வெறும் ரூ.5 லட்சத்தில் நம்பகமான எலெக்ட்ரிக் கார்! 5 பேர் தாராளமாக அமர்ந்து செல்லலாம்!
எம்ஜி கோமெட் இவி, இந்தியாவில் குறைவான விலையில் விற்பனை செய்யப்படும் எலெக்ட்ரிக் கார்களுள் ஒன்று. பெட்டகம் வடிவிலான தோற்றத்தில் இருப்பினும், அளவில் சிறியதாக உள்ளதால் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைகளுக்கு மிகவும் ஏற்றதாக விளங்குகிறது. இருப்பினும், இந்த எலெக்ட்ரிக் காரை தாராளமாக வாங்கலாம் என கூறுவதற்கு இன்னும் சில காரணங்கள் உள்ளன. அவை என்னென்ன என்பதை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
வெளிப்புற தோற்றம்: ஏற்கனவே கூறியதுபோல், இது பெட்டகம் வடிவிலான தோற்றத்தை கொண்ட எம்ஜி எலெக்ட்ரிக் கார் ஆகும். நிமிர்ந்த தோற்றம் கொண்ட இந்த காரின் உயரம் அதிகமாகும். கோமெட் இவி காரின் முன்பக்கத்தில் காரின் முழு அகலத்திற்கு எல்இடி லைட்பார் வழங்கப்படுகிறது. இதனை எம்ஜி நிறுவனம் 'நீட்டிக்கப்பட்ட கிடைமட்டம்' என ஆங்கிலத்தில் அழைக்கிறது. இந்த லைட்பாருக்கு அடியில் தான் காரை சார்ஜ் செய்வதற்கான சார்ஜிங் துளைகள் வழங்கப்படுகின்றன.

எம்ஜி லோகோ ஆனது ஒளிரக்கூடியதாக வழங்கப்படுகிறது. இதுமட்டுமின்றி, காரின் பின்பக்கத்தை காண இரு பக்கங்களிலும் வழங்கப்பட்டுள்ள விங் மிரர்கள் இரண்டும் க்ரோம் மற்றும் பியானோ கருப்பு நிற ஸ்ட்ரிப் மூலம் இணைக்கப்பட்டுள்ளன. கோமெட் இவி காரில் 12 இன்ச்சில் அலாய் சக்கரங்கள் வழங்கப்படுகின்றன. காரின் முன்பக்கத்தை போலவே பின்பக்கத்திலும் டெயில்லைட்கள் இரண்டும் லைட்பார் ஒன்றின் மூலமாக இணைக்கப்பட்டு வழங்கப்படுகின்றன.
பரிமாண அளவுகள்: எம்ஜி கோமெட் இவி ஆனது 2,974மிமீ நீளம், 1,505மிமீ அகலம் மற்றும் 1,640மிமீ உயரம் கொண்டது ஆகும். இந்த காரில் முன் & பின் சக்கரங்களுக்கு இடையேயான தூரம் ஆனது 2,010மிமீ ஆக உள்ளது. அளவில் சிறியதான காராக இருப்பதால், வெறும் 4.2 மீட்டர் பரப்பளவிலான இடத்தில் இந்த காரை திருப்பிவிட முடியும்.

உட்புற தோற்றம்: எம்ஜி கோமெட் இவி காரின் உட்புற கேபின் ஆனது வெள்ளை மற்றும் கிரே என இரு நிறங்களில் வழங்கப்படுகிறது. தொழிற்நுட்ப அம்சங்களாக காரின் டாஷ்போர்டில் 10.24-இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் திரை மற்றும் 10.24-இன்ச் டச் ஸ்க்ரீன் டிஜிட்டல் இன்ஃபோடெயின்மெண்ட் திரை வழங்கப்படுகின்றன. கியர் செலக்டர் ஆனது சுழற்றி தேர்வு செய்யக்கூடியதாக உள்ளது.
இவற்றுடன், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ & ஆப்பிள் கார்ப்ளே இணைப்பு வசதி, சாவியை நுழைக்காமல் காருக்குள் நுழையும் வசதி, ஆடியோ கண்ட்ரோல்கள் உடன் ஸ்டீயரிங் சக்கரம், ரிவர்ஸில் பார்க் செய்வதற்கு உதவியாக கேமரா, பவர் ஃபோல்டிங் ORVM-கள், 4-ஸ்பீக்கர் ஆடியோ சிஸ்டம் மற்றும் லெதரேட்டட் இருக்கைகள் உள்ளிட்டவையும் வழங்கப்படுகின்றன.
பேட்டரி & ரேஞ்ச்: எம்ஜி கோமெட் இவி எலெக்ட்ரிக் காரில் 17.3kWh திறன் கொண்ட பேட்டரி வழங்கப்படுகிறது. இது பொருத்தப்படும் எலெக்ட்ரிக் மோட்டார் ஆனது இயக்க ஆற்றலை காரின் பின் சக்கரங்களுக்கு வழங்குகிறது. அதிகப்பட்சமாக 41.43 பிஎச்பி மற்றும் 110 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக் கூடியதாக இந்த காரில் எலெக்ட்ரிக் மோட்டார் உள்ளது. இந்த காரின் பேட்டரியை முழுமையாக சார்ஜ் நிரப்பினால் அதிகப்பட்சமாக 230கிமீ வரையிலான தொலைவிற்கு காரை இயக்கி செல்லலாம் என்கிறது எம்ஜி மோட்டார் நிறுவனம்.
விலை: எம்ஜி கோமெட் இவி எலெக்ட்ரிக் காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் தற்சமயம் ரூ.7.62 லட்சத்தில் இருந்து ரூ.9.99 லட்சம் வரையில் உள்ளன. பேட்டரி இல்லாமல், BaaS ஆப்ஷனிலும் கோமெட் இவி விற்பனை செய்யப்படுகிறது. BaaS ஆப்ஷனில் இந்த எலெக்ட்ரிக் காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் வெறும் ரூ.4.99 லட்சத்தில் இருந்து ரூ.3.20 லட்சம் வரையில் உள்ளன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இவ்வளவு குறைவான விலையில், அளவில் சிறியதான எலெக்ட்ரிக் காராக இருப்பினும், கோமெட் இவி-இன் விற்பனை கொஞ்சம் சுமாராகவே உள்ளது. அதேநேரம், எம்ஜி நிறுவனம் எதிர்பார்க்காத அதன் விண்ட்சர் இவி எலெக்ட்ரிக் காருக்கு சிறப்பான வரவேற்பு கிடைத்து வருகிறது. இருப்பினும், குடும்பத்திற்கு என சிறிய அளவிலான எலெக்ட்ரிக் காரை வாங்க விரும்புபவர்கள் தாராளமாக எம்ஜி கோமெட் இவி-ஐ தேர்வு செய்யலாம்.


Click it and Unblock the Notifications