டொயோட்டா ஃபார்ச்சூனருக்கு அப்பன்! ஒட்டுமொத்த இந்தியாவும் காத்து கிடக்கும் காரின் உற்பத்தி தொடங்கியது!
இந்தியாவின் ஃபுல் சைஸ் எஸ்யூவி (Full Size SUV) செக்மெண்ட்டில் முழுமையாக ஆதிக்கம் செலுத்தி கொண்டுள்ள கார் எது? என்று கேட்டால், டொயோட்டா ஃபார்ச்சூனர் (Toyota Fortuner) என கொஞ்சம் கூட தயங்காமல் உறுதியாக பதில் சொல்லலாம். ஆனால் டொயோட்டா ஃபார்ச்சூனரின் ஆதிக்கத்திற்கு முடிவு கட்டும் என எதிர்பார்க்கப்படும் ஒரு கார் கூடிய விரைவில் விற்பனைக்கு வரவுள்ளது.
அது எம்ஜி மெஜஸ்டர் (MG Majestor) ஆகும். இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள எம்ஜி மெஜஸ்டர் எஸ்யூவி கார், கூடிய விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. அதற்கு முன்னதாக, எம்ஜி மெஜஸ்டர் காரின் உற்பத்தி பணிகள் தற்போது அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டுள்ளன.

குஜராத் மாநிலம் ஹலோல் பகுதியில் உள்ள ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி மோட்டார் (JSW MG Motor) நிறுவனத்தின் தொழிற்சாலையில் எம்ஜி மெஜஸ்டர் கார் உற்பத்தி செய்யப்படுகிறது. தற்போது உற்பத்தி பணிகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்னதாகவே, எம்ஜி மெஜஸ்டர் காருக்கு முன்பதிவுகளை (Bookings) ஏற்கும் பணிகள் தொடங்கப்பட்டு விட்டன.
விருப்பம் உள்ள வாடிக்கையாளர்கள், ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளம் மூலமாகவோ அல்லது அவர்களின் அங்கீகாரம் பெற்ற டீலர்ஷிப்கள் மூலமாகவோ, 41 ஆயிரம் ரூபாயை முன்பணமாக செலுத்தி, எம்ஜி மெஜஸ்டர் எஸ்யூவி காரை தற்போது முன்பதிவு செய்து கொள்ள முடியும்.

எம்ஜி மெஜஸ்டர் காரில், 2.0 லிட்டர் ட்வின் டர்போ டீசல் இன்ஜின் ஆப்ஷன் (Engine Option) வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 213 பிஹெச்பி பவரையும், 478 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடிய வகையில் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் உடன், 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷன் (Gear Box Option) கொடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் எம்ஜி மெஜஸ்டர் காரில் 4x4 சிஸ்டமும் வழங்கப்பட்டுள்ளது. எனவே இந்த காரில், ஆஃப் ரோடு சாகச பயணங்களையும் மேற்கொள்ள முடியும். இது டொயோட்டா ஃபார்ச்சூனருக்கு போட்டியாக வரவுள்ள விலை உயர்ந்த கார் ஆகும். எனவே அதிநவீன வசதிகளுக்கு (Features) சற்றும் பஞ்சம் இல்லை.
இதில், 12.3 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், மசாஜ் மற்றும் வென்டிலேஷன் வசதியுடன் கூடிய முன் பக்க இருக்கைகள், பனரோமிக் சன்ரூஃப், வயர்லெஸ் செல்போன் சார்ஜர் மற்றும் 10 ஆஃப்-ரோடு மோட்கள் போன்றவை எல்லாம் குறிப்பிடத்தக்க வசதிகள் ஆகும்.
எம்ஜி மெஜஸ்டர் காரின் பாதுகாப்பு வசதிகளை (Safety Features) பொறுத்தவரையில், லெவல் 2 அடாஸ் (ADAS - Advanced Driver Assistance Systems), 360 டிகிரி கேமரா மற்றும் 6 ஏர்பேக்குகள் போன்றவை எல்லாம் மிகவும் முக்கியமான அம்சங்கள் ஆகும். இப்படி பல்வேறு சிறப்பம்சங்கள் நிரம்பிய எம்ஜி மெஜஸ்டர் காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை சுமார் 40 லட்ச ரூபாய் என்கிற அளவில் நிர்ணயம் செய்யப்படலாம்.
இது எதிர்பார்க்கப்படும் எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும். விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் சமயத்தில்தான் அதிகாரப்பூர்வமான விலை எவ்வளவு? என்பது அறிவிக்கப்படும். அனேகமாக நடப்பு மே மாத இறுதியிலோ அல்லது அடுத்த மாத (ஜூன்) தொடக்கத்திலோ எம்ஜி மெஜஸ்டர் கார் இந்திய சந்தையில் அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: எம்ஜி மெஜஸ்டர் விற்பனைக்கு வரவுள்ள நிலையில், டொயோட்டா நிறுவனமும் வெகுவாக அப்டேட் செய்யப்பட்ட ஃபார்ச்சூனரை காரை, இந்திய சந்தையில் விரைவில் விற்பனைக்கு களமிறக்கவுள்ளது. எனவே எதிர்காலத்தில் இந்தியாவின் ஃபுல் சைஸ் எஸ்யூவி செக்மெண்ட்டில் போட்டி அனல் பறக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications