கம்மியான விலையில் எலெக்ட்ரிக் பென்ஸ் கார்... உறுதி செய்தார் கம்பெனியின் சிஇஓ!
மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனத்தில் இருந்து நியூ-ஜென்ரேஷன் GLB EV எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என மெர்சிடிஸ்-பென்ஸ் இந்தியா நிறுவனத்தின் CEO உறுதியளித்துள்ளார். நிறுவனத்தின் அரையாண்டு விற்பனை ஆலோசனை கூட்டத்தின் போது இதனை அவர் தெரிவித்துள்ளார். இந்த புதிய எலெக்ட்ரிக் பென்ஸ் காரை பற்றிய கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.
மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனத்தின் மாடுலர் ஆர்க்கிடெக்சர் பிளாட்ஃபாரத்தில் உருவாக்கப்பட்ட புதிய GLB EV கார் உலகளவில் கடந்த 2025ஆம் ஆண்டின் டிசம்பர் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து ஏற்கனவே யுகே-இல் விற்பனையை துவங்கிவிட்ட இந்த எலெக்ட்ரிக் கார் விரைவில் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தற்போது மெர்சிடிஸ்-பென்ஸ் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரும், CEO-வுமான சந்தோஷ் ஐயர் தெரிவித்துள்ளார்.

இந்த காம்பாக்ட்டான எலெக்ட்ரிக் SUV காரின் தோற்றமும் சரி, தொழிற்நுட்ப வசதிகளும் சரி பெட்ரோல்/டீசல் என்ஜினை கொண்ட GLB காரை ஒத்துக் காணப்படுகின்றன. வெளிநாட்டு சந்தைகளில் 250+ மற்றும் 350 4மேட்டிக் என இரு விதமான வேரியண்ட்களில் GLB EV விற்பனை செய்யப்படுகிறது. இதில், 250+ வேரியண்ட்டில் அதிகப்பட்சமாக 272 எச்பி மற்றும் 335 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை பெற முடிகிறது.
இந்த வேரியண்ட்டில் ஒரேயொரு எலெக்ட்ரிக் மோட்டார் மட்டுமே வழங்கப்படுகிறது. அதுவே, டபுள் மோட்டார் உடன் உருவாக்கப்படும் 350 4மேட்டிக் வேரியண்ட்டில் அதிகப்பட்சமாக 353 எச்பி மற்றும் 515 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை கார் பெறுகிறது. இந்த இரு வேரியண்ட்களிலும் 85kWh திறன் கொண்ட லித்தியம்-இரும்பு பேட்டரி பேக் வழங்கப்படுகிறது.

இந்த பேட்டரியை முழுமையாக சார்ஜ் நிரப்பினால் 250+ வேரியண்ட்டில் அதிகப்பட்சமாக 631கிமீ தொலைவிற்கு பயணிக்கலாம் என WLTP சான்றளிக்கப்பட்டுள்ளது. 800 வோல்ட் ஆர்க்கிடெக்ச்சரில் உருவாக்கப்பட்ட நியூ-ஜென்ரேஷன் GLB EV காரை 320 கிலோவாட்ஸ் வரையிலான DC ஃபாஸ்ட்-சார்ஜரில் வெறும் 10 நிமிடங்களில் 260கிமீ தொலைவு பயணத்திற்கான சார்ஜை நிரப்பிவிடலாம்.
வெளிநாட்டு சந்தைகளில் அடாப்டிவ் டேம்பர்கள் உடனும் இந்த எலெக்ட்ரிக் கார் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால், இந்த டேம்பர்கள் உள்பட இந்தியாவில் புதிய GLB EV காரில் வழங்கப்பட உள்ள தொழிற்நுட்ப அம்சங்கள் குறித்த எந்த விபரங்களையும் CEO சந்தோஷ் ஐயர் தெரிவிக்கவில்லை. தோற்றத்தை பொறுத்தவரையில், ஏற்கனவே கூறியதுபோல் பெட்ரோல்/டீசல் GLB காரை தான் புதிய GLB EV எலெக்ட்ரிக் காரும் ஒத்துக் காணப்படுகிறது.
காரின் நிமிர்ந்த முன் & பின்பக்கத்தில் LED விளக்குகள் லைட் பார் மூலமாக இணைக்கப்பட்டுள்ளன. மற்றும், காரின் பக்கவாட்டில் சதுர வடிவிலான வீல் ஆர்ச்சுகள் பெட்ரோல்/டீசல் GLB காரை ஒத்துக் காணப்படுகின்றன. இருப்பினும், இது எலெக்ட்ரிக் கார் என்பதால், முன்பக்க க்ரில் பகுதி முழுவதுமாக மூடப்பட்டுள்ளது.
முன்பக்க க்ரில்லின் மீது ஒளிரக்கூடிய ஸ்டார் லோகோக்கள் ஏகப்பட்டவை வழங்கப்பட்டுள்ளன. காரின் பக்கவாட்டில் பறித்து இழுக்கக்கூடிய கதவு கைப்பிடிகள் மற்றும் சிறிய ஓவர்ஹேங்ஸ் வழங்கப்படுகின்றன. சர்வதேச சந்தையில் GLB EV கார் ஆனது 5-சீட்டர் மற்றும் 7-சீட்டர் வெர்சன்களில் விற்பனை செய்யப்படுகிறது. காரினுள் டாஷ்போர்டில் 'எம்பக்ஸ் சூப்பர்ஸ்க்ரீன்' செட்-அப் வழங்கப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் இரு வேரியண்ட்களில் இல்லாமல், ஒரேயொரு வேரியண்ட்டில் மட்டுமே இந்த கார் அறிமுகம் செய்யப்படுவதற்கு வாய்ப்புள்ளது. மெர்சிடிஸ் நிறுவனத்தின் விலை குறைவான எலெக்ட்ரிக் காராக GLB EV விளங்கினாலும், இந்தியாவில் இதன் விலை எப்படியிருந்தாலும் ஏறக்குறைய ரூ.80 லட்சம் அளவில் நிர்ணயிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில், இந்த கார் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படுவதற்கு வாய்ப்புகள் மிகவும் குறைவே ஆகும்.


Click it and Unblock the Notifications