கிரெட்டா, செல்டோஸிடம் தாக்குப்பிடிக்க முடியல... எம்ஜி அஸ்டர் கார் விற்பனை நிறுத்தம்!!
இந்தியாவில் நடுத்தர ரக எஸ்யூவி (SUV) கார் சந்தையில் தனக்கென ஒரு இடத்தைப் பிடிக்க முயன்ற எம்ஜி அஸ்டர் (MG Astor) காரின் விற்பனை நிறுத்தப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 2021ம் ஆண்டு அறிமுகமான இந்தக் கார், நவீனத் தொழில்நுட்ப வசதிகளுடன் விற்பனைக்கு வந்தபோதிலும், எதிர்பார்த்த அளவுக்கான வாடிக்கையாளர்களை ஈர்க்க முடியவில்லை. இதற்கிடையே, இதற்கான மாற்று மாடலை 2027-ம் ஆண்டு அறிமுகப்படுத்த எம்ஜி நிறுவனம் தயாராகி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எம்ஜி அஸ்டர் கார் அறிமுகம் செய்யப்பட்டபோது, அதன் ரகத்திலேயே பல முக்கிய வசதிகளுடன் கவனம் ஈர்த்தது. குறிப்பாக, லெவல் 2 ADAS, செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான தனிப்பட்ட உதவியாளர் வசதி, பெரிய பனோரமிக் சன்ரூஃப், 360 டிகிரி கேமரா உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற்றிருந்தன.

ஆனால், ஹூண்டாய் கிரெட்டா (Hyundai Creta), கியா செல்டோஸ் (Kia Seltos), மாருதி சுஸுகி கிராண்ட் விட்டாரா (Maruti Suzuki Grand Vitara), ஃபோக்ஸ்வேகன் டைகுன் (Volkswagen Taigun), ஸ்கோடா குஷாக் (Skoda Kushaq) போன்ற போட்டி மாடல்கள் தொடர்ந்து புதுப்பிக்கப்பட்ட நிலையில், அஸ்டர் காரில் போதிய மாற்றங்கள் செய்யப்படாமல் தொடர்ந்து விற்பனை செய்யப்பட்டது.
விற்பனை பாதிப்பு
மேலும், டீசல், ஹைபிரிட், சிஎன்ஜி போன்ற எரிபொருள் தேர்வுகள் இல்லாததும் அதன் விற்பனையைப் பாதித்தது. கடந்த 2025 செப்டம்பர் முதல் 2026 செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில், அஸ்டர் காரின் சராசரி மாத விற்பனை மிக மிக குறைந்தது. இதனால், சந்தைப் போட்டியை சமாளிக்க முடியாத நிலையில் தற்போது விடைபெற்றுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
அறிமுகம் செய்யப்பட்டபோது அஸ்டர் கார் இரண்டு பெட்ரோல் எஞ்சின் தேர்வுகளுடன் விற்பனைக்கு வந்தது. இதில் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 109 எச்பி பவரையும் 144 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் வகையில் இருந்தது. இது 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் சிவிடி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளுடன் கிடைத்தது.
மற்றொரு 1.3 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் 138 எச்பி பவரையும் 220 என்எம் டார்க்கையும் வழங்கியது. இருப்பினும், இந்த டர்போ எஞ்சின் கடந்த ஆண்டு பிப்ரவரியில் விற்பனையிலிருந்து நீக்கப்பட்டது. அதன் பிறகு 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மட்டுமே முக்கியத் தேர்வாக இருந்தது. இது மேலும் பின்னடவை ஏற்படுத்தியது.
புதிய மாடல் வருகிறது
அஸ்டருக்கு மாற்றாகப் புதிய நடுத்தர ரக எஸ்யூவியை உருவாக்கும் பணியில் எம்ஜி மோட்டார் ஈடுபட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தப் புதிய மாடல், எஸ்ஐஜிஎம்ஏ (SIGMA - SAIC Intelligent Global Modular Architecture) எனப்படும் புதிய தளத்தின் அடிப்படையில் உருவாக்கப்படுவதாக தெரிகிறது. இந்தத் தளத்தின் முக்கியச் சிறப்பு, பெட்ரோல், ஹைபிரிட் மற்றும் முழுமையான மின்சாரத் தொழில்நுட்பம் எனப் பல்வேறு வகையான வாகனங்களை உருவாக்கும் வசதியை அளிக்கும். இதனால், இந்திய வாடிக்கையாளர்களின் தேவைக்கு ஏற்ப பல்வேறு எரிபொருள் தேர்வுகளுடன் புதிய மாடல்களை அறிமுகப்படுத்த எம்ஜிக்கு வாய்ப்பு கிடைக்கும்.
அஸ்டர் காரின் மின்சாரப் பதிப்பாகக் கருதப்படும் எம்ஜி இசட்எஸ் இவி (MG ZS EV) மாடலுக்கும் புதிய தலைமுறை மாடல் உருவாக்கப்படும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தப் புதிய மாடல்கள் வரும் 2027-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக இதுவரை எந்த தகவலையும் எம்ஜி மோட்டார் நிறுவனம் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Via - Team BHP


Click it and Unblock the Notifications


