பரம்பரை பணக்காரர்கள் மட்டுமே ஒரு காலத்தில் வாங்கிய கார்கள்! இப்போது வருஷத்துக்கு 20 ஆயிரம் கார்கள் விற்பனை!
மெர்சிடிஸ்-பென்ஸ் (Mercedes-Benz) நிறுவனம் இந்தியாவில் கடந்த ஒரு வருடத்தில் சிறப்பான கார்கள் விற்பனையை பதிவு செய்து அசத்தியுள்ளது. எந்த அளவிற்கு என்றால், 2025 ஏப்ரல்- 2026 மார்ச் வரையிலான ஒரு வருட காலத்தில் சுமார் 19 ஆயிரத்து 363 கார்களை இந்திய சந்தையில் மெர்சிடிஸ்-பென்ஸ் விற்பனை செய்துள்ளது. இது வழக்கத்தை காட்டிலும் எந்த அளவிற்கு அதிகம் என்பதையும், இதனை கொண்டாடும் விதமாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள இரு புதிய மெர்சிடிஸ்-ஏஎம்ஜி (AMG) கார்களை பற்றியும் இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
இந்தியாவில் சொகுசு கார்களை விற்பனை செய்வதில் மெர்சிடிஸ்-பென்ஸ் முன்னிலையில் உள்ளது. மெர்சிடிஸ் கார்கள் பல இலட்ச ரூபாய் மதிப்பிலானவையாக இருந்தாலும், ஒவ்வொரு மாதத்திலும் எளிதாக ஆயிரத்தில் இருந்து இரண்டாயிரம் மெர்சிடிஸ் கார்கள் இந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்றன. அந்த அளவிற்கு இந்திய சந்தையில் அதிக எண்ணிக்கையிலான மெர்சிடிஸ் கார் மாடல்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

இதன் மூலமாகவே கடந்த ஒரு ஆண்டில் 19,363 கார்களை மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனம் இந்தியாவில் விற்பனை செய்துள்ளது. ஒரு நிதியாண்டில் மெர்சிடிஸ்-பென்ஸ் இந்தியா நிறுவனம் விற்பனை செய்த அதிகப்பட்ச விற்பனை எண்ணிக்கை இதுவாகும். இது முந்தைய 2024-25ஆம் நிதியாண்டை காட்டிலும் 2.30% அதிகமாகும். ஏனெனில், அந்த ஒரு வருட காலத்தில் 18 ஆயிரத்து 928 கார்களை மட்டுமே மெர்சிடிஸ் நிறுவனம் விற்பனை செய்திருந்தது.
இந்த 2026ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களை மட்டும் கணக்கில் எடுத்து பார்த்தால், இந்த மூன்று மாதங்களில் மொத்தம் 5 ஆயிரத்து 131 கார்களை மெர்சிடிஸ் நிறுவனம் விற்பனை செய்துள்ளது. இது கடந்த 2025ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் மெர்சிடிஸ் விற்பனை செய்திருந்த 4 ஆயிரத்து 775 கார்களை காட்டிலும் 7% அதிகமாகும்.

மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனத்தின் மிக விலையுயர்ந்த அல்ட்ரா லக்சரி கார்களின் விற்பனை 2024-25 நிதியாண்டை காட்டிலும் நடந்து முடிந்த 2025-26ஆம் நிதியாண்டில் 16 சதவீதமும், 2025இன் முதல் காலாண்டை காட்டிலும் 2026இன் முதல் காலாண்டில் 25 சதவீதமும் அதிகரித்துள்ளதாக மெர்சிடிஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. அல்ட்ரா லக்சரி கார்களின் விற்பனை ஆனது மெர்சிடிஸ் நிறுவனத்தின் மொத்த விற்பனையில் 27% பங்களித்துள்ளது.
இ-கிளாஸ் லாங் வீல்பேஸ் (E-Class LWB) கார் ஆனது மெர்சிடிஸ்-பென்ஸ் இந்தியா நிறுவனத்தில் இருந்து அதிக எண்ணிக்கையில் விற்பனையாகும் காராக கடந்த நிதியாண்டிலும் தொடர்ந்துள்ளது. அதேபோல், ரூ.1.4 கோடிக்கு மேல் விலை கொண்ட மெர்சிடிஸ் எலெக்ட்ரிக் கார்களுக்கும் சிறப்பான வரவேற்பு கிடைத்து வருகிறது. எந்த அளவிற்கு என்றால், முந்தைய நிதியாண்டை விட கடந்த 2025-26 நிதியாண்டில் 85% அதிகரித்துள்ளது.
இ.க்யூ.எஸ் (EQS) ஆனது மெர்சிடிஸ்-பென்ஸ் இந்தியா நிறுவனத்தின் சிறப்பாக விற்பனையாகும் எலெக்ட்ரிக் காராக விளங்குகிறது. நடந்து முடிந்த 2025-26ஆம் ஆண்டின் விற்பனை வளர்ச்சியை மகிழ்ச்சி உடன் தெரிவித்துள்ள அதேவேளையில், மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனம் இரு புதிய கார்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. அவற்றுள் ஒன்று, மெர்சிடிஸ்-ஏஎம்ஜி ஏ45 எஸ் ஏரோ டிராக் எடிஷன் 4மேட்டிக்+ (A45 S Aero Track Edition 4MATIC+) ஆகும்.
இந்தியாவின் மிகவும் பவர்ஃபுல்லான ஹேட்ச்பேக் காராக விளங்கும் மெர்சிடிஸ்-ஏஎம்ஜி ஏ-கிளாஸின் ஸ்பெஷல் எடிஷனாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள இதன் எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ரூ.87 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள மற்றொரு காரான மெர்சிடிஸ்-ஏஎம்ஜி ஜி.எல்.இ 53 கூபே பெர்ஃபார்மன்ஸ் எடிஷனின் (GLE 53 Coupe Performance Edition) எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.1.52 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் கார்கள் விற்பனையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை கொண்டாடும் விதமாக இந்த இரு புதிய கார்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக கருதுகிறோம். இவை இரண்டுமே ஏற்கனவே விற்பனையில் உள்ள கார்களின் ஸ்பெஷல் எடிஷன்கள் ஆகும். இவற்றின் அறிமுகத்தால் மெர்சிடிஸ் கார்களின் விற்பனை அதிகரிக்கும் என்றாலும், மெர்சிடிஸ் கார்களின் விற்பனை ஏற்கனவே இந்தியாவில் சிறப்பாக உள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








