எம்ஜி விண்ட்சர் எலெக்ட்ரிக் கார் வாங்கப் போறீங்களா? தெரிந்துகொள்ள வேண்டிய 10 விஷயங்கள்
எலெக்ட்ரிக் கார் மார்க்கெட்டில் எம்ஜி விண்ட்சர் சிறப்பான விற்பனையை பதிவு செய்து வருகிறது. நடப்பு ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் 19,080 கார்கள் விற்பனையாகி முதலிடத்தில் உள்ளது. இந்த நிலையில், பண்டிகை காலத்தில் இந்த காருக்கான வரவேற்பு கூடுதலாக இருக்கும் என்று கருதப்படுகிறது. இந்த எலெக்ட்ரிக் காரை வாங்க திட்டமிட்டுள்ளோர் தெரிந்துகொள்வதற்காக சில முக்கிய விஷயங்களை இங்கே பார்க்கலாம்.
1. எஸ்யூவி இல்லை
எம்ஜி விண்ட்சர் காரின் வடிவமைப்பு எஸ்யூவி வகையறா போன்று இருந்தாலும், இதனை Intelligent CUV என்று என்று எம்ஜி மோட்டார் நிறுவனம் குறிப்பிடுகிறது. எஸ்யூவி கார்கள் போன்றே அதிக க்ரவுண்ட் க்ளியரன்ஸ் மற்றும் உயரமான தோற்றத்துடன் இது செடான் கார் போன்ற கேபின் இடவசதி ஆகியவற்றை இணைக்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால், சொகுசான பயண அனுபவத்தை உறுதி செய்யும் அம்சங்கள் உள்ளன.

2. விலை எவ்வளவு?
தற்போது எம்ஜி விண்ட்சர் எலெக்ட்ரிக் கார் ரூ.14.70 லட்சம் முதல் ரூ.18.99 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கிறது. இந்த காருக்கு
BaaS என்ற பேட்டரிக்கான சந்தா திட்டத்தை தேர்வு செய்தால் ஆரம்ப விலை ரூ.9.99 லட்சத்தில் வாங்க முடியும். ஆனால், பேட்டரி பயன்பாட்டுக்கு கிலோமீட்டருக்கு ரூ.3.99 கட்டணமாக செலுத்த வேண்டும். இது வேரியண்ட்டை பொறுத்து கட்டணம் வேறுபடுகிறது.
3. BaaS திட்டம் நல்லதா?
உதாரணமாக மாதம் 1,000 கி.மீ ஓட்டினால், பேட்டரி பயன்பாட்டிற்கு ஒவ்வொரு கிலோமீட்டருக்கும் ரூ.4.50 என்ற கணக்கில் பேட்டரி கட்டணம் மட்டும் செலுத்த வேண்டும். அப்படி பார்த்தால் மாதம் ரூ.3,990 என்ற கட்டணம் வருகிறது. மாதத்திற்கு 2,000 கி.மீ ஓட்டுபவர்களுக்கு அது சுமார் ரூ.7,980 என்ற அளவில் வருகிறது. எனவே, குறைவாக ஓட்டுபவர்களுக்கு BaaS திட்டம் ஓரளவு சரிபட்டு வரலாம். அதிகமாக இந்த காரை பயன்படுத்துபவர்கள், அடிக்கடி நீண்ட தூரம் செல்பவர்கள் முழு பேட்டரி வாங்கும் முறையையும் BaaS சந்தா திட்டத்தையும் ஒப்பிட்டு முடிவு செய்வது நல்லது.

4. இரண்டு பேட்டரி ஆப்ஷன்கள்
எம்ஜி விண்ட்சர் காரில் 38kWh பேட்டரி கொண்ட மாடலானது முழுமையான சார்ஜில் 332 கிமீ வரை செல்லும் என்றும், Pro மாடலில் உள்ள 52.9kWh பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 449 கிமீ வரை செல்லும் என்று நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. நகரத்துக்குள் தினசரி பயன்படுத்துபவர்களுக்கு 38kWh மாடல் போதுமானதாக இருக்கலாம். அடிக்கடி நீண்ட தூரம் செல்பவர்களுக்கு Pro மாடலை தேர்வு செய்யலாம்.
5. பவரில் வேறுபாடு இல்லை
இரண்டு பேட்டரி ஆப்ஷன்களிலும் 136 பிஎஸ் பவரும் 200 என்எம் டார்க்கும் கிடைக்கும். மின்சார மோட்டாரின் உடனடி டார்க்கை வழங்குவதன் காரணமாக நகரப் போக்குவரத்தில் விண்ட்சர் காரை ஓட்டுவதற்கு சுலபமாக இருக்கும்.
6. சவுகரியமான பின்பக்க சீட்
எம்ஜி விண்ட்சர் காரின் பின்பக்க இருக்கைகளை 135 டிகிரி வரை சாய்த்துக் கொள்ள செய்ய முடியும். நீண்ட பயணங்களில் பின்பக்க பயணிகளுக்கு இது உண்மையில் மிகவும் சவுகரியமான பயண அனுபவத்தை வழங்கும்.

7. பெரிய ஸ்கிரீன்
காருக்குள் சென்றவுடன் டேஷ்போர்டில் உள்ள 15.6 இன்ச் GrandView touchscreen கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் கவனத்தை ஈர்க்கிறது. அதனுடன் பனோரமிக் சன்ரூஃப், வென்டிலேட்டட் இருக்கைகள், 360 டிகிரி கேமரா உள்ளிட்ட வசதிகளும் கிடைக்கின்றன.
8. Pro மாடல் சிறப்பம்சங்கள்
இந்த மாடலில் 52.9kWh பேட்டரி இருப்பதால் அதிக ரேஞ்ச் மட்டுமின்றி, லெவல் 2 ADAS தொழில்நுட்பமும் வழங்கப்படுகிறது. இந்த தொகுப்பில் முன்னால் செல்லும் வாகனத்திற்கு தக்கவாறு தானியங்கி முறையில் வேகத்தை கட்டுப்படுத்தும் அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல், தடம் மாறுதலை எச்சரிக்கும் வசதி, மோதல் தடுப்பு பாதுகாப்பு, அவசர சமயத்தில் தானியங்கி பிரேக்கிங் சிஸ்டம் உள்ளிட்ட பல பாதுகாப்பு அம்சங்கள் இதில் இடம்பெறுகின்றன.
9. சார்ஜிங் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்
எம்ஜி விண்ட்சர் காரில் 7.4kW AC வீட்டு சார்ஜர் பயன்படுத்தலாம். விலை உயர்ந்த Pro மாடல் பேட்டரியை 10-100% சார்ஜ் செய்ய சுமார் 9.5 மணி நேரம் ஆகும் என எம்ஜி நிறுவனம் தெரிவிக்கிறது. டிசி ஃபாஸ்ட் சார்ஜர் மூலமாக 20-80% அளவுக்கு பேட்டரியை 50 நிமிடங்களில் சார்ஜ் செய்ய முடியும். வீட்டிலுள்ள மின்சாதனங்களுக்கு மின்சாரத்தை சப்ளை செய்யும் வசதியும், மற்றொரு எலெக்ட்ரிக் காருக்கு இதன் பேட்டரியிலிருந்து சார்ஜ் செய்யும் வசதியும் உள்ளன.

10. பேட்டரி வாரண்டி
விண்ட்சர் காரை வாங்கும் முதல் உரிமையாளருக்கு இந்த காரின் பேட்டரிக்கு ஆயுட்கால பேட்டரி வாரண்டி சலுகை வழங்கப்படுவதாக எம்ஜி நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கிறது. எலெக்ட்ரிக் கார் வாங்க தயங்குபவர்களுக்கு பேட்டரி தொடர்பான நீண்டகால நம்பிக்கையை அளிக்கும் விஷயமாக இதனை குறிப்பிடலாம்.


Click it and Unblock the Notifications


