பல கோடி ரூபாயில் வாகனம் வாங்கினாலும் ஆபத்து இல்லனு சொல்ல முடியாது! பென்ஸ் கார்களில் இப்படியொரு பிரச்சனையா?
மெர்சிடிஸ்-பென்ஸ் இந்தியா நிறுவனம், அதன் முழு எலெக்ட்ரிக் ஜி-கிளாஸ் எஸ்யூவி வாகனங்களில் கண்டறியப்பட்ட சக்கரங்களின் போல்ட் தொடர்பான பிழை காரணமாக வாகனங்களை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது. இது, EQ டெக்னாலஜியை கொண்ட 99 மெர்சிடிஸ்-பென்ஸ் ஜி580 வாகனங்களைப் பாதிக்கிறது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ தகவலின்படி, காரின் சக்கரங்களின் போல்ட்கள் நிறுவனத்தின் குறிப்பிட்ட தரநிலைகளை பூர்த்தி செய்யாமல் இருக்கலாம் என்பதே இந்தப் பிரச்சனையின் மூல காரணமாகும். காலப்போக்கில், வழக்கம்போல் வாகனம் இயக்கும்போது சக்கரங்களின் போல்ட்கள் படிப்படியாக தளர்ந்து போவதற்கான வாய்ப்புள்ளது. இது சக்கரங்கள் இணைப்பின் உறுதித்தன்மையை பாதிக்கலாம்.

மேலும் ஒட்டுமொத்த டிரைவிங் நிலைத்தன்மையிலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். இந்தக் குறைபாடு உடனடியாக வெளிப்படையாகத் தெரியாமல் இருக்கலாம் என மெர்சிடிஸ்-பென்ஸ் தெரிவித்துள்ளது. இருப்பினும், இத்தகைய சூழலில் நீண்டகாலமாக வாகனத்தைப் பயன்படுத்துவது, ஓட்டுநர் பாதுகாப்புக்கு ஆபத்தை அதிகரிக்கும். எந்தவொரு நேரத்திலும், தளர்வான சக்கர இணைப்பு விபத்துக்கான வாய்ப்பை அதிகரிக்கலாம் என்பதால், சரியான நேரத்தில் ஆய்வு மற்றும் சரிசெய்தல் அவசியம்.
இந்த குறைப்பாடு உடைய ஜி-கிளாஸ் எலெக்ட்ரிக் வாகனங்கள் 2024ஆம் ஆண்டு ஜூலை 12 முதல் 2025 ஆகஸ்ட் 18 வரை தயாரிக்கப்பட்டவை என மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. பாதிக்கு உள்ளான வாகனங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதால், மெர்சிடிஸ் நிறுவனம் வழக்கம்போல் செயல்பட்டு, பாதிக்கப்பட்ட வாகனங்களின் உரிமையாளர்களைத் தொடர்பு கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உரிமையாளர்கள் உரிய பழுதுபார்ப்புகளை மெர்சிடிஸ்-பென்ஸ் டீலர்ஷிப்களில் பெற்றுக் கொள்ளலாம். ஆய்வில், சக்கரங்களின் போல்ட் அசெம்பிளி சரிபார்க்கப்படும். தேவைப்பட்டால், பாதுகாப்பை உறுதிசெய்ய உதிரி பாகங்கள் மாற்றப்படும். மெர்சிடிஸ்-பென்ஸ் ஜி580 EQ டெக்னாலஜி என்பது புகழ்பெற்ற ஜி-கிளாஸ் வாகனத்தின் எலெக்ட்ரிக் வெர்சனாகும். இது ஜி-கிளாஸ் வாகனங்களின் பாரம்பரிய வடிவமைப்பு அம்சங்களை நவீன எலெக்ட்ரிக் பவர்டிரெய்ன் உடன் ஒருங்கிணைக்கிறது.
ஒரு முதன்மையான சொகுசு எஸ்யூவி ஆக, இது இந்தியாவில் மெர்சிடிஸ்-பென்ஸின் விரிவடைந்து வரும் எலெக்ட்ரிக் வாகன வரிசையில் குறிப்பிடத்தக்க பங்கை வகிக்கிறது. எலெக்ட்ரிக் ஜி-கிளாஸ் காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் தற்சமயம் ரூ.3.10 கோடியில் இருந்து துவங்குகின்றன. இதில் 116 kWh திறன் கொண்ட பேட்டரி தொகுப்பு பொருத்தப்படுகிறது.
200 kW வரையிலான வேகமான சார்ஜரைப் பயன்படுத்தி, இந்த பேட்டரியை 10 முதல் 80 சதவீதம் வரை வெறும் 32 நிமிடங்களில் சார்ஜ் செய்ய முடியும். பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் WLTP வரம்பின்படி அதிகப்பட்சமாக 473 கி.மீ தூரம் செல்லலாம் என கணக்கிடப்பட்டுள்ளது. ஜி-கிளாஸ் நான்கு எலெக்ட்ரிக் மோட்டார்கள் மற்றும் 2-ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் உடன் வருகிறது.
நான்கு எலெக்ட்ரிக் மோட்டார்கள் மொத்தம் 587 hp ஆற்றலை உற்பத்தி செய்கின்றன. மேலும் இதன் டார்க் 1,164 Nm ஆக மதிப்பிடப்பட்டுள்ளது. 0 முதல் 100 கி.மீ வேகத்தை 4.7 வினாடிகளில் எட்டிவிடும் இந்த எலெக்ட்ரிக் வாகனம், அதிகப்பட்சமாக மணிக்கு 180 கி.மீ வேகத்தில் செல்லக்கூடியது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இவ்வளவு விலை கொடுத்து வாங்கும் வாகனத்திலும் இவ்வாறு பிரச்சனைகள் ஏற்படுவது ஆச்சிரியத்தை ஏற்படுத்துகிறது. 99 யூனிட்கள் மட்டுமே பாதிக்கப்பட்டு இருப்பினும், இவ்வளவு விலை கொடுத்து வாங்கிய வாகனத்தில் பிரச்சனை எனும்போது எவருக்கும் ஏமாற்றமாகவே இருக்கும். இது எந்த அளவிற்கு இந்தியாவில் ஜி-கிளாஸ் எலெக்ட்ரிக் வாகனத்தின் விற்பனையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
கூடுதலாக ஒரு படம் சேர்க்கப்பட்டது.


Click it and Unblock the Notifications