600 கிமீ ரேஞ்சுடன் மஹிந்திரா XEV 9S 7 சீட்டர் எலெக்ட்ரிக் எஸ்யூவிக்கு போட்டியாக புதிய காரை வெளியிடும் நிறுவனம்
ஜூலை 16ம் தேதியன்று எம்ஜி மோட்டார் நிறுவனம் இந்தியாவில் புதிய காரை வெளியிடும் என ஆர்வமாக எதிர்பார்த்துக் காத்திருக்க, புதிய பிளாட்ஃபார்மை மட்டுமே நேற்று (ஜூலை 16) அறிமுகப்படுத்தியது எம்ஜி மோட்டார். ADAPT என்ற பெயரில் எலெக்ட்ரிக் மற்றும் ஹைபிரிட் கார்களுக்குப் பயன்படுத்தும் வகையில் புதிய பிளாட்ஃபார்மை அந்நிறுவனம் உருவாக்கியிருக்கிறது. இந்த பிளாட்ஃபார்மிலேயே இந்தியாவிற்கான அடுத்த எலெக்ட்ரிக் காரையும் எம்ஜி உருவாக்கியிருக்கிறது.
தற்போது கிடைத்திருக்கும் தகவல்களின்படி இந்தோனேஷியாவில் வுல்லிங் என்ற எம்ஜி மோட்டாரின் தங்கை நிறுவனம் விற்பனை செய்து வரும் எக்சியான் (Eksion) என்ற எஸ்யூவியை அடிப்படையாகக் கொண்டு புதிய எஸ்யூவி ஒன்றை எம்ஜி மோட்டார் உருவாக்கியிருப்பதாகக் கூறப்படுகிறது. வரும் ஆகஸ்ட் மாதம் இந்தப் புதிய எஸ்யூவியை இந்தியாவில் வெளியிடுகிறது எம்ஜி மோட்டார்.

மஹிந்திராவின் 7 சீட்டர் எலெக்ட்ரிக் எஸ்யூவியான XEV 9S காருக்குப் போட்டியாக இந்தப் புதிய காரை எம்ஜி வெளியிவுள்ளது. காரணம், தற்போது 7 சீட்டர் எஸ்யூவி பிரிவில் பல்வேறு பெட்ரோல்/ டீசல் கார்களை விடவும் அதிகம் விற்பனை செய்யப்படும் ஒன்றாக இந்த XEV 9S எலெக்ட்ரிக் எஸ்யூவியே இருக்கிறது. எனவே தான் அந்தக் காரை டார்கெட் செய்து புதிய எஸ்யூவி ஒன்றை எம்ஜி மோட்டார் உருவாக்கியிருக்கிறது.
புதிய எஸ்யூவியின் 600 கிமீ வரையிலான ரேஞ்சு கொடுக்கக்கூடி 69 kWh பேட்டரி பேக்கை எம்ஜி மோட்டார் பயன்படுத்தவுள்ளதாகக் கூறப்படுகிறது. XEV 9S காரிலோ, 59 kWh, 70 kWh மற்றும் 79 kWh என மூன்று விதமான பேட்டரி பேக் தேர்வுகள் 521 கிமீ முதல் 679 கிமீ வரையிலான ரேஞ்சுடன் கொடுக்கப்பட்டு வருகின்றன.

எக்சியான் எலெக்ட்ரிக் எஸ்யூவியில் 201 hp பவர் மற்றும் 301 Nm டார்க்கை உற்பத்தி செய்யும் திறன் கொண்ட எலெக்ட்ரிக் மோட்டார் செட்டப் கொடுக்கப்பட்டுள்ளது. அதுவும் ஃபிரண்ட் வீல் டிரைவ் தான். XEV 9S காரில், 245 hp பவர் மற்றும் 380 Nm டார்க்கை உற்பத்தி செய்யும் திறன் கொண்ட ரியர் வீல் டிரைவ் செட்டப் கொடுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
அளவில் கிட்டதட்ட XEV 9S-க்கு இணையாக 4.7 மீ நீளம், 1.85 மீ அகலம் மற்றும் 1.7 மீ உயரத்தையே புதிய எம்ஜி எஸ்யூவி கொண்டிருக்கும் எனத் தெரிகிறது. தற்போது 7 சீட்டர் கார்கள் மீது வாடிக்கையாளர்களின் கவனம் அதிகரித்துள்ளது. எனவே புதிய காரில் 7 சீட் லேஅவுட்டை மட்டுமே எம்ஜி மோட்டார் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேற்கூறிய அளவில் XEV 9S-ஐ விட பின்தங்கியே இருக்கிறது எம்ஜியின் புதிய கார். எனவே வசதிகளில் அதனை ஈடு செய்யும் வகையில் கூடுதல் அம்சங்களை எம்ஜி மோட்டார் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. விலை XEV 9S-ன் 20.65 லட்சம் ரூபாயை விட அதிகமாகவே இருக்கும் எனத் தெரிகிறது.
இந்த எக்சியான் காரை எலெக்ட்ரிக் வடிவில் மட்டுமில்லால் பிளக்-இன் ஹைபிரிட் வடிவிலும் இந்தோனேஷியாவில் விற்பனை செய்து வருகிறது வுல்லிங். அதனை அடிப்படையாகக் கொண்ட புதிய காரையும் மஹிந்திராவின் XUV 7XO 7 சீட்டர் எரிபொருள் எஸ்யூவிக்குப் போட்டியாக இந்தியாவில் எம்ஜி மோட்டார் வெளியிடும் எனத் தகவல்கள் கூறுகின்றன. இந்த பிளக்-இன் ஹைபிரிட் எஸ்யூவிக்கும் ADAPT பிளாட்ஃபார்மையே எம்ஜி மோட்டார் பயன்படுத்தவுள்ளது குறிப்பிடத்தக்கது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் எம்ஜி மோட்டார் மிகவும் வெற்றிகரமான ஒரு கார் மாடல் என்றால் அது விண்ட்ஸர் EV தான். இப்போதும் மற்ற எலெக்ட்ரிக் கார்களை விட அதிகம் விற்பனை செய்யப்படும் ஒன்றாக விண்ட்ஸர் இருந்து வருகிறது. ஆனால், அது மட்டும் எம்ஜி மோட்டாருக்குப் போதாது. வேறு சில சிறப்பான வெற்றிகரமான எலெக்ட்ரிக் கார் மாடல்கள் தேவை. அந்த இலக்கை நோக்கிய ஒரு முயற்சியாகவே எக்சியான் அடிப்படையிலான கார் பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications