1100கிமீ ரேஞ்ச்... புதிய எம்ஜி ஹெக்டர் ஹாக் 7 சீட்டர் வாங்க காத்திருக்கீங்களா? 7 முக்கிய விஷயங்கள்!!
இந்தியாவில் 7 சீட்டர் கார்களுக்கான வரவேற்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த ரகத்தில் பல புதிய மாடல்கள் பிரிமீயம் அம்சங்களுடன் இந்த பண்டிகை காலத்தில் அறிமுகம் செய்யப்பட உள்ளன. அதில், எம்ஜி மோட்டார் நிறுவனத்திடம் இருந்து வரும் ஹெக்டர் ஹாக் எஸ்யூவி பெரிய எதிர்பார்ப்பை வாடிக்கையாளர் மத்தியில் ஏற்படுத்தி உள்ளது.
டிசைன், இடவசதி, ஹைப்ரிட் மற்றும் எலெக்ட்ரிக் என பல்வேறு சிறப்பம்சங்களுடன் வர இருக்கும் இந்த புதிய 7 சீட்டர் எஸ்யூவி குறித்த முக்கிய விஷயங்களை இந்த செய்தியில் தொடர்ந்து பார்க்கலாம். இந்த காரின் விலை, தொழில்நுட்ப அம்சங்கள் உள்ளிட்ட அனைத்து தகவல்களும் வரும் 26ந் தேதி இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட உள்ள நிலையில், இந்த கார் குறித்த முக்கிய விஷயங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

(Representative Image - Wuling Starlight 560)
1. முற்றிலும் புதிய மாடல்
இந்த புதிய கார் ஹெக்டர் ஹாக் எஸ்யூவியில் ஹெக்டர் பெயர் இருந்தாலும், இது முற்றிலும் புதிய மாடலாக வருகிறது. சீனாவில் விற்பனையாகும் வூலிங் ஸ்டார்லைட் 560 எஸ்யூவியின் அடிப்படையில் இந்தியாவுக்கான மாடலாக மாற்றங்கள் செய்யப்பட்டு வர இருக்கிறது. அண்மையில் இந்தியாவில் எம்ஜி நிறுவனம் அறிமுகம் செய்த ADAPT என்ற புத்தம் புதிய கட்டமைப்புக் கொள்கையில் உருவாக்கப்பட்டுள்ளது.
2. ஹைப்ரிட் தொழில்நுட்பம்
புதிய ஹெக்டர் ஹாக் எஸ்யூவி எலெக்ட்ரிக் மற்றும் ஹைப்ரிட் மாடல்களில் எதிர்பார்க்கப்படுகிறது. இதில், ஹைப்ரிட் மாடல் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இதில், பெட்ரோல் எஞ்சின் மற்றும் மின் மோட்டார் இணைந்த 'ஸ்ட்ராங் ஹைப்ரிட்' ரக மாடலாக வர இருக்கிறது. அதாவது, தினசரி குறுகிய தூரம் பயணிப்பதற்கு பெட்ரோல் எஞ்சின் துணையின்றி, இதில் உள்ள பேட்டரியை சார்ஜ் செய்து கொண்டு மின்சார கார் போல சென்று வர முடியும். நீண்ட தூர பயணங்களின்போது பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்திக் கொள்ளலாம்.
3. ஹைப்ரிட் பவர்
வெளிநாடுகளில் விற்பனையில் உள்ள PHEV என்ற ஹைப்ரிட் மாடலில் 1.5 லிட்டர் பெட்ரோ்ல எஞ்சின் மற்றஉம் மின் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. மேலும், 20kWh பேட்டரி உள்ளது. இந்த ஸ்ட்ராங் ஹைப்ரிட் மாடல் 194 பிஎச்பி பவரையும், 230 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லது. மின்சார கார் போன்று இந்த காரில் வழங்கப்பட உள்ள பேட்டரியை வீட்டு சார்ஜர் மூலமாக சார்ஜ் செய்து தினசரி அலுவலகம் உள்ளிட்ட பயணங்களுக்கு பயன்படுத்தப்படலாம். பேட்டரி சார்ஜில் மட்டும் 100 கிமீ வரை செல்லும். பேட்டரி மற்றும் பெட்ரோல் எஞ்சின் இரண்டையும் சேர்த்து பயன்படுத்தும்போது சீனாவின் சோதனை நிலை தரவுகளின்படி, 1,100 கிமீ தூரம் பயணிக்கும் வாய்ப்பை வழங்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.
4. எலெக்ட்ரிக் வெர்ஷன்
புதிய எம்ஜி ஹெக்டர் ஹாக் எஸ்யூவியில் பெட்ரோல் ஹைப்ரிட் மாடல் மட்டுமின்றி, முழுமையான எலெக்ட்ரிக் கார் மாடலாகவும் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த மாடலில் 56.7kWh பேட்டரி பொருத்தப்பட்டு இருக்கும். இந்த மாடல் 136 பிஎச்பி பவரையும், 200 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லதாக இருக்கும். ஒருமுறை பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 500 கிமீ தூரம் வரை பயணிக்கும் வாய்ப்பை வழங்கும்.
5. ஃபேமிலி எஸ்யூவி
தற்போது இந்தியாவில் விற்பனையில் உள்ள ஹெக்டர் எஸ்யூவி 2,750 மிமீ வீல்பேஸ் நீளத்தை பெற்றிருக்கிறது. வூலிங் எஸ்யூவி 4,745மிமீ நீளமும், 1,850மிமீ அகலமும், 1,755மிமீ உயரமும் பெற்றிருக்கிறது. மேலும், 2,810 மிமீ வீல்பேஸ் பெற்றிருப்பதால், ஹெக்டரைவிட பரிமாணத்தில் சற்றே பெரிய காராகவும் இருக்கும். இதனால், உட்புறத்தில் 7 பேர் பயணிப்பதற்கு சவுகரியமான இடவசதியை அளிக்கும் என்று நம்பலாம்.
6. ஏராள வசதிகள்
எம்ஜி நிறுவனம்தான் முதல்முறையாக கார்களில் இன்டர்நெட் வசதியை நேரடியாக பெறுவதற்கான வாய்ப்பை தனது கார்கள் மூலமாக இந்தியாவில் அறிமுகம் செய்தது. அதேபோன்று, புதிய தலைமுறை மாடலாக வரும் ஹெக்டர் ஹாக் எஸ்யூவியிலும் பெரிய தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 360 டிகிரி கேமரா, அடாஸ், வயர்லெஸ் சார்ஜர் உள்பட ஏராளமான கனெக்டெட் கார் வசதிகள் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
7. வெற்றியை நிர்ணயிக்கும் காரணி
புதிய எம்ஜி ஹெக்டர் ஹாக் ஹைப்ரிட் மற்றும் எலெக்ட்ரிக் எஸ்யூவி மாடல்கள் இந்திய வாடிக்கையாளர் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளன. ஆனால், விலையை மட்டும் சரியாக நிர்ணயித்துவிட்டால், நிச்சயம் அதிக வரவேற்பை பெறும் வாய்ப்பு இருக்கிறது. ரூ.23 லட்சம் முதல் ரூ.25 லட்சம் ஆரம்ப பட்ஜெட்டில் எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications