கிராமப்புற மக்களையும் விட்டு வைக்கல! ஒட்டுமொத்த நாட்டையும் திரும்பி பார்க்க வைத்துள்ள எலெக்ட்ரிக் கார்!
எப்போதுமே புதியதாக ஒரு கண்டுப்பிடிப்போ அல்லது தயாரிப்போ வருகிறது என்றால், அது முதலில் மாநகரங்களில் தான் கவனத்தை பெற ஆரம்பிப்பதை பார்க்க முடியும். அதன்பின்புதான், சிறு நகரங்கள் மற்றும் கிராமப் புறங்களுக்கு அந்த பொருள் சென்றடைய துவங்கும். இதற்கு மிக சிறந்த உதாரணம், எலெக்ட்ரிக் வாகனங்கள் (Electric Vehicles) ஆகும்.
எலெக்ட்ரிக் வாகனங்களை விரைவாக சார்ஜ் செய்யும் வசதி இன்னும் நாடு முழுவதும் பரவலாக வரவில்லை என்றாலும், நகர்புறங்களில் எலெக்ட்ரிக் வாகனங்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது. குறிப்பாக, எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் (Electric Scooters) பெட்ரோல் ஸ்கூட்டர்களுக்கு இணையாக நகரச் சாலைகளில் செல்வதை பார்க்க முடியும்.

ஆனால், இங்கு ஒரு எலெக்ட்ரிக் கார் (Electric Car) மெட்ரோ (Metro) நகரங்களை காட்டிலும் மெட்ரோ-அல்லாத நகரங்களில் அதிகளவில் விற்பனையாகி வருகிறது. அந்த அளவிற்கு, சிறு நகரங்களில் வசிப்போரிடமும் இந்த எலெக்ட்ரிக் கார் கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த எலெக்ட்ரிக் கார் வேறு எதுவும் இல்லை, இந்தியாவில் தற்சமயம் அதிக பேரால் வாங்கப்பட்டுவரும் எம்ஜி விண்ட்சர் இவி (MG Windsor EV) எலெக்ட்ரிக் கார் ஆகும்.
ஜே.எஸ்.டபிள்யூ எம்ஜி மோட்டார் (JSW MG Motor) நிறுவனத்தில் இருந்து கடந்த சில வருடங்களுக்கு முன் அறிமுகம் செய்யப்பட்ட விண்ட்சர் இவி இந்த நாள் வரையில் இந்தியாவில் சுமார் 65 ஆயிரத்திற்கும் அதிகமான யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. 2024 செப்டம்பர் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த எம்ஜி எலெக்ட்ரிக் கார் வெறும் 15 மாதங்களில் இந்த அளவிற்கு விற்பனையாகி பிரம்மிக்க வைத்துள்ளது.

இந்த 65,000+ யூனிட்கள் விற்பனையில் இந்தியாவின் மெட்ரோ நகரங்கள் ஆக அழைக்கப்படும் சென்னை, டெல்லி, மும்பை, கொல்கத்தாவில் இருந்து வெறும் 30% மட்டுமே கிடைத்துள்ளது. மீதி 70% விற்பனை, நாட்டின் மற்ற அனைத்து பகுதிகளில் இருந்து கிடைத்துள்ளது. இதன் காரணமாகவே, இந்தியாவின் கிராமப்புறங்களில் கூட விண்ட்சர் இவி காரை பார்க்க முடிகிறது.
குறிப்பாக, முதல்முறையாக கார் வாங்குபவர்களை இந்த எலெக்ட்ரிக் கார் வெகுவாக ஈர்த்து வருகிறது. இந்த அளவிற்கு சிறப்பான வரவேற்பை பெற்றுவரும் விண்ட்சர் இவி-ஐ 'ABC' கலவை என எம்ஜி மோட்டார் அழைக்கிறது. இதில், A என்பது A-பிரிவில் உள்ள விலை குறைவான கார்களை போன்று இது விலை கொண்டிருப்பதை குறிக்கிறது.
B என்பது B-பிரிவு கார்களை போன்று அளவில் பெரியது என்பதையும், C என்பது அளவில் பெரியதான C-பிரிவு கார்களை போன்று விசாலமான உட்புறத்தை கொண்டது என்பதையும் குறிக்கிறது. இருப்பினும் இவை எல்லாவற்றையும் விட விண்ட்சர் இவி காரை மக்கள் மத்தியில் பிரபலப்படுத்தியது, ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி மோட்டார் நிறுவனம் அறிமுகப்படுத்திய BaaS திட்டமாகும்.
அதாவது, பேட்டரியை வாடகை/குத்தகைக்கு வழங்கி அதன் மூலம் விண்ட்சர் இவி காரை குறைவான விலையில் எம்ஜி வழங்கியுள்ளது. இதன் மூலமாக, அளவில் பெரியதான எலெக்ட்ரிக் காராக இருப்பினும், BaaS திட்டத்தில் விண்ட்சர் இவி-இன் எக்ஸ்-ஷோரூம் விலைகள் (Ex-Showroom Prices) ரூ.9.99 லட்சத்தில் இருந்து துவங்குகின்றன. எம்ஜி மோட்டாரின் இந்த முயற்சியை பார்த்த பின்பே பல எலெக்ட்ரிக் கார்கள் BaaS முறையை பின்பற்ற ஆரம்பித்துள்ளன.
BaaS திட்டத்தில் விண்ட்சர் இவி வாங்கினால் 1 கிமீ-க்கு ரூ.3.9 கட்டணமாக செலுத்த வேண்டியிருக்கும். இந்த எம்ஜி எலெக்ட்ரிக் காரில் 38kWh திறன் கொண்ட பேட்டரி பேக் உடன் 100 கிலோவாட்ஸ் எலெக்ட்ரிக் மோட்டார் வழங்கப்படுகிறது. இந்த எலெக்ட்ரிக் மோட்டார் அதிகப்பட்சமாக 136 பிஎஸ் மற்றும் 200 என்.எம் டார்க் திறனை வெளிப்படுத்தக் கூடியதாக உள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: பெரியதாக எந்தவொரு ஆர்பாட்டமும் இல்லாமல் வந்து இந்திய கார் மார்க்கெட்டில் எம்ஜி விண்ட்சர் இவி அதகளம் செய்து வருகிறது. குறிப்பாக, எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்வதில் முதலிடம் வகித்துவரும் டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனத்திற்கு விண்ட்சர் இவி சவாலானதாக விளங்கி வருகிறது. இருப்பினும், இந்த காருக்கு இந்தியாவின் கிராமப்புறங்களில் வரவேற்பு கிடைத்துவருவதாக தற்போது வெளியாகி இருக்கும் செய்தி சற்று ஆச்சிரியத்தை ஏற்படுத்துகிறது.


Click it and Unblock the Notifications








