சரியாக இன்னும் 10 நாட்களில் அறிமுகமாகும் எம்ஜி 7 சீட்டர் எலெக்ட்ரிக் எஸ்யூவிக்கு புக்கிங் துவங்கியது!
எம்ஜி மோட்டார் நிறுவனம் விரைவில் தனது 7 சீட்டர் எலெக்ட்ரிக் எஸ்யூவியை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கிறது. ஹெக்டர் ஹாக்(Hector Hawk) என்ற பெயரில் வர இருக்கும் இந்த புதிய எஸ்யூவிக்கான முன்பதிவு அதிகாரப்பூர்வமாக டீலர்களில் துவங்கப்பட்டுள்ளது. ரூ.21,000 முன்பணம் செலுத்தி, முன்பதிவு செய்து கொள்ளலாம்.
எலெக்ட்ரிக் எஸ்யூவி மாடல்களுக்கான வரவேற்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக, இந்திய குடும்பத்தினர் ஒன்றாகவும், வசதியாகவும் செல்வதற்கு ஏதுவான 7 சீட்டர் எஸ்யூவி மாடல்களுக்கான வணிகமும் சிறப்பான வளர்ச்சி பெற்று வருகிறது. இதனை மனதில் வைத்து ஜேஎஸ்டபிள்யூ-எம்ஜி மோட்டார் கூட்டணி இந்தியாவில் புதிய 7 சீட்டர் எலெக்ட்ரிக் எஸ்யூவியை வரும் 26ந் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

சீனாவில் விற்பனையில் இருக்கும் வூலிங் ஸ்டார்லைட் 560 என்ற மாடலின் அடிப்படையிலான எலெக்ட்ரிக் எஸ்யூவியாக எம்ஜி மோட்டார் பிராண்டில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த எலெக்ட்ரிக் எஸ்யூவியை தொடர்ந்து பிளக் இன் ஹைப்ரிட் என்ற எரிபொருள் வகை மாடலும் விரைவில் இந்தியா வர இருக்கிறது.
பெயரில் ஹெக்டர் இருப்பதால், தற்போது விற்பனையில் உள்ள மாடலுடன் டிசைன், பரிமாணத்தில் ஒத்துப்போகும் என்று கருதக்கூடாது. இது முற்றிலும் புதிய வடிவமைப்பு மற்றும் பரிமாணத்தில் வர இருக்கிறது. அதாவது, தற்போது உள்ள ஹெக்டர் ப்ளஸ் எஸ்யூவியைவிட பெரிய மாடலாக இருக்கும். மேலும், அண்மையில் இந்தியாவில் எம்ஜி மோட்டார் நிறுவனம் ADAPT என்ற பெயரில் புதிய பிளாட்ஃபார்மை அறிமுகம் செய்தது.
இந்த புதிய அடாப்ட் கட்டமைப்புக் கொள்கையின் கீழ்தான் இந்த புதிய மாடல் உருவாக்கப்பட்டு இருக்கிறது. மூன்று வரிசை இருக்கை அமைப்புடைய கேபின் என்பதுடன் ஹெக்டரைவிட வீல்பேஸ் நீளம் அதிகமாக இருக்கும் என்பதால், உட்புறத்தில் பயணிகளுக்கு சிறப்பான இடவசதியை வழங்கும் என எதிர்பார்க்கலாம்.
புதிய ஹெக்டர் ஹாக் எலெக்ட்ரிக் எஸ்யூவியில் டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளே, பெரிய இன்ஃபோடெயின்மென்ட் அமைப்பு, பனோரமிக் சன்ரூஃப், 360 டிகிரி கேமரா, அடாஸ் பாதுகாப்பு தொழில்நுட்பம், வயர்லெஸ் சார்ஜிங், கனெக்டெட் கார் வசதிகளுடன் பிரிமீயமாக இருக்கும். அதேநேரத்தில், எத்தனை வேரியண்ட்டுகளில் வருகிறது என்ற தகவல் இதுவரை வெளியிடப்படவில்லை.
வூலிங் ஸ்டார்லைட் 560 எஸ்யூவியில் பயன்படுத்தப்படும் 56.7kWh பேட்டரியும், முன்சக்கரங்களுக்கு சக்தியை வழங்கும் மின் மோட்டாரும் இடம்பெற்றிருக்கும் என்று தெரிகிறது. சோதனை ஓட்ட தகவல்கள்படி, ஒருமுறை பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 500 கிமீ தூரம் வரை பயணிக்கும் திறனை பெற்றிருக்கும்.
இதைத்தொடர்ந்து வர இருக்கும் ஹைப்ரிட் மாடலில் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின், மின் மோட்டார் மற்றும் 20.5kWh பேட்டரியும் கொடுக்கப்பட்டு இருக்கும். தினசரி பயன்பாட்டின்போது பெட்ரோல் எஞ்சின் இல்லாமல் பேட்டரி சார்ஜில் மட்டுமே எலெக்ட்ரிக் மோட்டாரை பயன்படுத்தி இயக்க முடியும். ஒருமுறை பேட்டரியை சார்ஜ் செய்தால் 100 கிமீ தூரம் வரை பயணிக்கும் வாய்ப்பை வழங்கும் என்று தெரிகிறது. இதனால், இந்த மாடல் மீதும் அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது.
வரும் 26ந் தேதி விற்பனைக்கு எதிர்பார்க்கப்படும் நிலையில் புதிய எம்ஜி ஹெக்டர் ஹாக் எலெக்ட்ரிக் எஸ்யூவி பண்டிகை காலத்தில் புதிய கார் வாங்க திட்டமிட்டுள்ளோரின் தேர்வில் இடம்பெறும் என்று கருதப்படுகிறது. 7 சீட்டர் எஸ்யூவிகளில் நடுத்தர வகை பிரிமீயம் மாடலாக இது நிலைநிறுத்தப்படும் என்று கூறலாம்.


Click it and Unblock the Notifications