டாக்சி தொழிலுக்காகவே பார்த்து பார்த்து உருவாக்கப்பட்டுள்ள புது எம்ஜி கார்! எத்தனை பேர் வாழ்க்கையை மாற்ற போகுதோ
எம்ஜி விண்ட்சர் (MG Windsor) எலெக்ட்ரிக் காருக்கு சிறப்பான வரவேற்பு கிடைத்துவரும் நிலையில், இந்த காரை மேலும் பலத்தரப்பட்ட வாடிக்கையாளர்களிடம் கொண்டுச் சேர்க்கும் விதமாக புதியதாக 'விண்ட்சர் கம்யூட்' (Windsor Commute) என்கிற விலை குறைவான வெர்சனை சமீபத்தில் எம்ஜி மோட்டார் நிறுவனம் அறிமுகப்படுத்தியது. டாக்சி (Taxi) உள்ளிட்ட கமர்ஷியல் (Commercial) பயன்பாட்டிற்காக அறிமுகப்படுத்தப்பட்ட விண்ட்சர் கம்யூட் கார் டீலர்ஷிப் ஷோரூம்களுக்கு வர துவங்கியுள்ளது.
இது தொடர்பான படங்கள் 'தி ராஜாட் விலாக்ஸ்' (THERAJATVLOGS) என்கிற யூடியூப் (Youtube) சேனலின் மூலம் கிடைத்துள்ளன. இந்த படங்களில், லாரி ஒன்றின் மூலமாக வெள்ளை நிறத்திலான புதிய விண்ட்சர் கம்யூட் கார் ஒன்று டீலர்ஷிப் ஷோரூமுக்கு கொண்டுவரப்பட்டுள்ள காட்சியை பார்க்க முடிகிறது.

குறிப்பாக, விண்ட்சர் கம்யூட் காரின் 17 இன்ச் இரும்பு சக்கரங்களை வீல் கவர்கள் இன்றி இந்த படங்களில் தெளிவாக பார்க்க முடிகிறது. இதேபோன்றதான 17-இன்ச் சக்கரங்கள் தான் விண்ட்சர் எலெக்ட்ரிக் காரின் விலை குறைவான 'எக்ஸ்சைட்' (Excite) வேரியண்ட்டிலும் வழங்கப்படுகிறது. ஆனால், எக்ஸ்சைட் வேரியண்ட்டில் இந்த சக்கரங்கள் கருப்பு நிறத்தில் வழங்கப்படுகின்றன. அத்துடன், எதிர்காற்றில் தடையின்றி சுழல்வதற்கு ஏற்ப வீல் கவர்கள் எக்ஸ்சைட் வேரியண்ட்டில் வழங்கப்படுகின்றன.
சக்கரங்களை தவிர்த்து, எம்ஜி விண்ட்சர் கம்யூட் காரின் மற்ற வெளிப்புற பாகங்கள் அனைத்தும் விண்ட்சர் எக்ஸ்சைட் வேரியண்ட்டில் உள்ளதை போலவே இருக்கின்றன. அதன்படி, பின்பக்கத்தை காட்டும் வெளிப்புற கண்ணாடிகள் எல்இடி டர்ன் இண்டிகேட்டர்களை கொண்டுள்ள நிலையில், இந்த புதிய விண்ட்சர் கம்யூட் காரில் பறித்து இழுக்கக்கூடிய கதவு கைப்பிடிகளையும் பார்க்க முடிகிறது.

இந்த அம்சங்கள் அனைத்தும் விண்ட்சர் கம்யூட் காருக்கு பிரீமியம் லுக்கை வழங்குகின்றன. காரின் முன்பக்கத்தில் எல்இடி புரோஜெக்டர் ஹெட்லைட்கள் வழங்கப்பட்டிருக்க, ஹெட்லைட்கள் இரண்டையும் எல்இடி டிஆர்எல் இணைக்கிறது. ஆனால், இந்த எல்இடி டிஆர்எல் ஆனது விண்ட்சர் கம்யூட் காரில் ஒளிராது. காருக்கு உள்ளே செலவை குறைக்கும் விதமாக டாஷ்போர்டில் வழங்கப்படும் 10.1 இன்ச் டச் ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் இந்த காரில் தவிர்க்கப்பட்டுள்ளது.
இந்த இன்ஃபோடெயின்மெண்ட் திரை விண்ட்சர் எக்ஸ்சைட் வேரியண்ட்டில் கூட வழங்கப்படும் நிலையில், புதிய விண்ட்சர் கம்யூட் காரில் வழங்கப்படவில்லை. இதனால், டிரைவருக்கான விபரங்களை வழங்கும் 7-இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் திரை மட்டுமே டாஷ்போர்டில் உள்ளது. யுஎஸ்பி சார்ஜிங் வசதி, எஃப்.எம் ரேடியோ மற்றும் ப்ளூடூத் இணைப்பு வசதி போன்ற அடிப்படை வசதிகள் இந்த காரில் உள்ளன.
கமர்ஷியல் பயன்பாட்டிற்கான விலை குறைவான காராக இருப்பினும், க்ரூஸ் கண்ட்ரோல், மடக்க & சாய்க்கக்கூடிய ஸ்டீயரிங் சக்கரம் மற்றும் பவர் ஜன்னல் கண்ணாடிகள் உள்ளிட்டவை இதில் இடம்பெற்றுள்ளன. ஏசி மற்றும் பின்புறத்தை காட்டும் வெளிப்பக்க கண்ணாடிகளை மேனுவலாக மட்டுமே அட்ஜெஸ் செய்ய முடியும். சார்ஜிங் வசதிக்கு முன் வரிசையில் ஒரு டைப்-சி & ஒரு டைப்-ஏ சார்ஜிங் போர்ட்களும், பின்பக்கத்தில் ஒரு டைப்-சி சார்ஜிங் போர்ட்டும் உள்ளன.
எம்ஜி நிறுவனம் விண்ட்சர் கம்யூட் காரை 38kWh பேட்டரி உடன் வழங்குகிறது. இதே பேட்டரி தான் விண்ட்சர் இவி எலெக்ட்ரிக் காரின் மற்ற வேரியண்ட்களிலும் வழங்கப்படுகிறது. இந்த பேட்டரியின் மூலம் அதிகப்பட்சமாக 134 பிஎச்பி மற்றும் 200 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலையும், முழுவதுமாக சார்ஜ் நிரப்பினால் அதிகப்பட்சமாக 332கிமீ தொலைவிற்கான பயணத்தையும் பெறலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: பெரியதாக எந்த ஆர்பாட்டமும் இன்றி மார்க்கெட்டுக்கு வந்து பெரிய தாக்கத்தை எம்ஜி விண்ட்சர் இவி ஏற்படுத்தி உள்ளது. இத்தகைய எலெக்ட்ரிக் காரின் மார்க்கெட்டை மேலும் விரிவுப்படுத்த வேண்டுமெனில், அதனை கமர்ஷியல் பயன்பாட்டிற்கும் விற்பனை செய்வது முக்கியமாகும். அதன்படி அறிமுகம் செய்யப்பட்ட புதிய விண்ட்சர் கம்யூட் கார் டீலர்ஷிப் ஷோரூம்களை வந்தடைய துவங்கியுள்ளதால், விரைவில் இதன் டெலிவிரிகளை எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications