நவராத்திரி பண்டிகை காலத்தில் கார் விற்பனை 22% சரிவு... காரணம் என்ன?
இந்தியாவில் பண்டிகைக் காலம் என்றாலே கார் மற்றும் இருசக்கர வாகன விற்பனை அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பு இருக்கும். குறிப்பாக, நவராத்திரி முதல் தீபாவளி வரையிலான காலகட்டத்தில் புதிய வாகனங்களை வாங்க பலரும் ஆர்வம் காட்டுவார்கள். ஆனால், இந்த ஆண்டு நவராத்திரி பண்டிகையின்போது கார் விற்பனைப் பிரிவில் எதிர்பாராத சரிவு ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில் மின்சார வாகனங்களின் விற்பனை கணிசமாக அதிகரித்துள்ளது.
இந்திய ஆட்டோமொபைல் டீலர்கள் கூட்டமைப்பு (FADA) வெளியிட்டுள்ள வாகனப் பதிவுத் தரவுகளின்படி, கடந்த 11ந் தேதி முதல் 20ம் தேதி வரையிலான நவராத்திரி காலத்தில், பயணிகள் வாகனங்களின் பதிவுகள் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 21.91% சரிந்துள்ளன. ஒட்டுமொத்த வாகனப் பதிவுகளும் 6.52% குறைந்துள்ளன. இருப்பினும், இந்தச் சரிவை மட்டும் வைத்து இந்திய வாகனச் சந்தையில் தேவை குறைந்துவிட்டதாக முடிவெடுக்க முடியாது. கடந்த ஆண்டின் விற்பனை நிலவரத்தையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டியுள்ளது.

நவராத்திரி காலத்தில் இந்தியாவில் மொத்தம் 11,23,086 வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு இதே பண்டிகைக் காலத்தில் 12,01,479 வாகனங்கள் பதிவு செய்யப்பட்டிருந்தன. இதன் மூலம் இந்த ஆண்டு சுமார் 78,000 வாகனங்கள் குறைவாகப் பதிவாகியுள்ளன. கார் விற்பனைப் பிரிவில் இந்தச் சரிவு அதிகமாக உள்ளது.
கடந்த ஆண்டு நவராத்திரி காலத்தில் 2,34,004 கார்கள் பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில், இந்த ஆண்டு அந்த எண்ணிக்கை 1,82,728 என்ற அளவில் குறைந்துள்ளது. அதாவது, இந்த ஆண்டு நவராத்தி காலத்தில் 51,276 கார்கள் குறைவாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும், கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 21.91% சரிவு ஏற்பட்டுள்ளது.
இருசக்கர வாகனப் பதிவுகளும் 2.79% குறைந்து 8,34,075 ஆக உள்ளன. மூன்று சக்கர வாகனப் பதிவுகள் 7.51% சரிந்து 45,735 ஆகப் பதிவாகியுள்ளன. கட்டுமானப் பணிகளுக்குப் பயன்படுத்தப்படும் பெரிய கனரக வாகனங்களின் பதிவுகளும் 1.97% குறைந்துள்ளன. மறுபுறம், வர்த்தக வாகனப் பதிவுகள் 1.12% அதிகரித்து 35,618 ஆகவும், டிராக்டர் பதிவுகள் 0.89% உயர்ந்து 22,690 ஆகவும் பதிவாகி உள்ளது.
கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு விற்பனை குறைந்திருப்பதற்கு முக்கியக் காரணம், 2025ஆம் ஆண்டில் ஏற்பட்ட அசாதாரணமான விற்பனை உயர்வு என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு நவராத்திரி காலத்தின் முதல் நாளிலேயே ஜிஎஸ்டி 2.0 வரி குறைப்புகள் அமலுக்கு வந்தன. இதனால் பல வாகனங்களின் விலை குறைந்ததுடன், ஏற்கெனவே வாகனம் வாங்கத் திட்டமிட்டிருந்த பலரும் உடனடியாக முன்பதிவு செய்து வாங்கினர்.
மேலும், கடந்த ஆண்டு நவராத்திரி பண்டிகைக் காலம் 11 நாட்கள் நீடித்தது. ஆனால், இந்த ஆண்டு 10 நாட்கள் மட்டுமே இருந்தது. எனவே, இரண்டு ஆண்டுகளின் விற்பனை எண்ணிக்கைகளை நேரடியாக ஒப்பிடும்போது இந்த வேறுபாட்டையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று FADA தலைவர் சாய் கிரிதர் தெரிவித்துள்ளார்.
EV புதிய சாதனை
பெட்ரோல், டீசல் வாகனங்களின் விற்பனை நிலவரம் ஒருபுறம் இருக்க, மின்சார வாகனங்களின் விற்பனை சிறப்பான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. நவராத்திரி காலத்தில் அனைத்து வகையான மின்சார வாகனங்களையும் சேர்த்து மொத்தம் 1,17,437 வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு இதே காலத்தில் 92,628 மின்சார வாகனங்கள் விற்பனையாகியிருந்தன. இதன்படி, மின்சார வாகனங்களின் விற்பனை 26.78% அதிகரித்துள்ளது.
இந்தப் புள்ளிவிவரங்களின்படி, மின்சார இருசக்கர வாகனங்கள் அதிக எண்ணிக்கையில் விற்பனையாகியுள்ளன. அதே நேரத்தில், மின்சார கார் விற்பனையும் 25.97% வளர்ந்துள்ளது. மொத்த பண்டிகைக் கால வாகன விற்பனையில் மின்சார வாகனங்களின் பங்கு கடந்த ஆண்டு 7.7% ஆக இருந்த நிலையில், இந்த ஆண்டு சுமார் 10.5% ஆக உயர்ந்துள்ளது.
வரும் தீபாவளி பண்டிகையின்போது கார் விற்பனை மீண்டும் அதிகரிக்கும் என்று முன்னணி நிறுவனங்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளன. குறிப்பாக, நாட்டின் பல பகுதிகளில் தந்திராஸ் பண்டிகை நாளில் அதிக அளவில் மக்கள் வாகனங்களை முன்பதிவு செய்து டெலிவிரி எடுப்பார்கள் என்பதால் நிச்சயமாக இந்த ஆண்டு விற்பனையில் தீபாவளி பண்டிகையையொட்டி முகூர்த்த நாட்கள் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications


