விமர்சனத்திற்கு உள்ளாகும் எம்ஜி ஹெக்டர் டோமாஹாக் கார் சஸ்பென்ஷன்! என்ன பிரச்சினை?
சென்னை: எம்ஜி ஹெக்டர் டோமாஹாக் (MG Hector Tomahawk) காரின் சஸ்பென்ஷன் (Suspension) மோசமாக இருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. மெதுவாக சென்றாலும் சரி வேகமாக சென்றாலும் சரி சஸ்பென்ஷன் தொல்லை தருவதாகவும், 80 கி.மீ வேகத்தில் செல்லும்போதுதான் நன்றாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
டோமாஹாக் அறிமுகமானதும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது அதன் இன்ஜின் ஆப்ஷன்கள்தான். Plug-in Hybrid (PHEV) ஆப்ஷன்தான் அதில் டாப். முழு இவியாகவும் இல்லாமல், பெட்ரோல், டீசல் வாகனமாகவும் இல்லாமல், தேவைப்படும்போது சார்ஜ் போடுவதும் மற்ற நேரங்களில் பெட்ரோலில் ஓடுவதுமாக இருப்பதுதான் இந்த ஆப்ஷனில் சிறப்பு. இந்தியா போன்ற இவி கட்டமைப்பு வளராத நாடுகளுக்கு இது ஏற்றது. இது தவிர இவி, பெட்ரோல், டீசல் ஆகிய ஆப்ஷன்களிலும் டோமோஹாக் அறிமுகம் செய்யப்பட்டது.

இருப்பினும் இதன் சஸ்பென்ஷன் மோசமாக இருப்பதால் பயணிகளால் சொகுசை உணர முடியவில்லை என்று பல யூடியூப் விமர்சகர்கள் தெரிவித்துள்ளார்கள். டோமாஹாக் மாடலில் மேக்ஃபர்சன் ஸ்ட்ரட் (MacPherson strut) மற்றும் பின் பகுதியில் மல்டி-லிங்க் (Multi-link) சஸ்பென்ஷன் கொடுக்கப்பட்டிருந்தாலும், இதன் ட்யூனிங்கில் கோட்டை விட்டுள்ளார்களாம். சற்று கடினமான (Firmer side) தன்மையுடன் இருப்பதாக சில வாகன ஓட்டிகள் குற்றம்சாட்டுகின்றனர். இதனால் குண்டு குழிகளில் வண்டி செல்லும் போது அதன் அதிர்வுகள் கேபினுக்குள் அதிகமாகத் தெரிவதாகக் கூறப்படுகிறது.
பிரபல யூடியூபர் ஒருவர் வாகனத்தை ஓட்டிப் பார்த்துவிட்டு கூறுகையில், இந்த வண்டி 80 கிமீ வேகத்தில் பயணிக்கும்போது நன்றாக உள்ளது. இந்த மிட்ரேஞ்சை விட குறைவாகவும், அல்லது வேகமாகவும் வாகனம் செல்லும்போது அதிர்வு தெரிகிறது. இந்திய சாலைகளில் தொடர்ச்சியாக 80 கி.மீ வேகத்தில் யாரும் வாகனத்தை இயக்க முடியாது. எனவே இது நம்ம ஊருக்கு சரிபட்டு வராது என்கிறார்.
வண்டியை வாங்குவதற்கு முன்பு வாடிக்கையாளர்கள் தங்களது குடும்பத்தினருடன் கரடுமுரடான சாலைகளில் ஒருமுறை நேரில் டெஸ்ட் டிரைவ் (Test Drive) செய்து பார்ப்பது நல்லது என்ற ஐடியாவை தருகிறார்கள் ஆட்டோமொபைல் துறையினர்.
மல்டி-லிங்க் கொடுத்திருந்தால் சஸ்பென்ஷன் மிகச் சிறப்பாக இருப்பதுதான் வாடிக்கை. 25 லட்சத்திற்கு மேல் ஆன்-ரோடு விலை வரும் எந்த ஒரு எஸ்யூவிக்கும் இதுபோன்ற சஸ்பென்ஷன் கொடுப்பதுதான் சிறப்பாக இருக்கும். ஆனால் அதை கொடுத்தும் இப்படி வாடிக்கையாளர்கள் மனது நொந்துபோகும் அளவுக்கு இந்த வாகனம் ஏன் உள்ளது என்பது கேள்வியாக மாறியுள்ளது.
புதிய வகை இன்ஜின் ஆப்ஷனை கொண்டுவரும்போது போதிய அளவுக்கு கணிக்க தவறி ட்யூனிங்கை செய்ததுதான் இந்த பிரச்சினைக்கு காரணம் என்று தெரிகிறது. நீங்களும் ஓட்டிப் பார்த்துவிட்டு நமது சேனலில் கருத்து தெரிவிக்க மறக்காதீர்கள்.


Click it and Unblock the Notifications
