அட்டகாசமான வசதிகளுடன் அப்டேட் செய்யப்பட்ட கார்.. பிளக்-இன் ஹைபிரிட் பவர்ட்ரெயினோட இந்தியாவுல வெளியாகப் போகுது
பிளக்-இன் ஹைபிரிட் கார்கள் இந்தியாவிற்குக் கொண்டு வரப்பட வேண்டும் என கடந்த சில ஆண்டுகளாகவே பலரும் கேட்டு வருகிறார்கள். இந்தியா முழுவதுமாக எலெக்ட்ரிக் கார்களுக்கு மாறுவதற்கு முன்பு அதற்கு பலாமாக பிளக்-இன் ஹைபிரிட் எலெக்ட்ரிக் கார்கள் வெளியிடப்படுவது சிறப்பான முடிவாக இருக்கும் என்பதே சந்தையில் பலரத கருத்தாகவும் இருக்கிறது. ஆனால், அதன் அதிக விலை மற்றும் வரிச்சலுகை ரீதியில் அரசின் ஒத்துழைப்பு இல்லாதது ஆகிய காரணங்களினால் இதுவரை இந்தியாவிற்கு அதிகளவில் வராமல் இருந்தது.
இப்போது பல நிறுவனங்களும் ஹைபிரிட் கார்களை இந்தியாவில் வெளியிட ஆர்வம் காட்டி வருகின்றன. மாஸ் மார்க்கெட் நிறுவனங்கள் ஸ்ட்ராங் ஹைபிரிட்டில் ஆர்வம் காட்டும் நிலையில், சொகுசு கார் தயாரிப்பு நிறுவனங்கள் பிளக்-இன் ஹைபிரிட்டை இந்தியாவிற்குக் கொண்டு வருவதில் ஆர்வம் காட்டுகின்றன. அதில் முக்கியமான ஒரு நிறுவனமாக மெர்சிடீஸ் பென்ஸ் இருக்கிறது.

ஜனவரி மாதம் மேம்படுத்தப்பட்ட S-கிளாஸ் லிமௌஸினை சர்வதேச அளவில் அறிமுகப்படுத்தியது மெர்சிடீஸ் பென்ஸ். இந்தக் கார் இந்தியாவிலும் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், மேம்படுத்தப்பட்ட புதிய மாடலை 2026ன் இறுதியில் அல்லது 2027ன் தொடக்கத்தில் அந்நிறுவனம் இந்தியாவிற்குக் கொண்டு வரலாம் எனக் கூறப்பட்டது. பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின்களுடன் இந்த S-கிளாஸ் தற்போது விற்பனையில் இருக்கிறது.
புதிய ஃபேஸ்லிப்ட் மாடலின் வெளியீட்டின் போது பிளக்-இன் ஹைபிரிட் பவர்ட்ரெயின் கொண்ட S-கிளாஸையும் மெர்சிடீஸ் பென்ஸ் இந்தியாவில் வெளியிடலாம் எனத் தகவல் வெளியாகியிருக்கிறது. இதுவரை வெளிநாடுகளில் மட்டுமே பிளக்-இன் ஹைபிரிட் பவர்ட்ரெயின் கொண்ட S-கிளாஸ் மாடலை அந்நிறுவனம் விற்பனை செய்து வந்தது. தற்போது அதனை இந்தியாவிற்கும் கொண்டு வருவது குறித்து பரிசீலனை செய்து வருகிறது.

தற்போதைய S-கிளாஸ் மாடலானது பெட்ரோல் S 450 மற்றும் டீசல் S 350d ஆகிய வேரியன்ட்களாக மட்டுமே விற்பனையில் இருக்கிறது. புதிய ஃபேஸ்லிப்ட் மாடலிலும் இதே பவர்ட்ரெயின்கள் இடம்பெறும். இத்துடன் S 450e வித் EQ ஹைபிரிட் தொழில்நுட்பத்தையும் புதிய காரில் மெர்சிடீஸ் பென்ஸ் கொடுக்கவுள்ளது.
இந்த ஹைபிரிட் பவர்ட்ரெயினானது S 450 வேரியன்டில் கொடுக்கப்பட்டிருக்கும் 2,999 சிசி, டர்போ பெட்ரோல் இன்ஜினுடன், 120 kW எலெக்ட்ரிக் மோட்டார் மற்றும் 22 kWh பேட்டரி பேக் ஆகியவற்றை உள்ளடக்கியிருக்கும். இந்த ஹைபிரிட் செட்டப்பானது ஒட்டுமொத்தமாக 435 hp பவர் மற்றும் 680 Nm டார்க்கை உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டிருக்கும். இந்த செட்டப்பின் உதவியுடன் மணிக்கு 0-100 கிமீ வேகத்தை 5.7 நொடிகளில் எட்டும் திறனை புதிய பிளக்-இன் ஹைபிரிட் பவர்ட்ரெயின் கொண்ட S-கிளாஸ் மாடல் பெற்றிருக்கும்.
22 kWh பேட்டரி பேக்குடன் முழுவதுமாக எலெக்ட்ரிக் மோடில் 100 கிமீ வரை பயணம் செய்வற்கான ரேஞ்சையும் இந்தப் புதிய S-கிளாஸ் மாடல் கொண்டிருக்கும். இதனால் நகரத்திற்குள் இதனை முழுமையான எலெக்ட்ரிக் காராக வாடிக்கையாளர்களால் பயன்படுத்த முடியும். நகரப் பயன்பாட்டிற்கு இதனை எலெக்ட்ரிக் காராகவும், நெடுஞ்தூரப் பயணங்களுக்கு பெட்ரோல் காராகவும் பயன்படுத்தலாம்.
இதனால் எலெக்ட்ரிக் காருக்கு முழுமையாக மாறுவதற்கு முன்பு அதிலிருந்து பிளஸ் மைனஸ் ஆகியவற்றை இதிலிருந்தே தெரிந்து கொள்ள முடியும். எலெக்ட்ரிக் கார்களுக்கு மாறத் தயங்கும் வாடிக்கையாளர்களுக்கு பிளக்-இன் ஹைபிரிட் கார்கள் நல்ல தீர்வாகவும், பாலமாகவும் இருக்கும். ஏற்கனவே வால்வோ XC90 T8, போர்ஷே கேயன் S e-ஹைபிரிட் மற்றும் முந்தைய தலைமுறை BMW 740Le ஆகிய பிளக்-இன் ஹைபிரிட் கார்கள் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டிருக்கின்றன.
இந்த சில பிளக்-இன் ஹைபிரிட் கார் மாடல்களில் ஒன்றாக புதிய மெர்சிடீஸ் பென்ஸ் S-கிளாஸ் லிமௌஸினும் இணையவிருக்கிறது. இதனைத் தொடர்ந்து மற்ற சொகுசு கார் தயாரிப்பு நிறுவனங்களும் பிளக்-இன் ஹைபிரிட் கார்களை இந்தியாவில் வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. விலையை ஓரளவு கட்டுக்குள் வைக்க இந்த பிளக்-இன் ஹைபிரிட் மாடலையும் இந்தியாவிலேயே மெர்சிடீஸ் அசெம்பிள் செய்யும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
அப்டேட்டிற்கு முந்தைய S-கிளாஸ் மாடலே தற்போது இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதில் டீசல் இன்ஜின் கொண்ட மாடலானது ரூ.1.84 கோடி என்ற எக்ஸ்-ஷோரூம் விலையையும், பெட்ரோல் இன்ஜின் கொண்ட மாடலானது ரூ.1.95 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையையும் கொண்டுள்ளது. மேம்படுத்தப்பட்ட S-கிளாஸ் ஃபேஸ்லிப்ட் மாடலானது இதனை விடக் கூடுதலான விலையிலேயே இந்தியாவில் வெளியாகும். பிளக்-இன் ஹைபிரிட் மாடலானது அதனை விடக் கூடுதலான விலையைக் கொண்டிருக்கும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: சன்ரூஃப், வென்டிலேட்டட் சீட் போன்ற வசதிகள் முதலில் சொகுசு கார்களில் அறிமுகப்படுத்தப்பட்டு, பின்னரே மாஸ் மார்க்கெட் செக்மெண்டில் அடிப்படை கார்களையும் கூட வந்தடைந்தன. அந்த வகையில் இந்த பிளக்-இன் ஹைபிரிட் பவர்ட்ரெயினும் தற்போது சொகுசு கார்களில் அறிமுகப்படுத்தப்பட்டாலும், விரைவிலேயே மாஸ் மார்க்கெட் பிரிவிற்கும் கொண்டு வரப்படும் என நாங்கள் நம்புகிறோம்.
எலெக்ட்ரிக் கார்களுக்கு வரியில் சலுகை வழங்குவது போல, எந்த வகையான ஹைபிரிட் கார்களுக்கும் மத்திய அரசு சலுகை வழங்குவதில்லை. ஹைபிரிட் கார்கள் முழுமையான எரிபொருள் கார்களுக்கு இணையாகப் பார்க்கப்பட்டு அவற்றுக்கு இணையாகவே வரி விதிக்கப்பட்டு வருகிறது. ஆனால் எரிபொருள் கார்களை விட பிளக்-இன் ஹைபிரிட் கார்களின் தயாரிப்புச் செலவு சற்று அதிகம். இதுவும் பிளக்-இன் ஹைபிரிட் கார்கள் இந்தியாவிற்கு வருதை தாமதப்படுத்துகிறது.


Click it and Unblock the Notifications