இந்தியாவில் 7 சீட்டர் எம்பிவியின் விலையை உயர்த்திய நிறுவனம்
எலெக்ட்ரிக் கார்கள் விற்பனையில் டிவிஎஸ் மற்றும் மஹிந்திராவிற்கு அடுத்தபடியாக மூன்றாவது இடத்தில் இருந்து வருகிறது எம்ஜி மோட்டார். மாஸ் மார்க்கெட் எலெக்ட்ரிக் கார்கள் மட்டுமின்றி இந்தியாவில் விலை உயர்ந்த சொகுசு மற்றும் பெர்ஃபான்ஸ் எலெக்ட்ரிக் கார்களையும் எம்ஜி மோட்டார் விற்பனை செய்து வருகிறது. இந்த ப்ரீமியமான எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்வதற்காக எம்ஜி செலக்ட் என்ற தனி டீலர்ஷிப் நெட்வொர்க்கும் செயல்பட்டு வருகிறது.
இந்த எம்ஜி செலக்ட் டீலர்ஷிப் நெட்வொர்க் மூலமாக, M9 மற்றும் சைபர்ஸ்டர் என இரண்டு எலெக்ட்ரிக் கார்களை எம்ஜி மோட்டார் விற்பனை செய்து வருகிறது. தற்போது இந்த ப்ரீமியமான எலெக்ட்ரிக் கார்களின் விலைகளையும் எம்ஜி மோட்டார் நிறுவனம் உயர்த்தியிருக்கிறது. இந்த கார்கள் எவ்வளவு விலை உயர்த்தப்பட்டிருக்கின்றன என்பதைப் பார்க்கலாம்.

பெர்ஃபாமன்ஸ் எலெக்ட்ரிக் காரான சைபர்ஸ்டர் கன்வர்டிபிள் வடிவில் விற்பனை செய்யப்படும் ஒரு காராக இருந்து வருகிறது. இந்த 2 டோர் கன்வர்டிபிள் காரின் விலையை 5 லட்சம் ரூபாய் வரை விலை உயர்த்தப்பட்டிருக்கிறது. இனி இந்தக் காரை 82.5 லட்சம் ரூபாய் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் நாம் வாங்கலாம்.
இந்த பெர்ஃபாமன்ஸ் எலெக்ட்ரிக் காருக்குப் போட்டியாக தற்போது வேறு எந்தக் காரும் இந்தியாவில் விற்பனையில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. எம்ஜி மோட்டாரின் ஃபிளாக்ஷிப் காரும் இந்த சைபர்ஸ்டர் EV தான். மேலும், இந்தியாவில் இரண்டாவது விலை குறைவான கன்வர்டிபிள் கார் இது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

மற்றொரு சொகுசு எம்பிவியான M9-ன் விலையை 4.05 லட்சம் ரூபாய் வரை விலை உயர்த்தியிருக்கிறது எம்ஜி மோட்டார். பிரஸிடென்ஷியல் என்ற ஒரேயொரு வேரியன்டாக மட்டுமே இந்த சொகுசு எம்பிவி கார் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த விலை உயர்வைத் தொடர்ந்து இனி இந்தக் காரை 79.95 லட்சம் ரூபாய் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் நாம் வாங்கலாம்.
இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக சொகுசு எம்பிவிக்கள் மீது வாடிக்கையாளர்களின் ஆர்வம் கூடியிருக்கிறது. குறிப்பாக சினிமா மற்றும் விளையாட்டுப் பிரபலங்கள் இந்த வகையான கார்கள் மீது அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். அதற்கு முக்கியமான காரணம் இந்தக் காரின் இரண்டாம் வரிசை சீட்கள் கொண்டிருக்கும் சொகுசு தான்.
ஆடம்பர பங்களாவில் தனியறை கொண்டிருக்கும் சொகுசை இந்த வகையான சொகுசு எம்பிவி கார்கள் கொண்டிருக்கின்றன. எனவே இதன் விற்பனையும் கடந்த ஆண்டுகளில் உயர்ந்திருக்கிறது. எரிபொருள் பிரிவில் இது போன்ற சில சொகுசு எம்பிவிக்கள் விற்பனையில் இருக்கும் நிலையில், எலெக்ட்ரிக் பிரிவில் இந்த M9 எம்பிவிக்குப் போட்டியாக எந்தக் காரும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் எரிபொருள் கார்களை விட எலெக்ட்ரிக் கார்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் நிறுவனங்களில் முன்னணியில் இருக்கிறது எம்ஜி மோட்டார். தற்போது மூன்று எரிபொருள் கார்களையே அந்நிறுவனம் விற்பனை செய்து வரும் நிலையில், மேலே குறிப்பிட்டிருக்கும் இரண்டு ப்ரீமியம் கார்களையும் சேர்த்து மொத்தம் ஐந்து எலெக்ட்ரிக் கார்களை இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது எம்ஜி மோட்டார். அடுத்ததாக புதிய. ஹைபிரிட் கார்களையும் வெளியிடத் திட்டமிட்டு வருகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த ஜூலை மாதம் எம்ஜி மோட்டார் மட்டுமின்றி இந்தியாவில் செயல்பட்டு வரும் பல்வேறு நிறுவனங்களும் கார்களின் விலையை உயர்த்தி வருகின்றன. அந்த வரிசையிலேயே எம்ஜி மோட்டார் நிறுவனமும் இந்தியாவில் தாங்கள் விற்பனை செய்து வரும் ப்ரீமியம் எலெக்ட்ரிக் கார்களின் விலையை உயர்த்தியுள்ளது. வரும் ஆண்டுகளில் இன்னும் சில ப்ரீமியம் எலெக்ட்ரிக் கார்களையும் இந்தியாவில் எம்ஜி மோட்டார் வெளியிட வாய்ப்புகள் உள்ளது.


Click it and Unblock the Notifications