ரூ.55.50 லட்சத்தில் புதிய மினி கூப்பர் ஆக்ஸ்போர்டு எடிஷன் அறிமுகம்!
இங்கிலாந்து பாரம்பரியத்தை நினைவூட்டும் தனித்துவமான வடிவமைப்புடன் புதிய மினி கூப்பர் ஆக்ஸ்போர்டு எடிஷன் (MINI Cooper Oxford Edition) கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ரூ.55.50 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு வந்துள்ள இந்தச் சிறப்புப் பதிப்பு கார், குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே விற்பனை செய்யப்பட உள்ளது. இதன் முன்பதிவு தொடங்கியுள்ள நிலையில், வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் பல பிரத்யேக அம்சங்களும் வழங்கப்பட்டுள்ளன.
மினி கூப்பர் ஆக்ஸ்போர்டு எடிஷன் காரின் வெளிப்புறத்தில் பல அலங்கார அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. காரின் வெள்ளை நிறக் கூரையில் இங்கிலாந்து நாட்டின் யூனியன் ஜாக் (Union Jack) கொடி அமைப்பு இடம்பெற்றுள்ளது. காரின் முன்பகுதியில் இருந்து பின்பகுதி வரை செல்லும் சிவப்பு மற்றும் வெள்ளை நிறக் கோடுகள் இதன் தோற்றத்தை மேலும் கவர்ச்சிகரமாக மாற்றுகின்றன.

இந்தக் காரை இண்டிகோ சன்செட் ப்ளூ (Indigo Sunset Blue), சில்லி ரெட் (Chilli Red) என இரண்டு நிறங்களில் வாங்கலாம். வெள்ளை நிற வெளிப்புறக் கண்ணாடிகள், பிரத்யேக வடிவமைப்புடன் கூடிய 18 அங்குல இரட்டை நிற அலாய் சக்கரங்கள் ஆகியவை இதன் தோற்றத்தை மேலும் மெருகேற்றுகின்றன. பின்புறத்தில் யூனியன் ஜாக் மற்றும் செக்கர்டு ரேசிங் கொடியை இணைக்கும் பிரத்யேக அலங்காரமும் இடம்பெற்றுள்ளது.
உட்புற வசதிகள் மற்றும் தொழில்நுட்பம்
காரின் உட்புறத்திலும் இங்கிலாந்து கொடியை அடிப்படையாகக் கொண்ட பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ஸ்டீயரிங் வீல், தரை விரிப்புகள், கதவுகளின் அடிப்பகுதியில் உள்ள அலங்காரப் பகுதிகள் ஆகியவற்றில் பிரத்யேக வடிவமைப்புகள் இடம்பெற்றுள்ளன. கருப்பு நிற ஜேசிடபிள்யூ (JCW) ஸ்போர்ட் இருக்கைகள், ஓட்டுனருக்கான எலெக்ட்ரிக் அட்ஜெஸ்ட் வசதி மற்றும் பனோரமிக் கண்ணாடிக் கூரை ஆகியவையும் உள்ளன.
டேஷ்போர்டின் மையத்தில் 240 மிமீ அளவிலான வட்ட வடிவ ஓஎல்இடி (OLED) தொடுதிரை வழங்கப்பட்டுள்ளது. இது மினி நிறுவனத்தின் பிரத்யேக ஆப்பரேட்டிங் சிஸ்டம் வெர்ஷன் 9.0 என்ற மென்பொருளில் இயங்குகிறது. ஹெட்ஸ்-அப் டிஸ்ப்ளே, ஹார்மன் கார்டன் ஆடியோ சிஸ்டம், வயர்லெஸ் மொபைல் சார்ஜிங், ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ, டிஜிட்டல் கீ பிளஸ் உள்ளிட்ட வசதிகளும் இடம்பெற்றுள்ளன.
எஞ்சின்
இந்தச் சிறப்புப் பதிப்பில் 2.0 லிட்டர் நான்கு சிலிண்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் வழங்கப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 204 எச்பி பவரையும், 300 நியூட்டன் மீட்டர் டார்க்கையும் வெளிப்படுத்துகிறது. இதனுடன் 7 ஸ்பீடு டூயல் கிளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.
இந்தக் கார் 0 முதல் 100 கிமீ வேகத்தை வெறும் 6.6 வினாடிகளில் எட்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 242 கிமீ ஆக தெரிவிக்கப்பட்டு இருக்கிரது. அடாப்டிவ் சஸ்பென்ஷன் மற்றும் ஜேசிடபிள்யூ ஸ்போர்ட் பிரேக்குகள் ஆகியவை வேகமான பயணத்தின்போது சிறந்த கட்டுப்பாட்டைப் பெற உதவுகின்றன.
பாதுகாப்பு வசதிகள்
ஓட்டுனரின் வசதிக்காக க்ரூஸ் கன்ட்ரோல் மற்றும் பார்க்கிங் அசிஸ்டென்ட் வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், பின்புறக் கேமரா, ஏபிஎஸ் (ABS), பிரேக் அசிஸ்ட், டைனமிக் ஸ்டெபிலிட்டி கன்ட்ரோல், கார்னரிங் பிரேக் கன்ட்ரோல், ஏர்பேக்குகள் மற்றும் டயர் காற்றழுத்தக் கண்காணிப்பு அமைப்பு ஆகியவையும் இடம்பெற்றுள்ளன.
விலை மற்றும் சிறப்பம்சங்கள்
மினி கூப்பர் ஆக்ஸ்போர்டு எடிஷன் இந்தியாவில் ரூ.55.50 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தக் கார் முழுமையாக வெளிநாட்டில் தயாரிக்கப்பட்டு இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படும் (CBU) முறையில் விற்பனை செய்யப்படுகிறது. குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே கிடைக்கும் இந்தக் காருக்கான முன்பதிவு அங்கீகரிக்கப்பட்ட மினி விற்பனையகங்களில் நடைபெறுகிறது.
இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்ஃபோர்டு தொழிற்சாலையில் நவீன கால மினி கார்கள் தயாரிக்கத் தொடங்கி 25 ஆண்டுகள் நிறைவடைவதைக் கொண்டாடும் வகையில் இந்த சிறப்புப் பதிப்பு மாடல் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. 1959-ம் ஆண்டு முதல் மினி கார்கள் தயாரிக்கப்பட்டு வந்த இந்தத் தொழிற்சாலையில், 2001-ம் ஆண்டு முதல் பிஎம்டபிள்யூ குழுமத்தின் கீழ் வந்த பிறகு நவீனப்படுத்தப்பட்டு மினி கார் தயாரிப்பு நடைபெற்று வருகிறது.


Click it and Unblock the Notifications


