மெர்சிடிஸ் மேபக் எஸ் க்ளாஸ் கார் அறிமுகம்: ரூ.3.35 கோடியில் பிளக் இன் ஹைப்ரிட் கார்!
மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் இந்தியாவில் தனது உயர்வகை ஆடம்பர கார் மாடலான மெர்சிடிஸ் மேபக் எஸ் க்ளாஸ் காரை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. அந்நிறுவனத்தின் இந்தியாவுக்கான முதல் பிளக் இன் ஹைப்ரிட் மாடலாக மெர்சிடிஸ் மேபக் எஸ் 580இ என்ற பெயரில் இந்த புதிய மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய ஆடம்பர சொகுசு காருக்கு ரூ.3.35 கோடி எக்ஸ்ஷோரூம் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முதல் லாட்டில் மொத்தமாக 30 யூனிட்டுகள் மட்டுமே இந்தியாவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கிறது.
மேபக் கார்களுக்கே உரிய கைவினை வேலைப்பாடு, பின்புற இருக்கைகளில் வழங்கப்படும் தனிப்பட்ட வசதிகள் மற்றும் சக்திவாய்ந்த பெட்ரோல் மின்சார தொழில்நுட்பம் ஆகியவற்றை இந்த கார் மிக உயரிய அனுபவத்தை வழங்கும். இது பெட்ரோல் எஞ்சின் மற்றும் தேவைப்படும்போது தனியாக எலெக்ட்ரிக் மோட்டாரில் இயங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், இதன் பேட்டரியை தனியாக சார்ஜ் செய்து கொள்ளும் பிளக் இன் ஹைப்ரிட் மாடலாக வந்துள்ளது.

சக்திவாய்ந்த ஹைப்ரிட் கார்
மெர்சிடிஸ் மேபக் எஸ் 580இ என்ற புதிய மாடலில் 6 சிலிண்டர்கள் கொண்ட 3.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சினுடன் மின்சார மோட்டார் இணைக்கப்பட்டுள்ளது. மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் சிறப்பு வாய்ந்த 4மேட்டிக் என்ற 4 வீல் டிரைவ் அமைப்புடன் வரும் இந்த கார் ஒருங்கிணைந்த வகையில் அதிகபட்சமாக 585 எச்பி பவரையும், அதிகபட்சமாக 750 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். இதனுடன் 9ஜி டிரானிக் என்ற ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.
பெட்ரோல் எஞ்சின் மட்டும் 443 எச்பி பவரையும், 560 என்எம் டார்க் திறனையும் வழங்குகிறது. மின்சார மோட்டார் 160 எச்பி பவரையும் மற்றும் 480 நியூட்டன் மீட்டர் டார்க் திறனையும் வழங்க வல்லது. இதன் காரணமாக மணிக்கு 0 முதல் 100 கி.மீ வேகத்தை வெறும் 4.8 வினாடிகளில் எட்டுகிறது. அதிகபட்சமாக மணிக்கு 250 கிமீ வேகம் வரை செல்லும் வகையில் மின்னணு முறையில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
பேட்டரி ரேஞ்ச்
இந்த காரில் 22kWh திறன் கொண்ட மின்கலன் இடம்பெற்றுள்ளது. முழுமையாக சார்ஜ் செய்தால் டபிள்யூஎல்டிபி சோதனை முறையில் 98 கிமீ ரேஞ்ச் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கார் 100 கிமீ வரை செல்லக்கூடியதாக இருக்கும் நிறுவனம் கூறுகிறது. மின் மோட்டாரில் இயங்கும்போது அதிகபட்சமாக மணிக்கு 140 கி.மீ வேகத்தில் பயணிக்க முடியும்.
சார்ஜரை பொறுத்தவரையில் 11kW ஏசி சார்ஜிங் மற்றும் 60kW டிசி விரைவு சார்ஜர்களை சப்போர்ட் செய்யும். வீட்டில் இரவு நேரத்தில் சார்ஜ் செய்வதற்கும், நீண்ட பயணங்களின்போது விரைவாக சார்ஜ் செய்வதற்கும் இது உதவும். ஒவ்வொரு எஸ் 580இ காருடனும் வீட்டிற்கான சார்ஜிங் வசதியை காருடனே மெர்சிடிஸ் பென்ஸ் வழங்குகிறது.
விசாலமான கேபின்
இந்தியாவில் விற்பனை செய்யப்படும் எஸ் 580இ நான்கு இருக்கைகள் கொண்ட சிறப்பு அமைப்பில் மட்டுமே கிடைக்கும். பின்புறத்தில் தனித்தனி இருக்கைகள், இருக்கையின் மையப்பகுதியில் பெரிய கன்சோல், வயர்லெஸ் சார்ஜிங் வசதி மற்றும் குளிர்சாதன வசதியுடன் கன்சோல் ஆகியவையம் உள்ளன. இதனால் பின்புறப் பகுதியில் அமர்பவர்களுக்கு ஆடம்பர அறையில் அமர்ந்து இருப்பது போன்ற அனுபவத்தை வழங்குகிறது.
கூடுதலாக தகவல் மற்றும் பொழுதுபோக்கு கட்டுப்பாடுகள், குளிரூட்டப்பட்ட இருக்கைகள், சுற்றுப்புற விளக்குகள் மற்றும் பிற வசதிகள் இதில் இடம்பெற்றுள்ளன. பர்மெஸ்டர் நான்கு பரிமாண ஒலி அமைப்பில் 31 ஸ்பீக்கர்கள், 8 ட்வீட்டர்கள் மற்றும் 1,610 வாட் வெளியீடு உள்ளது.
பாதுகாப்பிலும் அதிக கவனம்
பாதுகாப்பைப் பொறுத்தவரை 15 காற்றுப்பைகள், ஓட்டுனர் உதவி தொழில்நுட்பம் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன. முன்னால் செல்லும் வாகனத்துடனான இடைவெளியை பராமரித்தல் மற்றும் பாதையில் காரை நிலைநிறுத்த உதவும் வசதிகளும் இதில் இடம்பெற்றுள்ளன. இரவு நேரத்தில் எதிரே வரும் வாகனங்களின் ஓட்டுனர்களின் கண்களை பாதிக்காமல் வெளிச்சத்தை தானாக மாற்றும் திறன் ஹெட்லைட் அமைப்பு உள்ளது. இணையவழி தரவுகளுடன் செயல்படும் ஏர்மேட்டிக் சஸ்பென்ஷன் அமைப்பு, 10 டிகிரி வரை திரும்பக்கூடிய பின்புற சக்கர இயக்க அமைப்பும் காரின் சவாரி வசதியை மேம்படுத்துகின்றன.
மேபக் காருக்கே உரிய தனித்துவம்
வெளிப்புறத்தில் ஒளிரும் மேபக் முன்பக்க கிரில், தரையில் மேபக் சின்னத்தை பிரதிபலிக்கும் விளக்கு, ஒளிரும் கதவு படிக்கட்டுகள் உள்ளிட்டவை காரின் தனித்துவத்தை வெளிப்படுத்துகின்றன. உட்புறத்தில் மனுஃபாக்டூர் கிரிஸ்டல் வெள்ளை மற்றும் சில்வர் கிரே நிற நப்பா லெதர் இன்டீரியர் கொடுக்கப்பட்டு இருக்கிறது.
மொத்தத்தில், மெர்சிடிஸ் மேபக் எஸ் 580இ என்பது அதிக செயல்திறன் கொண்ட பிளக் இன் ஹைப்ரிட் காராக மட்டுமல்லாமல், பின்புற இருக்கையில் பயணிக்கும் வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட அதி ஆடம்பர காராக உருவாக்கப்பட்டுள்ளது. ரூ.3.35 கோடி விலை மற்றும் 30 கார்கள் மட்டுமே கிடைக்கும் என்ற அறிவிப்பு, இந்தியாவில் இதன் பிரத்யேகமான கார் என்ற மதிப்பை மேலும் உயர்த்துகிறது.


Click it and Unblock the Notifications


