உயிருக்கு உத்திரவாதம், விலையோ சாதாரண ரகம்... இந்தியாவின் விலை குறைவான எலெக்ட்ரிக் பென்ஸ் கார்!
மெர்சிடிஸ்-பென்ஸ் (Mercedes-Benz) நிறுவனம் அதன் சிஎல்ஏ எலெக்ட்ரிக் (CLA Electric) காரை இந்தியாவில் சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியதை பற்றி கேள்விப்பட்டு இருப்பீர்கள் என நினைக்கிறேன். ஆனால், வெளிநாடுகளில் கடந்த பல மாதங்களாகவே விற்பனையில் உள்ளது. அவ்வாறு, ஐரோப்பிய சந்தையில் விற்பனையில் உள்ள சிஎல்ஏ எலெக்ட்ரிக் கார் ஐரோப்பிய என்சிஏபி (NCAP) கிராஷ் டெஸ்ட்டில் உட்படுத்தப்பட்டு, அதுதொடர்பான முடிவுகள் தற்போது வெளிவந்துள்ளன. அவற்றை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
இந்தியாவில் மிக சமீபத்தில் விலை குறைவான மெர்சிடிஸ்-பென்ஸ் எலெக்ட்ரிக் காராக சிஎல்ஏ எலெக்ட்ரிக் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சிஎல்ஏ200, சிஎல்ஏ250+ மற்றும் லான்ச் எடிஷன் என மூன்று விதமான வேரியண்ட்களில், சிஎல்ஏ எலெக்ட்ரிக் காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் (Ex-Showroom Prices) இந்தியாவில் ரூ.55 லட்சத்தில் இருந்து நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுவதற்கு மத்தியில் மெர்சிடிஸ்-பென்ஸ் சிஎல்ஏ எலெக்ட்ரிக் கார் ஐரோப்பிய என்சிஏபி கிராஷ் டெஸ்ட்டில் உட்படுத்தப்பட்டு முழு 5-ஸ்டார் ரேட்டிங் (5-star Rating)-ஐ பெற்று அசத்தியுள்ளது. இந்த சோதனையில் பெரியவர்கள் பாதுகாப்பில் இந்த காருக்கு 100க்கு 94 மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளன.
அதுவே, குழந்தைகள் பாதுகாப்பில் 100க்கு 89 மதிப்பெண்களை பெற்றுள்ளது. அதேநேரம், ஆபத்தான முறையில் சாலையை பயன்படுத்துவோருக்கான பாதுகாப்பில் 93 மதிப்பெண்களையும், பாதுகாப்பு உதவி அம்சங்களில் 85 மதிப்பெண்களையும் ஐரோப்பாவில் விற்பனை செய்யப்படும் சிஎல்ஏ எலெக்ட்ரிக் கார் பெற்றுள்ளது. இந்த மதிப்பெண்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள சிஎல்ஏ எலெக்ட்ரிக் காரையும் பாதுகாப்பானதாக காட்டுகின்றன.

மெர்சிடிஸின் மாடுலர் ஆர்கிடெக்ச்சர் (MMA)-இல் உருவாக்கப்பட்ட இந்த லக்சரி தரத்திலான எலெக்ட்ரிக் செடான் (Sedan) வகை கார் ஆனது மேம்படுத்தப்பட்ட கட்டமைப்பில், ரியல்-டைம் பாதுகாப்பு அமைப்புகளுடன் உருவாக்கப்பட்டுள்ளது. விலை குறைவான எலெக்ட்ரிக் பென்ஸ் காராக இருப்பினும், லெவல்-2 அடாஸ் (ADAS) இந்த காரில் வழங்கப்பட்டுள்ளது.
இதன் மூலமாக, காரை சுற்றி ஓட்டுனரால் பார்க்க முடியாத பகுதிகளை கண்காணிக்கும் பிளைண்ட் ஸ்பாட் அசிஸ்ட் பிளஸ், ப்ரீ-சேஃப் சிஸ்டம்ஸ் உள்பட பயணிகள் மற்றும் பாதசாரிகளுக்கான ஏகப்பட்ட பாதுகாப்பு தொழிற்நுட்பங்கள் இந்த காரில் வழங்கப்படுகின்றன. இதனாலேயே, இந்தியாவில் புது, புது எலெக்ட்ரிக் கார்களை அறிமுகம் செய்யும் முனைப்பில் இருக்கும் மெர்சிடிஸ் நிறுவனம் அந்த வரிசையில் சிஎல்ஏ எலெக்ட்ரிக் காரை களமிறக்கி உள்ளது.
இந்தியாவில் ரூ.55 லட்சத்தில் சிஎல்ஏ 200 வேரியண்ட் கிடைக்கும் நிலையில், சிஎல்ஏ 250+ வேரியண்ட்டின் விலை ரூ.59 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், இந்த காரின் லான்ச் எடிஷனின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.64 லட்சம் ஆகும். சிஎல்ஏ காருக்கு உள்ளே 14-இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் டிஸ்பிளே உடன் எம்பக்ஸ் (MBUX) ஹைப்பர்ஸ்க்ரீன் வழங்கப்படுகிறது.
இதனுடன், 10.25-இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் திரை மற்றும் முன் இருக்கை பயணிகளுக்கான திரை உள்ளிட்டவையும் வழங்கப்படுகின்றன. இந்த திரைகள் லேட்டஸ்ட் மெர்சிடிஸ்-பென்ஸ்.ஓஎஸ் மென்பொருளின் மூலம் இயங்குகின்றன. 58kWh மற்றும் 85.5kWh என இரு விதமான பேட்டரி ஆப்ஷன்களில் இந்த புதிய பென்ஸ் எலெக்ட்ரிக் கார் விற்பனை செய்யப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனத்தின் சிறந்த உற்பத்தி தரத்தில் புதிய சிஎல்ஏ எலெக்ட்ரிக் கார் உருவாக்கப்படுகிறது. இதற்கு ஐரோப்பிய என்சிஏபி கிராஷ் டெஸ்ட்டில் இந்த கார் பெற்றுள்ள மதிப்பெண்கள் தான் சாட்சியாகும். இருப்பினும், இது ஐரோப்பிய நாடுகளில் விற்பனையில் உள்ள சிஎல்ஏ எலெக்ட்ரிக் கார் பெற்றுள்ள மதிப்பெண்கள் என்பதால், இதே அளவிலான மதிப்பெண்களை தான் இந்தியாவின் சிஎல்ஏ எலெக்ட்ரிக் காரும் பெறுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


Click it and Unblock the Notifications