711 கிமீ ரேஞ்ச்... மெர்சிடிஸ் பென்ஸ் GLC எலக்ட்ரிக் எஸ்யூவி இந்தியாவில் அறிமுகம்!
இந்திய சொகுசு கார் சந்தையில் புதிய மின்சார எஸ்யூவியை மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. GLC Electric எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த கார் ரூ.78.50 லட்சம் ஆரம்ப எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. அதிக ரேஞ்ச், நவீன தொழில்நுட்பம் மற்றும் பிரீமியம் வசதிகள் இதன் முக்கிய சிறப்பம்சங்களாக உள்ளன.
மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் முற்றிலும் புதிய மின்சார கட்டமைப்பில் உருவாக்கப்பட்டுள்ள இந்த எஸ்யூவி, ஏற்கெனவே விற்பனையில் உள்ள பெட்ரோல் GLC மாடலில் இருந்து பல்வேறு அம்சங்களில் வேறுபடுகிறது. இந்தியாவில் உள்நாட்டிலேயே அசெம்பிள் செய்யப்படுவதால், நிறுவனத்தின் மின்சார வாகன வரிசையில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. இந்த காருக்கு முன்பதிவுகளும் சிறப்பாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

வடிவமைப்பில் பிரம்மாண்டமான தோற்றம்
புதிய GLC Electric காரின் முன்பக்கத்தில் 914 தனித்தனி ஒளி அமைப்புகளைக் கொண்ட ஒளிரும் கிரில் வழங்கப்பட்டுள்ளது. இதில் உள்ள விளக்குகள் வெவ்வேறு ஒளி வடிவங்களை வழங்கும். முன்புறம் மற்றும் பின்புற விளக்குகளில் மூன்று நட்சத்திர வடிவமைப்பு இடம்பெற்றுள்ளது. AMG Line வடிவமைப்புப் தொகுப்பும் ஸ்டாண்டர்டாக வழங்கப்படுகிறது.
இந்த எலெக்டிரிக் எஸ்யூவியில் 20 அங்குல அலாய் சக்கரங்கள் பொருத்தப்பட்டு இருக்கின்றன. மொத்தம் ஆறு வண்ணத் தேர்வுகளில் கிடைக்கிறது. பெட்ரோல் GLC மாடலை விட நீளத்திலும் அகலத்திலும் உயரத்திலும் பெரியதாக உருவாக்கப்பட்டுள்ளது. இதன் வீல்பேஸ் 2,972 மிமீ ஆக இருப்பதால் மிகச் சிறப்பான உட்புற இடவசதியை பெற்றுள்ளது.
ஹைப்பர்ஸ்கிரீன்
இந்த காரின் உட்புறத்தில் அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் வகையில் 39.1 அங்குல அளவிலான ஹைப்பர்ஸ்கிரீன் வழங்கப்பட்டுள்ளது. டேஷ்போர்டின் முழு அகலத்தையும் ஆக்கிரமிக்கும் இந்த ஒற்றை திரை, இன்ஃபோடெயின்மென்ட் மற்றும் வாகன கட்டுப்பாடுகளை ஒருங்கிணைக்கிறது. இதன் மூலம் காருக்குள் நவீன டிஜிட்டல் அனுபவத்தை பெற முடியும்.
மேலும், பனோரமிக் கண்ணாடி மேற்கூரை, 15 ஸ்பீக்கர்களுடன் கூடிய பர்மெஸ்டர் சவுண்ட் சிஸ்டம், வயர்லெஸ் சார்ஜிங், ஆம்பியன்ட் லைட்டிங் உள்ளிட்ட வசதிகள் இடம்பெற்றுள்ளன. முன்பக்க இருக்கைகளில் மசாஜ் மற்றும் ஹீட்டிங் வசதிகள் வழங்கப்படுகின்றன. பின்புற இருக்கைகளை மடக்கிக்கொள்ளும் வசதியும் உள்ளது.
490 எச்பி சக்தி.. 800 என்எம் டார்க்
இந்தியாவில் GLC 400 4Matic என்ற ஒரே வேரியண்ட்டில் இந்த கார் அறிமுகமாகியுள்ளது. இதில் இரண்டு எலக்ட்ரிக் மோட்டார்கள் உள்ளன. முன்புறம் மற்றும் பின்புறம் என இரண்டு மோட்டார்கள் செயல்படுவதால் ஆல் வீல் டிரைவ் வசதி கிடைக்கிறது. இவை இணைந்து அதிகபட்சமாக 490 எச்பி பவரையும் 800 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்துகின்றன.
இந்த காரில் 94 kWh பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இந்த பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் WLTP சான்றுபடி 711 கிமீ வரை பயணிக்கும் ரேஞ்ச் கிடைக்கும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், 2 ஸ்பீடு கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது. இதனால் வேகமான செயல்திறன் மற்றும் சிறப்பான மின்சார பயன்பாடு ஆகியவற்றை ஒருங்கிணைக்க முடியும்.
சார்ஜிங் மற்றும் பாதுகாப்பு வசதிகள்
இந்த காரில் 22 kW ஏசி சார்ஜர் ஸ்டாண்டர்டாக வழங்கப்படுகிறது. 330 kW டிசி ஃபாஸ்ட் சார்ஜர் பயன்படுத்தும்போது, வெறும் 10 நிமிடங்களில் 300 கிமீ பயணிப்பதற்கான சார்ஜை நிரப்ப முடியும் என மெர்சிடிஸ் பென்ஸ் தெரிவித்துள்ளது. நீண்ட தூர பயணங்களுக்கும் இது உதவியாக இருக்கும்.
பாதுகாப்பு அம்சங்களிலும் இந்த கார் சிறப்பாக உள்ளது. 9 ஏர்பேக்குகள், 360 டிகிரி கேமரா, ஆட்டோ பார்க்கிங் அசிஸ்ட், 8 கேமராக்கள் மற்றும் 5 ரேடார்கள் கொண்ட லெவல் 2 அடாஸ் தொழில்நுட்பம் ஆகியவை இடம்பெற்றுள்ளன. மேலும், 570 லிட்டர் பூட் ஸ்பேஸ் மற்றும் 128 லிட்டர் முன்பக்க சேமிப்பு இடமும் வழங்கப்படுகிறது.
மெர்சிடிஸ் பென்ஸ் GLC Electric இந்தியாவில் ரூ.78.50 லட்சம் விலையில் அறிமுகமாகியுள்ளது. அதிக ரேஞ்ச், பிரம்மாண்டமான டிஜிட்டல் திரை, சக்திவாய்ந்த மோட்டார்கள் மற்றும் அதிநவீன பாதுகாப்பு அம்சங்கள் இதன் பலமாக உள்ளன. ஏற்கெனவே 1,000க்கும் மேற்பட்ட முன்பதிவுகள் கிடைத்துள்ளதாகவும், வரும் ஆண்டு மார்ச் மாதம் வரை முன்பதிவுகள் முடிந்துவிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications


