பைக்கை போல் லிட்டருக்கு 32.3கிமீ மைலேஜ் தரும் புதிய பென்ஸ் கார்! இந்த காரணங்களுக்காகவே வாங்கலாம்!
மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனத்தில் இருந்து அப்கிரேட் செய்யப்பட்ட எஸ்-கிளாஸ் இந்தியாவில் சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எஸ்-கிளாஸ் கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுவது இது ஒன்றும் முதல்முறை அல்ல. ஆனால், தற்போதுதான் முதல்முறையாக பிளக்-இன் ஹைப்ரீட் வெர்சனில் எஸ்-கிளாஸ் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. S 450e என்கிற ஒரேயொரு வேரியண்ட்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய எஸ்-கிளாஸ் பிளக்-இன் ஹைப்ரீட் காரை லான்ச் எடிஷன் அல்லது மேனுஃபேக்சர் எடிஷன் என்கிற இரு எடிஷன்களில் ஒன்றில் வாங்கலாம்.
இதில், லான்ச் எடிஷன் ஆனது ரூ.2.20 கோடி என்கிற எக்ஸ்-ஷோரூம் விலையிலும், மேனுஃபேக்சர் எடிஷன் ரூ.2.38 கோடி விலையிலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. புதியதாக பிளக்-இன் ஹைப்ரீட் காராக அறிமுகம் செய்யப்பட்டது மட்டுமின்றி, புதிய எஸ்-கிளாஸில் இன்னும் வேறு சில அப்கிரேட்களும் வழங்கப்பட்டுள்ளன. அவை என்னென்ன என்பதை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.

பாதுகாப்பு மற்றும் சவுகரியத்தில் முக்கிய மாற்றங்கள்
இந்தியாவில் முதல்முறையாக சுமார் 15 ஏர்பேக்குகள் உடன் புதிய எஸ்-கிளாஸ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும், மெர்சிடிஸ்-பென்ஸின் நவீன அடாப்டிவ் ரெஸ்ட்ரெயிண்ட் சிஸ்டம்களும் PRE-SAFE டெக்னாலஜி உடன் வழங்கப்பட்டுள்ளன. ஏர்மேட்டிக் ஏர் சஸ்பென்ஷனை கொண்டுள்ள புதிய எஸ்-கிளாஸ் ஆனது சவுகரியமான பயணத்தை வழங்கும் வகையில் பின் சக்கரங்களின் மூலமாக செயல்படக் கூடியதாக உள்ளது.
புதிய தொழிற்நுட்பங்கள்
அப்டேட் செய்யப்பட்ட எஸ்-கிளாஸ் காரில் மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனத்தின் MB.OS ஆப்ரேட்டிங் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. இதுதான் காரின் பல்வேறு செயல்பாடுகளுக்கு மூளையாக உள்ளது. இதன்படி, MBUX சூப்பர் ஸ்க்ரீன், லேட்டஸ்ட்-ஜென்ரேஷன் MBUX இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், AI-மூலம் இயங்கக்கூடிய 'ஹே மெர்சிடிஸ்' வாய்ஸ் உதவி மற்றும் கூகுள் வரைப்படம் உதவியுடன் நேவிகேஷன் உள்ளிட்டவற்றை பயணிகள் பெறலாம்.

இந்த காரின் முன்பக்கத்தில் வழங்கப்பட்டுள்ள புதிய டிஜிட்டல் லைட் ஹெட்லைட்கள் மைக்ரோ-LED தொழிற்நுட்பத்தை கொண்டுள்ளன. இதன் மூலமாக சுமார் 600 மீட்டர் தொலைவிற்கு அப்பால் உள்ளவற்றையும் எளிதாக காணலாம். மேலும், இந்த செடான் காரின் முன்பக்கத்தில் க்ரில் ஆனது ஒளிரக்கூடியதாக வழங்கப்பட்டுள்ளது. மேலும், காரின் பின்பக்கத்திலும் புதிய வடிவத்தில் வழங்கப்பட்டுள்ள டெயில்லைட்கள் மெர்சிடிஸ் பிராண்டின் 3-ஸ்டார் லோகோவை நினைவூட்டுகின்றன.
பிளக்-இன் ஹைப்ரீட் பவர்டிரெயின்
ஏற்கனவே கூறியதுபோல், புதிய எஸ்-கிளாஸ் காரில் முக்கிய அப்கிரேடாக பிளக்-இன் ஹைப்ரீட் பவர்டிரெயின் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மெர்சிடிஸ் நிறுவனத்தில் இருந்து அறிமுகம் செய்யப்பட்ட முதல் பிளக்-இன் ஹைப்ரீட் கார் இதுவாகும். புதிய எஸ்-கிளாஸ் பிளக்-இன் ஹைப்ரீட் காரில் 3 லிட்டர், 6-சிலிண்டர் டர்போ-பெட்ரோல் என்ஜின் ஆனது எலெக்ட்ரிக் மோட்டார் உடன் வழங்கப்படுகிறது.
பெட்ரோல் என்ஜின் மட்டுமே அதிகப்பட்சமாக 326 பிஎச்பி மற்றும் 540 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலையும், எலெக்ட்ரிக் மோட்டார் தனியாக 163 பிஎச்பி ஆற்றலையும் வெளிப்படுத்தக் கூடியவைகளாக உள்ளன. இவை இரண்டும் சேர்ந்து அதிகப்பட்சமாக 435 பிஎச்பி மற்றும் 680 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை காருக்கு வழங்கக் கூடியவைகளாக உள்ளன.
மைலேஜ் விபரங்கள்
காரை இயங்க வைக்கும் பவர்டிரெயின் மாற்றப்பட்டதற்கு ஏற்ப, காரில் கிடைக்கும் மைலேஜின் அளவும் அதிகரித்துள்ளது. புதிய எஸ்-கிளாஸ் பிளக்-இன் ஹைப்ரீட் காரில் அதிகப்பட்சமாக லிட்டருக்கு 32.3கிமீ வரையிலான மைலேஜை பெறலாம் என மெர்சிடிஸ்-பென்ஸ் தெரிவிக்கிறது. இந்த காரில் வழங்கப்படும் 22kWh பேட்டரியை முழுவதுமாக சார்ஜ் நிரப்புவதன் மூலமாக, எலெக்ட்ரிக் பவரில் மட்டும் 115கிமீ தொலைவிற்கு பயணிக்கலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: எலெக்ட்ரிக் ஆற்றல், கூடுதல் மைலேஜ், பாதுகாப்பு & சவுகரியத்தில் நவீன கால தொழிற்நுட்பங்கள் உள்ளிட்டவை புதிய எஸ்-கிளாஸ் காரை புதிய தரநிலைக்கு கொண்டு சென்றுள்ளன. குறிப்பாக, இந்த காரில் பிளக்-இன் ஹைப்ரீட் ஆப்ஷனை மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனம் முதல்முறையாக அறிமுகம் செய்திருப்பது பலத்தரப்பட்ட வாடிக்கையாளர்களை ஈர்க்கும் என எதிர்பார்க்கிறோம்.


Click it and Unblock the Notifications