யாருக்கும் சொல்லாம சைலண்ட்டா இந்தியாவை விட்டு சென்றுள்ள பென்ஸ் கார்கள்! விற்பனையில் இருந்து கழட்டி விட்டாச்சு!
மெர்சிடிஸ்-பென்ஸ் (Mercedes-Benz) நிறுவனம் அதன் இந்திய இணையத்தள பக்கத்தில் இருந்து அதன் ஏ-கிளாஸ் லிமௌசைன் (A-Class Limousine), இ.க்யூ.ஏ (EQA) மற்றும் இக்யூபி (EQB) கார்களின் பெயர்களை பெரியதாக எந்தவொரு அறிவிப்பும் இன்றி நீக்கி உள்ளது. அதாவது, இந்த பென்ஸ் கார்களின் விற்பனை இந்தியாவில் நிறுத்திக் கொள்ளப்படுகிறது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் காணலாம்.
ஜெர்மனி நாட்டை சேர்ந்த மெர்சிடிஸ் நிறுவனம் இந்தியாவில் விலை குறைவான கார்களை விடுத்து, விலைமிக்க லக்சரி காரக்ளையும், எலெக்ட்ரிக் கார்களையும் களமிறக்க திட்டமிட்டு வருவதாக கடந்த சில வாரங்களாகவே செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இதற்கேற்றாற் போன்று, வருகிற ஏப்ரல் 24ஆம் தேதியில் புதிய சிஎல்ஏ எலெக்ட்ரிக் (CLA Electric) காரை இந்தியாவில் மெர்சிடிஸ் வெளியீடு செய்ய உள்ளது.

இதற்கிடையில்தான் அதற்கு முன்னதாக திட்டமிட்டப்படி ஏ-கிளாஸ் லிமௌசைன் கார் மற்றும் இக்யூஏ, இக்யூபி எலெக்ட்ரிக் கார்களின் பெயர்களை மெர்சிடிஸ் நிறுவனம் தனது இணையத்தள பக்கத்தில் இருந்து நீக்கியுள்ளது. அத்துடன், இக்யூஇ என்கிற எலெக்ட்ரிக் எஸ்யூவி காரின் பெயரையும் இந்தியன் வெப்சைட்டில் இருந்து தூக்கியுள்ளது.
"இந்தியாவில் இந்த கார் மாடல்களின் ஸ்டாக்குகள் முற்றிலுமாக விற்று தீர்க்கப்பட்டு விட்டதாகவும், லேட்டஸ்ட் எலெக்ட்ரிக் காரை எதிர்பார்ப்போர், புதிய சிஎல்ஏ காரை ஆராய்ந்து பார்க்கலாம். இதுவரையில் உருவாக்கப்பட்டதிலேயே இண்டெலிஜென்ட் மெர்சிடிஸ்-பென்ஸ் கார் சிஎல்ஏ எலெக்ட்ரிக் கார் என்றும், லக்சரி எலெக்ட்ரிக் கார்கள் மார்க்கெட்டில் புதிய பெஞ்ச்மார்க்கை இது உருவாக்கி உள்ளதாகவும், ஏப்ரல் 24இல் வெளியீடு செய்யப்பட உள்ளதாகவும்" மெர்சிடிஸ் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

இந்த மூன்று கார்களுக்கும் மாற்றாக புதிய சிஎல்ஏ எலெக்ட்ரிக் காரை மெர்சிடிஸ் அறிமுகம் செய்கிறது. அதுமட்டுமின்றி, இந்த கார்களின் விற்பனையை மெர்சிடிஸ் நிறுத்துவதற்கு மற்றொரு காரணம், அதன் விலை குறைவான கார்களின் விற்பனை குறைந்துக் கொண்டே வருவதும் ஆகும். கடந்த 2025ஆம் ஆண்டில் தங்களது விலை குறைவான எண்ட்ரி-லெவல் சொகுசு கார்களின் விற்பனை 23% குறைந்துள்ளதாக மெர்சிடிஸ் தெரிவித்துள்ளது.
இந்தியாவின் எண்ட்ரி-லெவல் சொகுசு கார்களுக்கான மார்க்கெட் சமீப காலத்தில் மிகவும் போட்டி மிகுந்ததாக மாறியுள்ளதாக மெர்சிடிஸ் கருதுகிறது. இதனாலேயே அதில் போட்டியிடுவதை விடுத்து, அதில் இருந்து சற்று ஒதுங்கி இருக்க ஆரம்பித்துள்ளது. "நமது போட்டி நிறுவனங்களின் குறைந்த விலை கார்களுக்கு இணையாக நமது கார்களும் இருக்க வேண்டுமா? வேண்டாம்.
நமது பலத்திற்கு நாம் போட்டியிடுவோம் மற்றும் எண்ணிக்கையை காட்டிலும் மதிப்பிற்கு முக்கியத்துவம் அளிப்போம்" என்று மெர்சிடிஸ்-பென்ஸ் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரும், சிஇஓ-வுமான சந்தோஷ் ஐயர் முன்னதாக ஒரு பேட்டியில் தெரிவித்து இருந்தார். தற்போது மெர்சிடிஸ்-பென்ஸ் இந்தியாவின் வெப்சைட்டில் இருந்து நீக்கப்பட்டுள்ள ஏ-கிளாஸ் ஆனது இந்தியாவில் விலை குறைவான பென்ஸ் காராக விற்பனை செய்யப்பட்டு வந்தது.
ரூ.44.46 லட்சம்- ரூ.45.92 லட்சம் என்கிற எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்த ஏ-கிளாஸின் விற்பனை நிறுத்தத்தினால், ஜிஎல்ஏ (GLA) ஆனது இந்தியாவில் விலை குறைவான பென்ஸ் காராக மாறியுள்ளது. இதன் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.51.80 லட்சத்தில் இருந்து ரூ.55 லட்சம் வரையில் தற்சமயம் உள்ளன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மற்ற வெளிநாடுகளை போன்று இந்தியாவிலும் விலைமிக்க லக்சரியான கார்களில் கவனம் செலுத்த மெர்சிடிஸ் முடிவெடுத்துள்ளது. இருப்பினும், விரைவில் விற்பனைக்கு கொண்டுவரப்படும் சிஎல்ஏ எலெக்ட்ரிக் கார் ஆனது ரூ.50 லட்சம் அளவில் குறைந்த விலையிலான எலெக்ட்ரிக் பென்ஸ் காராகவே கொண்டுவரப்படுகிறது. ஒருவேளை இந்த காரின் அறிமுகத்திற்கு பிறகு எல்லாமே கோடி ரூபாய் மதிப்பிலான பென்ஸ் கார் அறிமுகங்களாக இருக்கலாம்.


Click it and Unblock the Notifications








