விற்று தீரும் முன் வாங்கி போட வேண்டிய பென்ஸ் கார்கள்! வழக்கத்தை விட விலை சில லட்சங்கள் மட்டுமே அதிகம்!
மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனம் இந்தியாவில் அதன் ஜி.எல்.இ மற்றும் ஜி.எல்.எஸ் கார்களில் புதியதாக நைட் எடிஷனை அறிமுகப்படுத்தி உள்ளது. இது குறுகிய காலத்திற்கு மட்டுமே விற்பனை செய்யப்பட உள்ள லிமிடெட் எடிஷன் கார்கள் ஆகும். இந்தியாவில் ஏற்கனவே பல லிமிடெட் எடிஷன் பென்ஸ் கார்கள் விற்பனை செய்யப்படும் நிலையில், அவற்றுடன் இந்த புதிய நைட் எடிஷன் கார்களும் இணைந்துள்ளன.
மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனத்தின் ஜிஎல்இ காரில் புதிய நைட் எடிஷன் ஆனது '300டி 4மேட்டிக்' என்கிற டீசல் வேரியண்ட்டிலும், '450 4மேட்டிக்' என்கிற பெட்ரோல் வேரியண்ட்டிலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இவற்றின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.1.05 கோடி மற்றும் ரூ.1.14 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த நைட் எடிஷன்கள் அவற்றின் ஸ்டாண்டர்ட் வேரியண்ட்களை காட்டிலும் பிரீமியம் தரத்திலானதாக உருவாக்கப்பட்டுள்ளன.

எந்த அளவிற்கு என்றால், ஜிஎல்இ 300டி 4மேட்டிக் வேரியண்ட்டை காட்டிலும் அதன் புதிய நைட் எடிஷனின் விலை ரூ.5 லட்சம் அளவிற்கும், ஜிஎல்இ 450 4மேட்டிக் நைட் எடிஷனின் விலை ரூ.2.50 லட்சம் அளவிற்கும் அதிகமாகும். மறுப்பக்கம், ஜிஎல்எஸ் காரிலும் '450 4மேட்டிக்' என்கிற பெட்ரோல் வேரியண்ட்டிலும், '450டி 4மேட்டிக்' என்கிற டீசல் வேரியண்ட்டிலும் நைட் எடிஷன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இவற்றின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் முறையே ரூ.1.41 கோடி மற்றும் ரூ.1.43 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது ஜிஎல்எஸ் காரின் ஸ்டாண்டர்டான 450 4மேட்டிக் மற்றும் 450டி 4மேட்டிக் வேரியண்ட்களின் விலைகளை காட்டிலும் முறையே ரூ.1.30 லட்சம் மற்றும் ரூ.5.50 லட்சம் அதிகமாகும். ஏற்கனவே கூறியதுபோல், இந்த புதிய நைட் எடிஷன்கள் அனைத்தும் சில யூனிட்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட உள்ளன.

உலகளவில் பல நாடுகளில் இந்த நைட் எடிஷன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. எல்லா நாடுகளுக்கு சேர்த்தே குறுகிய எண்ணிக்கையில் மட்டுமே விற்பனை செய்யப்பட உள்ளன. அதில் குறிப்பிட்ட எண்ணிக்கை இந்தியாவிற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தோற்றத்தை பற்றி சொல்ல வேண்டுமென்றால், ஜிஎல்இ மற்றும் ஜிஎல்எஸ் நைட் எடிஷன்கள் பெயருக்கேற்ப அடர் நிறத்தில் பெயிண்ட் செய்யப்பட்டுள்ளன.
அடர் நிறத்திலான அப்சிடியன் கருப்பு அல்லது அல்பைன் கிரே பெயிண்ட் ஆப்ஷனில் இந்த நைட் எடிஷன் கார்களை வாங்கலாம். இதில், அல்பைன் கிரே ஆனது பிரத்யேகமாக இந்த நைட் எடிஷன்களுக்கு என்று வழங்கப்பட்டுள்ளது. அதாவது, இந்த நிறத்தில் ஜிஎல்இ மற்றும் ஜிஎல்எஸ் கார்களின் ஸ்டாண்டர்ட் வேரியண்ட்கள் கிடைக்காது.
இந்த புதிய நைட் எடிஷன் கார்களின் உட்புறம் ஆனது நப்பா லெதர் அப்ஹோல்ஸ்டரி மற்றும் ஆந்த்ராசைட் ஓபன்-போர் ஓக் வுட் ஆல் அலங்கரிக்கப்பட்டுள்ளது. ஹெட்-அப் டிஸ்பிளேவை ஜிஎல்இ மற்றும் ஜிஎல்எஸ் கார்களின் புதிய நைட் எடிஷன்கள் அனைத்திலும் பெறலாம். இவை இல்லாமல், குறிப்பாக ஜிஎல்இ நைட் எடிஷன்களில் கூடுதலாக ஏர்மேட்டிக் சஸ்பென்ஷனை பெறலாம்.
அதாவது, இது வழக்கமான ஜிஎல்இ வேரியண்ட்களில் கிடைப்பதில்லை. இந்த புதிய நைட் எடிஷன் கார்களின் அறிமுகம் குறித்து பேசிய மெர்சிடிஸ்-பென்ஸ் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரும், சிஇஓ-வுமான சந்தோஷ் ஐயர், "பிரத்யேக வடிவமைப்பு, நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட உட்புறங்கள், பிரத்யேக அம்சங்கள் மற்றும் தனிப்பயனாக்கத்தில் அதிக கவனம் ஆகியவற்றுடன் அறிமுகப்படுத்தப்பட்ட நைட் எடிஷன்கள், இந்த எஸ்யூவி கார்களை மிகவும் தனித்துவமானதாகவும், கவர்ச்சியில் இணையற்றதாகவும் ஆக்குகின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: கார்கள் விற்பனையை அதிகரிக்க இவ்வாறு புதிய ஸ்பெஷல் எடிஷன்களை அறிமுகம் செய்வதை பல கார் நிறுவனங்கள் வாடிக்கையாக கொண்டுள்ளன. மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனம் இந்த முறை உலகளவில் நைட் எடிஷன்களை அறிமுகம் செய்துள்ளது. வழக்கமான ஜிஎல்இ மற்றும் ஜிஎல்எஸ் கார்களை அவற்றின் வழக்கமான வேரியண்ட்களில் இருந்து மாறுப்பட்ட தோற்றத்தில் பெற விரும்புபவர்களுக்கு இந்த புதிய நைட் எடிஷன்கள் ஏற்றவையாக இருக்கும்.


Click it and Unblock the Notifications