பென்ஸ், ஆடி கார்களை வாங்குவது கனவாகவே போய்டும் போலயே! எது நடக்க கூடாதுனு நெனைச்சமோ அது நடக்க போகுது!
மெர்சிடிஸ்-பென்ஸ் (Mercedes-Benz), ஆடி (Audi) நிறுவனங்கள் வழக்கம்போல் தங்களது கார்களின் விலைகளை உயர்த்த திட்டமிட்டுள்ளன. குறிப்பாக, பென்ஸ் கார் நிறுவனம் இந்த 2026ஆம் ஆண்டில் கொண்டுவரும் இரண்டாவது விலை அதிகரிப்பு இதுவாகும். வருகிற ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் இந்த விலை அதிகரிப்பு குறித்த கூடுதல் விபரங்களை இங்கே இந்த தொகுப்பில் காணலாம், வாங்க.
மார்ச் மாதம் முடிந்து ஏப்ரல் மாதம் துவங்குகிறது என்றாலே விலை அதிகரிப்புகளும் பின்தொடர்ந்து வரும் என்பது எழுதப்படாத விதி ஆகும். பெரும்பாலான ஆட்டோமொபைல் நிறுவனங்கள் மார்ச் மாதத்தோடு தங்களது வரவு செலவுகளை கணக்கிட்டு அதற்கேற்றப்படி விலை உயர்வுகளை அறிவிப்பது வழக்கம். ஒரு சில நிறுவனங்கள் ஒரே வருடத்தில் 2,3 முறை விலை உயர்வுகளை அறிவிப்பதும் உண்டு.

அந்த வகையில், மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனம் ஏற்கனவே கடந்த 2026 ஜனவரி மாதத்தில் தனது கார்களின் விலைகளை உயர்த்தி இருந்த நிலையில், ஏப்ரல் மாதத்தில் இருந்து இந்த வருடத்தில் இரண்டாவது முறையாக விலை உயர்வை கொண்டுவருகிறது. இதன்படி, ஏப்ரல் 1ஆம் தேதி முதல் மெர்சிடிஸ்-பென்ஸ் கார்களின் விலைகள் இந்தியாவில் 2% உயர்த்தப்பட உள்ளன.
இதற்கு காரணமாக மெர்சிடிஸ் நிறுவனம் தெரிவிப்பது, ஐரோப்பிய யூரோவிற்கு இணையான இந்தியாவின் ரூபாய் மதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதாகும். கடந்த ஆண்டில் இதே சமயத்தில் யூரோவிற்கு இணையான ரூபாயின் மதிப்பு 94.55 ரூபாயாக இருந்த நிலையில், தற்போது அது 105.66 ரூபாயாக உள்ளது. இதனால் பணம் பரிமாற்ற மதிப்பு குறைவதால், அதற்கேற்ப இந்தியாவில் செலவுகள் அதிகரிப்பதாக மெர்சிடிஸ் வருத்தம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து கருத்து தெரிவித்த மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனத்தின் விற்பனை & சந்தைப்படுத்துதல் பிரிவின் துணை தலைவர் பிரெண்டன் சிஸ்ஸிங், கூடுதல் செலவுகளில் கணிசமான தொகையை நிறுவனம் ஏற்றுக் கொண்டதாகவும், இருப்பினும் வணிகத்தை நடத்துவதில் எந்த பிரச்சனையும் ஏற்படாத வண்ணம் சில செலவுகளை விலை உயர்வாக வாடிக்கையாளர்களுக்கு விதிப்பதாகவும் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனம் பல்வேறு விதமான பிரிவுகளில் கார்களை வழங்குகிறது. அவற்றுள் விலை குறைவான பென்ஸ் காராக விற்பனை செய்யப்படுவது ஏ-கிளாஸ் (A-Class) ஆகும். இந்தியாவின் விலை குறைவான இந்த பென்ஸ் காரின் எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) தற்சமயம் ரூ.44.45 லட்சமாக இருக்கும் நிலையில், ஏப்ரல் முதல் இது ரூ.88.90 ஆயிரம் உயர்த்தப்படுகிறது.
அதேநேரம், விலை குறைவான பென்ஸ் கார்களின் விலைகள் அதிகப்பட்சமாக ரூ.4.20 லட்சம் வரை உயர்த்தப்பட உள்ளது. முன்னதாக, கடந்த 2026 ஜனவரி மாதத்திலும் மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனமும் 2% விலை உயர்வை அதன் கார்களில் கொண்டுவந்து இருந்தது. இதேபோல், ஆடி நிறுவனமும் இந்தியாவில் ஏப்ரல் 1 முதல் அதன் கார்களின் விலைகளை 2% உயர்த்த உள்ளதாக அறிவித்துள்ளது.

ஆடி நிறுவனமும் இந்த விலை உயர்வுக்கு மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனத்தை போலவே பண மதிப்பு இழப்பையும், அதனால் தொடர்ந்து அதிகரித்துவரும் முதலீட்டு தொகையையும் தான் காரணமாக தெரிவித்துள்ளது. இந்தியாவில் ஆடி நிறுவனத்தில் இருந்து குறைந்த விலையில் க்யூ3 (Q3) ரூ.43.23 லட்சத்தில் விற்பனை செய்யப்படுகிறது. அதுவே, விலையுயர்ந்த ஆடி காராக ஆர்.எஸ் க்யூ8 ரூ.2.34 கோடி விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: கார் நிறுவனங்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் அவ்வப்போது கார்களின் விலைகளை உயர்த்துவது வாடிக்கையான ஒன்றே. அதிலிலும் குறிப்பாக, மெர்சிடிஸ்-பென்ஸ், ஆடி போன்ற லக்சரி கார் நிறுவனங்கள் ஏப்ரல் மாதம் வந்துவிட்டாலே தங்களது கார்களின் விலைகளை அதிகரிப்பது வழக்கம். இந்த விலை அதிகரிப்பினால் விற்பனை சற்று குறைய வாய்ப்புள்ளதால், அடுத்த சில மாதங்களுக்கு இந்த நிறுவனங்கள் சலுகைகளை அறிவிக்கலாம். குறைந்தப்பட்சம் ஷோரூம் லெவலில் ஆவது சலுகைகள் அறிவிக்கப்படும்.


Click it and Unblock the Notifications








