எம்ஜி ஹெக்டர் டோமாஹாக் EV விலை ரூ.75,000 வரை உயர்வு! PHEV காருக்கும் விலை அதிகரிப்பு!
அண்மையில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட புதிய எம்ஜி ஹெக்டர் டோமாஹாக் கார்களின் விலை தடாலடியாக உயர்த்தப்பட்டு இருக்கிறது. இதில் மின்சார காரான EV மாடலின் விலை அதிகபட்சமாக ரூ.75,800 வரை உயர்த்தப்பட்டுள்ளது. பிளக்-இன் ஹைபிரிட் மாடலுக்கும் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்த விலை மாற்றத்தால் புதிய எம்ஜி ஹெக்டர் டோமாஹாக் காரை வாங்கத் திட்டமிடுபவர்கள் கூடுதல் தொகையைச் செலவிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, மின்சார காரின் ஆரம்ப விலையே ரூ.20 லட்சத்தைத் தாண்டியுள்ளது. இரண்டு மாடல்களின் புதிய விலைகள் மற்றும் தொழில்நுட்ப அம்சங்கள் குறித்துப் பார்க்கலாம்.

புதிய விலை
எம்ஜி ஹெக்டர் டோமாஹாக் EV கார் எக்ஸைட், எக்ஸ்க்ளூசிவ் மற்றும் எசென்ஸ் என மூன்று வேரியண்ட்டுகளில் விற்பனை செய்யப்படுகிறது. இதில் ஐந்து இருக்கைகள் மற்றும் ஏழு இருக்கைகள் கொண்ட தேர்வுகள் வழங்கப்படுகின்றன. தற்போது அனைத்து வேரியண்ட்டுகளின் விலையும் ரூ.75,800 வரை உயர்த்தப்பட்டுள்ளது.
இதன்படி, ஆரம்ப நிலை எக்ஸைட் 7 சீட்டர் வேரியண்ட் விலை ரூ.19.49 லட்சத்தில் இருந்து ரூ.20.24 லட்சமாக உயர்ந்துள்ளது. எக்ஸ்க்ளூசிவ் 7 சீட்டர் விலை ரூ.21.99 லட்சத்தில் இருந்து ரூ.22.74 லட்சமாக அதிகரித்துள்ளது. அதேபோல், எசென்ஸ் 5 சீட்டர் வேரியண்ட் விலை ரூ.22.99 லட்சத்தில் இருந்து ரூ.23.74 லட்சமாக உயர்ந்துள்ளது. எசென்ஸ் 7 சீட்டர் வேரியண்ட் விலை ரூ.23.49 லட்சத்தில் இருந்து ரூ.24.24 லட்சமாக அதிகரித்துள்ளது. இதனால் இந்த மின்சார காரின் விலை வரம்பு தற்போது ரூ.20.24 லட்சம் முதல் தொடங்குகிறது.
இந்த மின்சார எஸ்யூவியில் 69.2 kWh திறன் கொண்ட LFP பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இதனுடன் இணைக்கப்பட்டுள்ள நிரந்தர காந்த மின்சார மோட்டார் அதிகபட்சமாக 204 எச்பி பவரையும் 310 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்துகிறது. இதன் மூலம் குடும்பப் பயணங்களுக்கும் நீண்ட தூரப் பயணங்களுக்கும் ஏற்ற செயல்திறனை வழங்குகிறது.
இந்த காரின் பேட்டரியை ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 517 கி.மீ தூரம் வரை செல்லும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், மணிக்கு பூஜ்ஜியத்திலிருந்து 100 கி.மீ வேகத்தை வெறும் 8.2 விநாடிகளில் எட்டிவிடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சார்ஜிங் வசதியைப் பொறுத்தவரை, இந்த கார் 90 kW DC ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியைப் பெறுகிறது. இதன் மூலம் பேட்டரியை 30 சதவீதத்திலிருந்து 80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய சுமார் 35 நிமிடங்கள் போதுமானது. 7.4 kW AC சார்ஜரைப் பயன்படுத்தினால் 10 முதல் 100 சதவீதம் வரை சார்ஜ் செய்ய சுமார் 12.5 மணி நேரம் பிடிக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.
டோமாஹாக் PHEV விலை உயர்வு
எம்ஜி ஹெக்டர் டோமாஹாக் எலெக்ட்ரிக் வெர்ஷன் மட்டுமின்றி, அதன் PHEV மாடலின் விலையையும் எம்ஜி நிறுவனம் உயர்த்தியுள்ளது. இந்த பிளக்-இன் ஹைபிரிட் கார் எக்ஸ்க்ளூசிவ் மற்றும் எசென்ஸ் என இரண்டு வேரியண்ட்டுகளில் மட்டுமே கிடைக்கிறது. இரண்டுமே ஏழு இருக்கைகள் கொண்ட மாடல்களாக விற்பனை செய்யப்படுகின்றன.
இதில் எக்ஸ்க்ளூசிவ் வேரியண்ட் விலை ரூ.25.69 லட்சத்தில் இருந்து ரூ.25.69 லட்சத்து 800 ஆக உயர்ந்துள்ளது. எசென்ஸ் வேரியண்ட் விலை ரூ.27.79 லட்சத்தில் இருந்து ரூ.27.79 லட்சத்து 800 ஆக அதிகரித்துள்ளது. இரண்டு வேரியண்ட்டுகளுக்கும் ரூ.800 விலை உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
PHEV எஞ்சின் மற்றும் ரேஞ்ச்
இந்த பிளக்-இன் ஹைபிரிட் காரில் 1.5 லிட்டர் அட்கின்சன் சைக்கிள் பெட்ரோல் எஞ்சின், மின்சார மோட்டார் மற்றும் 20.5 kWh பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. பெட்ரோல் எஞ்சின் 102 எச்பி பவர், 125 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்துகிறது. மின்சார மோட்டார் 201 எச்பி பவரையும் 237 என்எம் டார்க்கையும் வழங்குகிறது.
இந்த காரின் பேட்டரி சார்ஜ் மூலம் மட்டும் இயக்கினால் 115 கி.மீட்டருக்கும் அதிகமான தூரம் பயணிக்க முடியும் என எம்ஜி தெரிவித்துள்ளது. பேட்டரி முழுமையாக சார்ஜ் செய்யப்பட்டு, 52 லிட்டர் பெட்ரோல் டேங்கும் நிரம்பியிருந்தால் ஒட்டுமொத்தமாக 1,100 கி.மீட்டருக்கும் அதிகமான தூரம் செல்ல முடியும் என நிறுவனம் கூறுகிறது.
ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, ஹெக்டர் டோமாஹாக் EV மாடலின் விலை உயர்வு மின்சார கார் வாங்கத் திட்டமிடுபவர்களுக்கு கூடுதல் செலவை ஏற்படுத்தியுள்ளது. அதே நேரத்தில், PHEV மாடலில் அறிவிக்கப்பட்டுள்ள விலை உயர்வு சொற்ப அளவில் இருப்பது ஆறுதலான விஷயமாக மாறி இருக்கிறது.


Click it and Unblock the Notifications


