பென்ஸ் வெளியிட்டு இருக்கிறது.
இந்த கார் வழக்கமான சொகுசு எஸ்யூவி மாடல்களுக்கு மாற்றாக மட்டுமல்லாமல், அதிவேக செயல்திறனை விரும்பும் வாடிக்கையாளர்களையும் குறிவைத்து வர இருக்கிறது. இதன் மோட்டார் தொழில்நுட்பம், வேகம், பேட்டரி மற்றும் சார்ஜிங் திறன்கள் ஸ்போர்ட்ஸ் கார் விரும்பும் வாடிக்கையாளர்களை வெகுவாக கவரும்.

பவர்ஃபுல் கார்
இந்த எஸ்யூவியின் டாப் வேரியண்டான ஜிடி 63 (GT 63) மாடலில் மூன்று ஆக்சியல் ஃப்ளக்ஸ் (Axial Flux) மின்மோட்டார்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இவை அதிக சக்தியை விரைவாக வழங்குவதுடன், தொடர்ச்சியான செயல்திறனுக்கும் ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதன் அதிகபட்ச 1,169 எச்பி பவரை வெளிப்படுத்தும். பூஜ்ஜியத்திலிருந்து மணிக்கு 100 கிமீ வேகத்தை எட்டுவதற்கு வெறும் 2.5 வினாடிகள் மட்டுமே ஆகும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த மாடலில் ஏஎம்ஜி பெர்ஃபார்மன்ஸ் 4மேட்டிக்+ (AMG Performance 4MATIC+) ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. சூழலுக்கு ஏற்ப முன் மற்றும் பின் சக்கரங்களுக்கு அனுப்பப்படும் சக்தியை மாற்றியமைக்க முடியும். இதன் மூலம் வேகமான பயணத்தின்போதும் சாலையில் சிறந்த பிடிப்பையும் கட்டுப்பாட்டையும் வழங்கும் என மெர்சிடிஸ் பென்ஸ் தெரிவிக்கிறது.
700 கிமீ ரேஞ்ச்
இந்த எலெக்ட்ரிக் எஸ்யூவியில் 106 kWh மற்றும் 128 kWh என இரண்டு பேட்டரி தேர்வுகள் உள்ளன. டாப் வேரியண்டில் 128 kWh பேட்டரியுடன் அதிகபட்சமாக 700 கிமீ வரை பயணிக்கலாம் என WLTP சோதனை முறையில் தெரிவிக்கப்படுகிறது. ஜிடி 53 மாடலுக்கு அதிகபட்சமாக 668 கிமீ ரேஞ்ச் குறிப்பிடப்பட்டுள்ளது. நடைமுறை பயன்பாட்டில் இந்த ரேஞ்ச் வேறுபடும்.
மேலும், இதில் 800 வோல்ட் மின்சார கட்டமைப்பு இடம்பெற்றுள்ளது. அதிகபட்சமாக 710 கிலோவாட் திறனில் டிசி ஃபாஸ்ட் சார்ஜிங் செய்ய முடியும். மேலும், 10 நிமிடங்களில் 454 கிமீ வரை பயணிப்பதற்கான ரேஞ்சை பெற முடியும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆனால், இதற்குத் தகுந்த சார்ஜிங் நிலையம் மற்றும் கட்டமைப்பு அவசியம்.
நவீன தொழில்நுட்ப அம்சங்கள்
வெளிப்புறத்தில் ஸ்போர்ட்ஸ் கார்களின் வடிவமைப்பையும் எஸ்யூவியின் தோற்றத்தையும் இணைக்கும் வகையில் இந்த கார் உருவாக்கப்பட்டுள்ளது. ஆக்டிவ் ஏரோடைனமிக்ஸ், பின்புற ஸ்பாய்லர், பின்புறச் சக்கரங்களைத் திருப்பும் ரியர் வீல் ஸ்டீயரிங் வசதி உள்ளிட்ட தொழில்நுட்பங்கள் இடம்பெற்றுள்ளன. இதனுடன், ஏஎம்ஜி ஆக்டிவ் ரைடு கன்ட்ரோல்+ (AMG ACTIVE RIDE CONTROL+) சஸ்பென்ஷன் அமைப்பும் வழங்கப்படுகிறது. இது வளைவுகளில் காரின் சாய்வைக் கட்டுப்படுத்தவும், கார் நிலையாக செல்வதை உறுதி செய்யவும் உதவுகிறது.
காரின் உட்புறத்தில் 10.2 அங்குல டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் மற்றும் 14 அங்குல மல்டிமீடியா திரை உள்ளிட்ட வசதிகள் உள்ளன. பின்புற இருக்கைகளில் பயணிப்பவர்களுக்கும் போதுமான இடவசதியுடன் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த புதிய மெர்சிடிஸ்-ஏஎம்ஜி ஜிடி எஸ்யூவி, ஜிடி 53, ஜிடி 55, ஜிடி 63 என மூன்று வேரியண்ட்களில் கிடைக்கும்.
இதில் ஜிடி 53 முதலில் விற்பனைக்கு வர உள்ளதாகவும், அதிக சக்தி கொண்ட வேரியண்ட்டுகள் பின்னர் அறிமுகமாகும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் எப்போது இந்த மாடல் அறிமுகமாகும் என்பது குறித்த தகவல் இதுவரை வெளியிடப்படவில்லை. எனினும், அடுத்த ஆண்டு பிற்பகுதியில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.


Click it and Unblock the Notifications


