இந்தியாவில் எம்ஜி மோட்டாரின் புதிய சாதனை... ஜூலையில் 22% உயர்ந்த கார் விற்பனை!
எம்ஜி கார் நிறுவனத்தின் விற்பனை இந்தியாவில் இதுவரை இல்லாத உச்சபட்ச எண்ணிக்கையை தொட்டு அசத்தி இருக்கிறது. அந்த நிறுவனம் கடந்த ஜூலையில் 8,158 கார்களை டீலர்களுக்கு அனுப்பி உள்ளதாக தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு ஜூலையுடன் ஒப்பிடும்போது இது 22 சதவீதம் அளவுக்கு உயர்ந்துள்ளது. மேலும், அந்நிறுவனத்தின் மாதாந்திர விற்பனையில் இதுவே அதிகபட்ச மொத்த விற்பனையாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் கார் விற்பனை இந்தியாவில் உயர்ந்து வருவதற்கு அந்நிறுவனத்தின் எலெக்ட்ரிக் கார் மாடல்கள் முக்கியமாக அமைந்துள்ளது. குறிப்பாக, அந்நிறுவனத்தின் ஜூலை விற்பனையில் கிட்டத்தட்ட 70 சதவீதத்திற்கும் மேலான பங்களிப்பை எலெக்ட்ரிக் கார்கள்தான் வழங்குகின்றன.

நடுத்தர ரக பிரிவில் உள்ள எம்ஜி வின்ட்சர் எலெக்ட்ரிக் கார்தான் விற்பனையில் முக்கிய பங்களிப்பை வழங்கி உள்ளது. கடந்த கால விற்பனை புள்ளிவிபரங்களின்படி, அந்நிறுவனத்தின் மொத்த விற்பனையில் வின்ட்சர் எலெக்ட்ரிக் கார்தான் கிட்டத்தட்ட 60 சதவீத பங்களிப்பை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. அதேபோன்று, நகர்ப்புற பயன்பாட்டிற்காக விற்பனை செய்யப்படும் சிறிய வகை காமெட் எலெக்ட்ரிக் காரும், இசட்எஸ் இவி என்ற பிரிமீயம் ரக மிட்சைஸ் எஸ்யூவி காரும் விற்பனையில் கைகொடுத்து வருகின்றன.
எலெக்ட்ரிக் கார்கள் மட்டுமின்றி, ஹெக்டர், ஹெக்டர் ப்ளஸ், அஸ்டர் மற்றும் மெஜெஸ்ட்டர் ஆகிய கார்களையும் இந்தியாவில் எம்ஜி மோட்டார் நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. மிகவும் பிரிமீயம் ரகத்தில் எம்9 எலெக்ட்ரிக் எம்பிவி கார் மற்றும் சைபர்ஸ்டெர் எலெக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் கார் மாடல்களும் நிலைநிறுத்தப்பட்டு இருக்கின்றன. இவை எம்ஜி நிறுவனத்தின் பிராண்டு மதிப்பை பரைசாற்றும் மாடல்களாக விற்பனையில் வைக்கப்பட்டுள்ளன.
இங்கிலாந்தை சேர்ந்த எம்ஜி மோட்டார் நிறுவனம் சீனாவை சேர்ந்த செயிக் வாகன குழுமத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. மேலும், செயிக் குழுமத்துடன் இந்தியாவை சேர்ந்த ஜேஎஸ்டபிள்யூ குழுமம் பார்ட்னர்ஷிப் அமைத்து, எம்ஜி மோட்டார் இந்திய பிரிவுக்கு வலுவான பின்புலத்தை வழங்கி வருகின்றன. இதனால், கடும் சந்தைப் போட்டி நிறைந்த இந்திய கார் சந்தையில் எம்ஜி மோட்டார் நிறுவனம் சிறப்பான வளர்ச்சியை பதிவு செய்து வருகிறது.
தற்போது ஜேஎம்டபிள்யூ எம்ஜி மோட்டார் இந்தியா என்ற பெயரில் செயல்பட்டு வரும் இந்நிறுவனம், உள்நாட்டிலேயே கார்களை அசெம்பிள் செய்து விற்பனை செய்வதுடன், எலெக்ட்ரிக் வாகன சந்தையில் வலுவான வர்த்தகத்தை பெறுவதையும் நோக்கமாக கொண்டு செயல்பட்டு வருகின்றன. இதற்கு தக்கவாறு, புதிய மாடல்களையும், முதலீடுகளையும் படிப்படியாக செய்து வர்த்தகத்தை விரிவாக்கவும் செய்யவும் இந்த கூட்டணி திட்டமிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications